பள்ளிகள் திறப்பு: செய்யக்கூடியவை... கூடாதவை- அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பரவலால் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நோய்த்தொற்று பரவல் சற்று தணிந்துள்ளதை அடுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று முதல் (19-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி வளாகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதனுடன் மருத்துவ நிபுணர்களும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதன்விவரம்:

தலைமையாசிரியர் / ஆசிரியர்கள்

செய்யக்கூடியவை

ஒரு வகுப்பறையில் அதிகபட்சம் 25 மாணவர்கள் மட்டுமே அமர ஏற்பாடு செய்ய வேண்டும்.

தனிநபர் இடைவெளியை பின்பற்ற இடமிருப்பின் கூடுதலாக இருக்கைகள் அமைத்து மாணவர்களை அமரவைக்கலாம்.

வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

வகுப்பறையில் ஜன்னல்களை முழுமையாக திறந்து வைத்து காற்றோட்டமான சூழலை பேண வேண்டும்.

தேவைப்படும் பட்சத்தில் மரத்துக்கு அடியில் அமர்ந்து காற்றோட்டமான முறையில் வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம்.

பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து விதமான ஆசிரியர்களும் பணிக்கு வர வேண்டும்.

10, 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தவிர மற்றவர்கள் வளாக கண்காணிப்பு பணிகளை மேற்பார்வையிட்டு பள்ளி சுமூகமாக இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கண்காணிப்புக் குழுவில் இடம்பெறுபவர்கள் பள்ளி வளாகத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி தெளித்தல் உட்பட தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை கண்காணிப்பது அவசியமாகும்.

கூடுதல் வகுப்பறைகள் பிரிக்கும்போது ஆசிரியர் பற்றாக்குறை இருப்பின் அருகே உள்ள பள்ளிகளில் உபரியாக உள்ளவர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இணைய வகுப்புகள் வழியாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வி பயிலவும் அனுமதி வழங்க வேண்டும்.

வீட்டிலிருந்து பயிலும் சூழல் உள்ள மாணவர்களின் கற்றல் விளைவுகளின் முன்னேற்றத்துக்கு தக்க முறையில் திட்டமிடவேண்டும்.

சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்ட துத்தநாக மற்றும் வைட்டமின் மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படலாம். காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை பள்ளி வேலை நேரமாகும்.

பள்ளி நேரம் முடிந்தபின் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க மாலை 4.15 மணிக்கு 10-ம் வகுப்பு மாணவர்களையும், 4.30 மணிக்கு 12-ம் வகுப்பு மாணவர்களையும் பிரித்து வெளியே அனுப்பலாம்.

கழிப்பிடங்கள், வகுப்பறைகள் என வளாகங்களில் தேவைப்படும் இடங்களில் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி, சோப்புகளை வைத்து கை கழுவும் வசதிகளை வைத்திருக்க வேண்டும்.

காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நுழைவுவாயிலில் வைத்து உடல் வெப்பநிலையை தினமும் பரிசோதனை செய்ய வேண்டும்.

அப்போது யாருக்கேனும் தொற்றின் அறிகுறிகள் அல்லது வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டால் சம்மந்தபட்ட மாணவர்களை தனிமைப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

பள்ளி வேலை நேரம் தொடங்கியதும் நுழைவாயிலை மூடிவிட வேண்டும்.

தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பள்ளியை 1 சதவீத சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் தெளித்து பள்ளி வளாகம், தளவாட பொருட்கள், இருக்கைகள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்களை சுத்தம்செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

கரோனா பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் தவறான நடைமுறைகள் அடங்கிய பதாகைகளை வளாகத்தில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.

அவசர காலங்களில் தொடர்பு கொள்ளக்கூடிய அரசின் உதவி மையங்கள், நடமாடும் மருத்துவக் குழுக்களின் எண்களை வளாகங்களல் முக்கிய இடங்களில் எழுதிவைக்க வேண்டும்.

மாணவர்களுக்கு முதல் 2 நாட்கள் உளவியல் மற்றும் மனநலன் சார்ந்த பயிற்சிகள் மட்டுமே தரவேண்டும்.

நீச்சல் குளத்தின் பயன்பாட்டுக்கு தடை விதித்து, அதை மூடிவிட வேண்டும்.

இடைவேளை நேரங்களில் மாணவர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.

தனிநபர் இடைவெளியை பின்பற்ற ஏதுவாக பள்ளிக்கு வந்து செல்ல இருவேறு நுழைவு பாதைகளை பயன்படுத்த வேண்டும்.

பள்ளிக்குள் மாணவர்கள் நுழையும் அல்லது வெளியேறும் நேரத்தில் ஒவ்வொரு வகுப்புகளுக்கு குறிப்பிட்ட பாதைகளை ஒதுக்கலாம்.

வெவ்வேறு வகுப்புகளுக்கு வெவ்வேறு இடைவேளை வழங்க வேண்டும்

மாணவர்கள் வெளியே செல்லும் போது வரிசையில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வட்டம் போன்ற குறியீடுகளை தரையில் வரைந்து வைக்க வேண்டும்.

உள்ளேயும் வெளியேயும் மாணவர்கள் வந்து போகும் நேரங்களை பிரித்து பிரித்து செயல்படுத்த வேண்டும்.

கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள மாணவர்களுக்கு இணையவழி கல்வியை தொடர்வதுடன், தொலைபேசி வாயிலாக பேசி ஊக்கமளிக்க வேண்டும்.

உரிய தகவலின்றி பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் நேரடியாக சென்று அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வர அறிவுறுத்த வேண்டும்.

பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி வளாகத்தில் அதிக அளவிலான குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும்.

அனைத்து கண்காணிப்பு பணிகளையும் மேற்பார்வையிட பள்ளிக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும்.

அவசரகால பராமரிப்புக்குழு, நடவடிக்கை குழு, சுகாதார ஆய்வுக்குழு ஆகியவை நியமிக்க வேண்டும்.

மாணவர்களின் மனநலன், உடல் நலன் தொடர்பாக உன்னிப்பாக கண்காணித்து அவர்களுக்கான உரிய ஆலோசனைகள் அவ்வப்போது வழங்க வேண்டும்.

வளாகத்தில் நுழையும்போது கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்த பின் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.

குப்பைத் தொட்டிகளை தினமும் சுத்தம் செய்து மூடிவைக்க வேண்டும்.

ஆய்வகங்களில் சிறு, சிறு குழுக்களாக பிரித்து செய்முறை சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு நபர் நோய்த்தொற்றுடன் காணப்பட்டால் வளாகம் முழுவதையும் கிருமிநீக்கம் செய்யவேண்டும்

வகுப்பறையில் குளிர்சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தேவைக்கேற்ப பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள், உடல் வெப்ப பரிசோதனை கருவிகள், கிருமிநாசினிகள் மற்றும் சோப்புகளை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.

கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

வகுப்புக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராக நியமித்து மேற்பார்வையிட அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி வளாகங்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நூலகங்களில் காற்றோட்டமான சூழலை ஏற்படுத்தி தருவதுடன், தனிநபர் இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகள் வைக்க வேண்டும்.

புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள கேலரிகளை கிருமி நாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.

செய்யக்கூடாதவை

நோய்த்தொற்று அல்லது கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரக்கூடாது.

அவசியமுள்ள காரணங்களின்றி விடுமுறைகள் எடுக்கக்கூடாது.

எக்காரணம் கொண்டும் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது.

காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது.

இறைவணக்கக் கூட்டம், விளையாட்டுப் பயிற்சி ஆகிய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.

நுழைவு வாயில் மூடப்பட்ட பின் மாணவர்கள் பள்ளி முடியும் வரை வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.

பாடங்களை விரைவாக நடத்தவோ, தேர்வு குறித்த அச்சத்தையோ மாணவர்களிடம் ஏற்படுத்தக் கூடாது.

பள்ளி தூய்மைப் பணிகள் மற்றும் இதர நிர்வாகப் வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது.

வளாகத்தில் மாணவர்கள் வெளியே சுற்றி திரிய அனுமதிக்கக்கூடாது.

கலாச்சார நிகழ்வுகளுக்கும் அனுமதி தரக்கூடாது.

இடைவேளை, மதிய உணவு நேரங்களுக்கு மாணவர்களை ஒருபோதும் மொத்தமாக அனுப்பக்கூடாது.

பள்ளி வளாகங்களில் பார்வையாளர்கள் நுழைய அனுமதித்தல் கூடாது.

ஆசிரியர்கள் மூடப்பட்ட வகுப்பறைக்குள் பாடம் நடத்தக்கூடாது.

அனைத்துவித ஆய்வகங்களிலும் ஒரு மாணவர் பயன்படுத்திய உபகரணங்களை சுத்தம் செய்யாமல் அடுத்தவர்களுக்கு வழங்கக்கூடாது.

பள்ளி வளாகம் மற்றும் விடுதியில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்களை வீடுகளுக்கு அனுப்பக்கூடாது.

பள்ளி வளாகம் மற்றும் நுழைவு வாயில் பகுதியில் வெளி விற்பனையாளர்கள் உணவுப் பொருட்களை விற்க அனுமதிக்கக்கூடாது.

வளாகத்தில் தேவையற்ற இடங்களில் குப்பைகளை போடக்கூடாது.

என்சிசி, என்எஸ்எஸ் உட்பட இதர கல்விசாரா நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

பயன்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாமல் வைத்திருக்கக்கூடாது.

மாணவர்கள் மின்தூக்கியில் (லிப்ட்) செல்ல அனுமதி தரக்கூடாது.

ஆசிரியர்கள், பணியாளர்கள் உரிய காரணமின்றி பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது.

வயதான, கர்ப்பிணி மற்றும் இதர நோய்க்கான சிகிச்சை பெற்று வரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுடன் நேரடி தொடர்புடைய எந்தொரு பணிக்கும் ஈடுபடுத்தக்கூடாது.

மாணவர்கள்

செய்யக்கூடியவை

பள்ளி வருகைக்கான ஒப்புதல் படிவத்தில் மாணவர்கள் பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

வீட்டிலிருந்து குடிநீர் மற்றும் சாப்பாடு கண்டிப்பாக எடுத்துவர வேண்டும்.

பள்ளி வளாகத்தில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு கைகளை சரியாக கழுவ வேண்டும்.

பேருந்து பயன்பாட்டை குறைத்துக் சைக்கிளில் பள்ளிக்கு வர முக்கியத்துவம் தரவேண்டும்.

குடும்பத்தில் யாருக்கேனும் கரோனா பாதிப்பு அல்லது தொற்று அறிகுறி இருப்பின் பள்ளிக்கு வருவதை தவிர்த்து, உரிய மருத்துவ உதவியை நாட வேண்டும்.

மாணவர்கள் பஸ்பாஸ் பதிலாக ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி பேருந்தில் இலவசமாக பயணித்து கொள்ளலாம்.

குப்பைகளை அதற்குரிய தொட்டிகளில் மட்டுமே பிரித்து போட வேண்டும்.

உணவுக்கு முன்னும், பின்னும் சோப்புகளால் நன்கு கைகழுவ வேண்டும்.

தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மட்டுமே அமர வேண்டும்.

பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உரிய காலஅவகாசம் வழங்கி பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பதால் வீணாக மாணவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

செய்யக்கூடாதவை

கண், காது, மூக்கு, வாய்ப்பகுதிகளை அடிக்கடி தொடுதல்கூடாது

உணவுப்பொருட்கள், பேனா, பென்சில் உட்பட எதையும் மற்றவர்களுடன் பகிரக்கூடாது.

கூட்டம் கூடுவதை தவிர்ப்பதுடன் பிறரை தொட்டு பேசதலுக்கும் இடம்தரக்கூடாது.

பள்ளி வளாகங்களில் சுற்றுச்சுவர்கள், நுழைவு வாயில் கேட்டுகள், வகுப்பறை கதவுகள் உட்பட பகுதிகளை தேவையின்றி தொடுதல் கூடாது.

கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லது தொற்று பாதிப்புள்ள வீடுகளுக்கு செல்லக்கூடாது.

பள்ளி வளாகங்களில் கை கழுவும் பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் மாணவர்கள் எச்சில் துப்புதல் கூடாது.

முகக்கவசம் உட்பட கழிவுப் பொருட்களை பொதுவெளியில் எறிதல் கூடாது

மாணவர்கள் தூய்மையற்ற முகக்கவசங்களை அணிதல் கூடாது.

கழிப்பறைக்கு சென்று திரும்பும் வரை தேவையற்ற பகுதிகளை தொடக்கூடாது.

முகக்கவசங்களின் முன்பகுதியை அடிக்கடி தொடுதல் கூடாது.

இணை நோயுறு நிலைமைகளை கொண்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உரிய அனுமதி இல்லாமல் பள்ளிக்கு வரக்கூடாது.

பெற்றோர்கள்

செய்யக்கூடியவை

வீடுகளில் தனிமனித ஆரோக்கியம், சுகாதாரத்தை பேண வேண்டும்.

ஊட்டசத்து மற்றும் நோய் எதிர்ப்பு திறன் நிறைந்த உணவுகளை அன்றாடம் சேர்த்து கொள்ள வேண்டும்.

கரோனா அச்சத்தை விலக்கி பாதுகாப்பு அம்சங்க ளை குழந்தைகளிடம் எடுத்துரைப்பது அவசியம்.

குடும்பத்தில் யாருக்கேனும் தொற்று அறிகுறி இருப்பின் உடனடியாக அவரை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும்.

பள்ளி சென்றுதிரும்பும் குழந்தைகளை வீட்டுக்குள் நுழையும்முன் சோப்புகளை கொண்டு சுத்தமாக கை, கால்களை கழுவ அறிவுறுத்த வேண்டும்.

அதன்பின் அன்றைய தினம் பயன்படுத்திய சீருடை மற்றும் முகக்கவசம் உட்பட பொருட்களை உரிய முறையில் தூய்மைப்படுத்த வேண்டும்.

காய்கறி சந்தை, பூங்காங்கள், திரையரங்குகள் உட்பட கூட்டம் நிறைந்த பொதுப்பகுதிகளுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.

மாணவர்கள் கல்வி பயில தேவையான சூழலை வீடுகளில் ஏற்படுத்தி தரவேண்டும்.

கர்ப்பிணிகள், வயதானவர்கள் இருப்பின் குழந்தைகளுடன் நேரடி தொடர்பை தவிர்ப்பது நலம்.

பிள்ளைகள் பயன்படுத்தும் அறைகளை அடிக்கடி கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.

செய்யக்கூடாதவை

குடும்பத்தினுள் ஒரு நபர் உபயோகித்த முகக் கவசங்களை பிறர் பயன்படுத்தக்கூடாது.

அவசியமின்றி குழந்தைகள் வெளியே செல்லவோ, சுகாதாரமற்ற உணவகங்களில் சாப்பிடுவோ பிள்ளைகளை அனுமதிக்கக்கூடாது.

பொதுத்தேர்வுக்கு தயார்செய்யும் நோக்கத்தில் குழந்தைகளை உளவியல்ரீதியாக அச்சுறுத்தக்கூடாது.

பிள்ளைகளுக்கு தொற்று அறிகுறி இருப்பின் பள்ளிக்கு அனுப்பக்கூடாது.

விடுதி காப்பாளர்கள்

செய்யக்கூடியவை

விடுதிகளில் தங்கும் மாணவர்கள் இடையே தற்காலிக தடுப்புகள் அமைக்க வேண்டும்.

கரோனா தொற்று அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே விடுதியில் தங்கள் அனுமதிக்க வேண்டும்.

குப்பைகளை அதற்குரிய தொட்டிகளில் மட்டுமே பிரித்து போட வேண்டும்.

சத்தான உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும்.

சமையலறை கூடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதை அலுவலக அதிகாரிகள் வாரத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.

பொதுப்போக்குவரத்து பயன்படுத்தி மாணவர்கள் விடுதிகளுக்கு வருவதால் முதல் 2 நாட்கள் அவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மற்றவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்துவிட வேண்டும்.

விடுதியில் தங்கும் அனைத்து மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

உணவு அருந்தும் இடம் உட்பட விடுதிகளின் முக்கிய இடங்களில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற முக்கிய குறியீடுகளை எழுதிவைக்க வேண்டும்.

படுக்கை அறைகள், குளிக்கும் இடம், கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்து பராமரிக்கப்பட வேண்டும்.

விடுதி வளாகத்தில் அதிகளவு குப்பைத் தொட்டிகளை வைத்திருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு மனநலன் ஆலோசனைகள் வழங்க உளவியல் ஆலோசகர் அல்லது ஆசிரியர் முறையாக வருவதை உறுதிசெய்ய வேண்டும்.

தனிநபர் இடைவெளியை பின்பற்ற விடுதியில் போதுமான இடவசதி இல்லாவிட்டால் மாற்று இடங்களை ஏற்பாடு செய்துதர வேண்டும்.

செய்யக்கூடாதவை

உடல்நலன் பரிசோதனை செய்யப்பட்ட அத்தியாவசிய ஊழியர்கள் தவிர்த்து மற்றவர்கள் விடுதியில் தங்க அனுமதிக்கக்கூடாது.

விடுதியில் தேவையற்ற இடங்களில் குப்பை போடக்கூடாது.

சமையலர்கள் கையுறை, முகக்கவசம் அணியாமல் சமைக்கவும் உணவு பரிமாறவும் அனுமதிக்கக்கூடாது.

கரோனா பரவல் சார்ந்த நடவடிக்கைகளை முன்வைத்து கூடுதல் கட்டணங்களை மாணவர்களிடம் வசூல் செய்யக்கூடாது.

பொதுவானவை

ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்களின் உடல் நலனை ஆய்வு செய்து சுகாதார விவரக்குறிப்பு தயாரிக்க வேண்டும். இந்த சோதனைகளை பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் முடித்துவிட வேண்டும்.

கணினிகள், மேஜைகள், நாற்காலிகள் மற்றும் கற்பித்தல் துணைக் கருவிகளை அடிக்கடி சுத்தம் செய்தல் வேண்டும்.

சோப்பு போட்டு 40 வினாடிகள் வரை கைகழுவுவதை உறுதிசெய்ய வேண்டும்.

இருமல் தும்மல் வரும்போது கைக்குட்டை அல்லது முழங்கையால் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதியில்லை.

நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்படும்.

பொதுபோக்குவரத்துக்கு பதிலாக சொந்த வாகனங்களில் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்க வேண்டும்

ஒன்றிய அளவில் தேவைக்கேற்ப நடமாடும் மருத்துவ குழுக்களை சுகாதாரத்துறை ஏற்படுத்த வேண்டும்.

உடல் வெப்பநிலை 97 சதவீதத்துக்கு மேல் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை பள்ளி வளாகத்தில் அனுமதிக்கக்கூடாது.

தவிர்க்க முடியாத சூழலில் குளிர்சாதனம் பயன்படுத்தினால் வெப்பநிலை அமைப்பு 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரம்பிலும், ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதம் வரையும் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

வளாகங்கள் மற்றும் விடுதிகளில் அடிக்கடி தொடக்கூடிய பகுதிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

துண்டு பிரசுரங்கள், முக்கிய இடங்கள் பதாகைகள் வைத்தல், ஒலிபெருக்கிகள் மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வு அம்சங்களை பெற்றோர்கள் மத்தியில் சுகாதாரத்துறை ஏற்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகள் எழுத்துப்பூர்வ இசைவை தந்த பின் தங்கள் பள்ளிகளை திறந்து கொள்ளலாம்.

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தூய்மைப் பணிகளுக்கு உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்தகைய கரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றி பாதுகாப்புடன் கல்வி பயில்வதை அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்