பாரதியார் பெயரில் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருக்கை: துணைவேந்தர் பிச்சுமணி தகவல்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் என்று துணைவேந்தர் கா. பிச்சுமணி தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் பொதிகை தமிழ்ச் சங்கம் சார்பில் பாரதியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா தலைமை வகித்தார்.

பொதிகைத் தமிழ் அறக்கட்டளை வெளியீடான "சொல் பாரதி சொல் " என்ற கவிதை தொகுப்பு நூலை துணைவேந்தர் பிச்சுமணி வெளியிட, முதல் பிரதியை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேசியதாவது:

பாரதியின் முன்னோர் திருநெல்வேலி சீவலப்பேரியில் வாழ்ந்தவர்கள். அவர் திருமணம் செய்தது கடையத்தில் வாழ்ந்த செல்லம்மா பாரதியைத்தான். காலம் கடந்து பாரதி கண்ட பல கனவுகள் இன்று நிறைவேறி வருகின்றன. பாரதி பெயரில் எட்டயபுரத்தில் நம் பல்கலைக்கழகம் நூலகம் நடத்திக்கொண்டிருக்கிறது.

பாரதி எழுதிய நூல்களையும் பாரதியைப் பற்றி வெளிவந்துள்ள நூல்களையும் ஆவணப்படுத்தும் நோக்கில் திட்டமுன்வரைவு பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவுக்கு அனுப்பியுள்ளோம். பாரதி படைப்புகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்வதற்காக பாரதி பெயரில் இருக்கை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருதாளர் பாவரசு பாரதிசுகுமாரன் தொடக்கவுரையாற்றினார்.

எழுத்தாளர் நாறும்பூநாதன், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ் துறைத்தலைவர் சௌந்தரமகாதேவன், எழுத்தாளர் நவீனா, வழக்கறிஞர் பிரபாகர், திருக்குறள் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கல்லூரி மாணவ மாணவிகள்,பொதுமக்களின் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க செயலாளர் விஜயா கிப்ட்சன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE