அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு அருகிப் போய்விடுமோ என்னும் அச்சத்தை ஒருவழியாகப் போக்கிவிட்டது தமிழக அரசு. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ரம்யாவும், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பிஸ்டிஸும் மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்து வைக்கப்போவதே அதற்குச் சாட்சி. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் ஊரே ஒன்றிணைந்து இந்த மாணவிகளின் மருத்துவக் கனவை நிறைவேற்ற முன்வந்திருப்பதுதான் முத்தாய்ப்பான விஷயம்.
இந்த வருடம் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில், காரமடை ஒன்றியம் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ரம்யா கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தேர்வாகியிருக்கிறார். இதே பள்ளியில் படித்த பிஸ்டிஸ், பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தேர்வாகியுள்ளார். இந்த மாணவிகளையும், இவர்களுக்குக் கல்வி கற்பித்த பள்ளி ஆசிரியர்களையும் நேரில் சந்தித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தது கோவையைச் சேர்ந்த ‘சங்கமம்’ என்ற சமூக நல அமைப்பு. இதோ அவர்களுடன் ஒரு பயணம்.
வெள்ளியங்காடு மேல்நிலைப் பள்ளியை அரசுப் பள்ளிக்கூடம் என்று சொன்னால் நம்ப முடியாது. கிளை பரப்பி நிற்கும் 50க்கும் மேற்பட்ட மரங்களுக்கு மத்தியில் குளுகுளு சூழலில் பள்ளி அமைந்திருக்கிறது. பள்ளியின் பராமரிப்பு, விளையாட்டு ஆசிரியரின் அர்ப்பணிப்பு என்பது விசாரித்த பின்பு தெரிந்தது. இரு மாணவிகளையும் சந்திக்க வேண்டும் என்று இப்பள்ளியின் தமிழாசிரியர் சொன்னதும், அவர்களின் வீடுகளுக்கே அழைத்துச் செல்லச் சம்மதித்தார் ஆசிரியர் ஒருவர்.
பயணத்தின்போது இரு மாணவிகளின் பெருமைகளை அந்த ஆசிரியர் சொல்லத் தொடங்கினார். ‘‘ரம்யா, பிஸ்டிஸ் இருவருமே படிப்பில் சுட்டி. எந்தப் பாடத்தையும் உள்வாங்கி, ஆழமா படிக்கும் திறன் உள்ளவங்க. ரம்யாவுக்கு நிச்சயம் மெடிக்கல் சீட் கிடைக்கும்னு அப்ளை பண்ண வச்சது, கவுன்சிலிங் போறப்ப நேட்டிவிட்டி சர்டிஃபிகேட் வாங்க முயற்சி எடுத்தது எல்லாமே நாங்கதான். கல்விச் செலவுகளைக்கூட இந்த ஊர்ப் பொதுமக்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், நாங்களும் எங்க சம்பளத்திலிருந்து ஷேர் பண்றதுன்னுதான் முடிவு செஞ்சிருந்தோம். இப்ப அரசாங்கமே தனியார் மருத்துவக் கல்லூரியில படிக்கிற அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டணம் செலுத்திவிடும் என்ற அறிவிப்பு வந்ததால அது அவசியமில்லாமப் போயிருச்சு. இருந்தாலும் வேற உதவிகள் செய்யலாம்னு இருக்கோம்” என்று அந்த ஆசிரியர் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
பள்ளியிலிருந்து 10 நிமிடப் பயணம். காரமடை- கீழ்குந்தா ரோட்டின் ஓரத்தில் இருந்த ஒரு ஓட்டு வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தச் சொன்னார் ஆசிரியர். “இதுதான் ரம்யா வீடு” என்று அவர் சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியாகிவிட்டனர். மின்சார வசதியில்லாத சிறிய ஓட்டு வீடு. அதையொட்டி ஒரு திண்ணை. சில மூங்கில் கூடைகள், குடங்கள். அதற்கு எதிரில் ஆடுகளை அடைக்கும் கூரை வேய்ந்த குடிசை. இதுதான் ரம்யாவின் வீடு!
ரம்யாவின் அப்பா கூலித் தொழிலாளி. இரண்டு தங்கைகள். ஒரு தங்கை 11-ம் வகுப்பும், இன்னொருவர் 8-ம் வகுப்பும் படிக்கிறார்கள். புகைப்படம் எடுக்கிறோம் என்றதும் இருப்பதிலேயே நல்ல சுடிதாரை அணிந்து வந்த ரம்யா, பேசவே கூச்சப்பட்டார். கஷ்டப்பட்டுப் பேச வைக்க வேண்டி வந்தது.
‘‘அறிவியல் பாடங்கள்ல எனக்கு நல்ல ஆர்வம் இருந்தது. ‘நீ மெடிக்கல் படிக்க வேண்டிய புள்ளை. ஃபர்ஸ்ட் குரூப்ல சேரு’ன்னு பயாலஜி மேடம்தான் சொன்னாங்க. அவங்களே கைடாக இருந்து எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப மருத்துவக் கல்லூரிக்குப் போற வரைக்கும் அவர்தான் எனக்கு எல்லாம்’’ எனச் சொல்லும்போதே ரம்யாவின் கண்களில் கண்ணீர் கோர்க்கிறது.
ரம்யாவின் தந்தை குன்னூர் பக்கம் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். தன் மகள் படிக்க வேண்டும் என்பதற்காகவே உறவுகள் மூலம் வெள்ளியங்காடு வந்து கூலி வேலை பார்க்கிறார். முறையான முகவரிகூட இல்லாத நிலையில் கவுன்சிலிங் போக இருப்பிடச் சான்றிதழ் இல்லாமல் சிரமப்பட்டுவிட்டார்களாம். அப்போது ஆசிரியர்களே காரில் அழைத்துச் சென்று அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி சான்றிதழை வாங்கித் தந்திருக்கிறார்கள்.
அடுத்தது மாணவி பிஸ்டிஸ் வீட்டுக்குச் சென்றோம். பேட்டியைத் தொடங்கியவுடன் படபடவென பதில் சொன்னார் பிஸ்டிஸ். இவரின் தந்தை டெய்லர். தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில வழியில் படித்தவர் பிஸ்டிஸ். அதற்குப் பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலும் ஆங்கில வழியில் படித்திருக்கிறார்.
திரும்பி வரும்போது சங்கமம் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான அன்பரசுவிடம் பேசினேன்.
‘‘7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இவர்களின் வாழ்க்கை மேம்படப் போகிறதுங்கிறது எங்கள் அளவில் மகிழ்ச்சி. ரெண்டு பேருமே தனியார் மருத்துக் கல்லூரியில் படிக்கப் போறாங்க. அரசாங்கமே கல்விக் கட்டணம் கட்டிடும் என்பதால் பிரச்சினையில்லை. ஆனால், பிஸ்டிஸ் பத்திக் கவலையில்லை. அவர் இங்கிலீஷ் மீடியத்தில் படிச்சவர். மருத்துவம் படிப்பதற்கான சூழல், ஓரளவு சரியா இருக்கு. ஆனால், ரம்யாவுக்கு நிறைய சவால்கள் இருக்கு. இவர் படிக்கப்போகும் மருத்துவக் கல்லூரி கோடீஸ்வர வீட்டுப் பிள்ளைகள் படிக்கறது. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசக்கூடியவர்கள் அவர்கள்.
இவரோ தமிழ் மீடியத்தில் படித்தவர். இப்படியான சூழலில் ரம்யாவோட படிப்பு நல்லபடியா தொடரணும். அதனால, மற்ற செலவுகளுக்கு இயன்ற அளவு நாங்க உதவ முடிவெடுத்திருக்கிறோம். தவிர வாரம் ஒரு முறை, மாதம் இரு முறை எங்கள் உறுப்பினர்களில் இருவர் கல்லூரியிலும் வீட்டிலும் சென்று ரம்யாவைப் பார்ப்பது... அவர் படிப்பதற்கு இடையூறாய் இருக்கும் விஷயங்களைக் கவனிச்சு அவர் மனதில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையைத் தகர்க்க, கவுன்சிலிங் கொடுத்து ஊக்கப்படுத்துவது, நம்பிக்கையூட்டுவது எனத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார் அன்பரசு.
நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் வெற்றியடைவது மட்டும் வெற்றியல்ல. மருத்துவக் கல்வியை முழுமையாகப் படித்து வெளியே வந்து மருத்துவராகச் சமூகத்தில் தலைநிமிரும் வரை அவர்களுக்கு உறுதுணையாய் நிற்பதுதான் பேருதவி. அந்த வகையில் இந்த மாணவிகளுக்குத் துணை நிற்கும் அனைவரையும் வாழ்த்துவோம்!
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago