ஜிப்மரில் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை நுழைவுத் தேர்வு

By செய்திப்பிரிவு

ஜிப்மரில் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை (டிச.6) நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிநிறுவனத்தில் (ஜிப்மர்) எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎச்டி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன.

இந்த நிலையில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வானது இக்கல்வியாண்டில் நீட் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட்டது. தற்போது டி.எம், எம்.சி.எச். ஆகிய முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை (டிச.6) நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இங்குள்ள 52 இடங்களுக்கு நாடு முழுவதும் 2,286 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கான நுழைவுத் தேர்வு இணைய வழியில் நடைபெறவுள்ளது. நாளை (டிச.6) காலை 9 மணி முதல் 10.30 மணி வரை தேர்வு நடைபெறும். புதுச்சேரி உட்பட மொத்தம் 10 நகரங்களில் 14 மையங்களில், கரோனா கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடைபெற உள்ளது.

நுழைவுத் தேர்வு முடிவுகள் டிச.11 ஆம் தேதி ஜிப்மர் இணையதளத்தில் வெளியாக உள்ளன.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மயக்க மருந்துத் தொழில்நுட்பம், இதய ஆய்வகத் தொழில்நுட்பம், டயாலிசிஸ், ரத்த வங்கியில் எம்.எல்.டி, மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம், கதிரியக்க சிகிச்சைத் தொழில்நுட்பம் என 11 படிப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE