முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு: விண்ணப்பங்கள் வரவேற்பு

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்றும் பணியில் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவக் கவுன்சில் குழு அதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள், தன்னார்வர்லர்கள் / உள்ளூர் நகர அமைப்பு ஊழியர்கள் / ஒப்பந்தப் பணியாளர்கள் / தினசரி ஊதியம் பெறும் பணியாளர்கள் / தற்காலிகப் பணியாளர்கள் / மாநில / மத்திய மருத்துவமனைகளின் அவுட்சோர்ஸ் ஊழியர்கள் / மத்திய / மாநில / யூனியன் பிரதேசங்களின் தன்னாட்சி மருத்துவமனைப் பணியாளர்கள் / எய்ம்ஸ் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன ஊழியர்கள் / மத்திய அமைச்சகங்களின் மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள், கோவிட்-19 தொடர்பான பொறுப்புமிக்க பணிகளில் ஈடுபட்ட அனைவரும் முன்களப் பணியாளர்கள் ஆவர்.

இதற்கிடையே கரோனா பணியில் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் / பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர உள் ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய அரசின் சுகாதாரச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்களப் பணியாளர்களின் வாரிசு வகைக்கான தகுதியை உறுதி செய்து மாநில / யூனியன் பிரதேச அரசுகள் சான்றளிக்கும்.

நீட் தேர்வில் பெறப்பட்ட தரவரிசை அடிப்படையில் மாணவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவக் கவுன்சில் குழு விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கும். மத்திய ஒதுக்கீட்டிலிருந்து எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படும்.

* லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, டெல்லி,
*எம்.ஜி.எம்.எஸ்., வார்தா, மகாராஷ்டிரா
*என்.எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரி, ஜபல்பூர், மத்தியப் பிரதேசம்
*ஜே.எல்.என் மருத்துவக் கல்லூரி, அஜ்மீர், ராஜஸ்தான்
*ஹல்த்வானி அரசு மருத்துவக் கல்லூரி, உத்தராகண்ட்

ஆகிய கல்லூரிகளில் தலா ஒரு மருத்துவ இடம் முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE