25 கோன்களுக்கு இடையில் வேவ் போர்டில் சறுக்கியபடி பந்துகளைச் சுழற்றிச் சாதனை படைத்த மாணவர்

By த.சத்தியசீலன்

கோவை கணுவாயில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் எம்.சந்தோஷ் (14). இவர் 25 கோன்களுக்கு இடையில் வேவ் போர்டில் சறுக்கியபடி, 1 நிமிடத்தில் 3 பந்துகளைச் சுழற்றி (ஜக்லிங்) 150 முறை பிடித்து, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து மாணவர் எம்.சந்தோஷ் கூறியதாவது:

''கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 10 மாதங்களாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளிக்குச் செல்லவில்லை. பாடங்களையும் படிக்க முடியவில்லை. இந்நிலையில் என்னுடைய அப்பா மகேந்திரன், 3 பந்துகளை இரு கைகளில் மாற்றி, மாற்றிப் பிடித்து, ஜக்லிங் செய்வார். எனக்கு இது மிகவும் பிடித்துப் போனது. அதை எனக்கும் கற்றுத் தருமாறு கேட்கவே, அப்பா எனக்குப் பயிற்சி அளித்தார்.

சுமார் 4 மாதங்களில் 3 பந்துகளை இரு கைகளில் மாற்றி மாற்றி, கீழே விழாமல் பிடிக்கக் கற்றுக் கொண்டேன். இதையடுத்து இரு சக்கரங்கள் கொண்ட வேவ் போர்டில் நின்று கொண்டு, 3 பந்துகளையும் பிடித்துக் கொண்டே, கோன்களுக்கு இடையில் சறுக்கிச் செல்லப் பயிற்சி எடுத்தேன்.

வேவ் போர்டில் சறுக்கியவாறு பந்துகளை ஜக்லிங் செய்யும் சந்தோஷ்.

இதன் தொடர்ச்சியாக, 25 கோன்களுக்கு இடையில் வேவ் போர்டில் சறுக்கியபடி, 1 நிமிடத்தில் 3 பந்துகளை ஜக்லிங் செய்து 150 முறை பிடித்தேன். இந்த சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

4 பந்துகளை ஜக்லிங் செய்து பிடித்தவாறே, வேவ் போர்டில் சறுக்கிக் கொண்டு செல்வதற்குப் பயிற்சி எடுத்து வருகிறேன். இது கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு மாணவர் எம்.சந்தோஷ் கூறினார். பேட்டியின் அவரது தந்தையும், பயிற்றுநருமான மகேந்திரன் உடன் இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE