கரோனா பரவலால் நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் டிச. 31 வரை நீட்டிப்பு: பாடம் நடத்துவது பாதிக்கக் கூடாது என ஏஐசிடிஇ அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் டிச.31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது

கரோனா தொற்றால் நாடுமுழுவதும் கல்லூரிகள் திறப்பில்தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடப்பு கல்வி ஆண்டுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணை, வழிகாட்டுதல்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) கடந்த அக்டோபரில் வெளியிட்டது. அதில் மாணவர் சேர்க்கையை நவ.30-ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தியிருந்தது.

அதேநேரம் பல்வேறு மாநிலங்களில் சேர்க்கையை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 8-வது முறையாக கல்வி ஆண்டு அட்டவணையில் திருத்தங்கள் செய்து மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை ஏஐசிடிஇ நீட்டித்துள்ளது.

இதுகுறித்து ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்ட அறிவிப்பு: கரோனா பாதிப்பு மற்றும் பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (செட்) முடிவுகள் வெளியீடு தாமதம் காரணமாக மாணவர்சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதையடுத்து கலந்தாய்வை முழுமையாக நடத்தி முடிக்காத மாநிலங்கள் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை டிச. 31-ம் தேதி வரை மேற்கொள்ளலாம். அதேநேரம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE