ஜம்மு காஷ்மீர் கல்வி, கட்டமைப்பில் மத்திய அரசு அதிக முதலீடு செய்கிறது: அனுராக் தாக்கூர் பெருமிதம்  

By பிடிஐ

ஜம்மு காஷ்மீரில் கல்வி மற்றும் கட்டமைப்புத் துறைகளில் மத்திய அரசு அதிக முதலீடு செய்து வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜோரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக சார்பில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:

''இங்குள்ள குப்கர் கூட்டணிக் கட்சிகள் உயர் கல்வி நிறுவனங்கள், அவற்றின் கட்டமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சியைப் புறக்கணித்து விட்டன. மோடி அரசாங்கம் பொருளாதார வளர்ச்சிப் படிகளில் ஜம்மு காஷ்மீரை அழைத்துச் செல்கிறது. நாங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை மட்டும் உறுதி செய்யவில்லை. ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தையும் ஒருங்கிணைத்துள்ளோம்.

இனி விரைவிலேயே ஜம்மு காஷ்மீர், கல்வியின் மையமாகத் திகழும். ஐஐடி, ஐஐஎம், ஐஐஎம்சி, எய்ம்ஸ் ஆகியவை இளைஞர்களுக்கான கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும். எய்ம்ஸ், கேன்சர் மையங்களுடன் உதம்பூரில் இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் அமைக்கப்படும்.

இந்தியாவின் பிற பகுதி இளைஞர்களோடு காஷ்மீர் இளைஞர்கள் போட்டி போட்டுத் தங்களின் இலக்கை அடைய வேண்டும். மத்திய அரசு கல்விக்கான கட்டமைப்பையும் முதலீட்டையும் காஷ்மீரில் அதிகரித்து வருகிறது. ஏனெனில் நாங்கள் மாணவர்களின் வருங்காலத்துக்காக முதலீடு செய்வதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் மூலம், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்''.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE