எங்கிருந்தாலும் நாடகப் பட்டப் படிப்புப் படிக்கலாம்!

By ம.சுசித்ரா

உயர்கல்வி மேற்கொள்வதற்கான அடிப்படை கல்வித் தகுதி இருந்தும் வேலைக்குச் செல்ல வேண்டி இருப்பது உள்ளிட்ட காரணங்களால் கல்லூரிக்குச் செல்ல முடியாமல் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உயர்கல்வியின் வாயிலைத் திறந்து வைத்திருப்பவை திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள்.

இதில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ளது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம். இங்குத் தொலைதூரப் படிப்புகளாக 38 இளநிலை பட்டப் படிப்புகள், 33 முதுநிலைப் பட்டப் படிப்புகள், 4 பட்டயப் படிப்புகள், 2 முதுநிலை பட்டயப் படிப்புகள், 14 தொழிற்துறை பட்டயப் படிப்புகள் மற்றும் ஒரு சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகின்றன.

இந்த படிப்புகளுள் பிபிஏ (BPA) எனப்படும் இளங்கலை நிகழ்த்துக் கலையியல் - நாடகம் மற்றும் அரங்கக் கலைப் பட்டப் படிப்பானது தமிழிலும் ஆங்கிலத்திலும் பயிற்றுவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற இந்த பட்டப் படிப்புக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. வழக்கமான உயர்கல்வி படிப்புகளுக்கு மத்தியில் தனித்துவம் வாய்ந்தது இளங்கலை நிகழ்த்துக் கலையியல் - நாடகம் மற்றும் அரங்கக் கலைப் பட்டப் படிப்பு. இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் நாடகம் மற்றும் அரங்கக் கலைத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் முனைவர் கார்த்திகேயனுடன் உரையாடினோம்.

தலைசிறந்த கலைஞர்களே பயிற்றுநர்கள்!

“நாடகம் குறித்த படிப்புகள், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், தமிழகத்தில் அழகப்பா பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இளநிலையில் இந்தப் படிப்பை கற்றுத் தரும் ஒரே இந்தியக் கல்வி நிறுவனம் என்ற பெருமைக்குரியது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம். நாடகம் மற்றும் அரங்கக் கலைத் துறை 2018-ல் இங்குத் தொடங்கப்பட்டது. 30 மாணவ, மாணவிகள் இங்குப் பயின்றுவருகிறார்கள். பிளஸ் 2-ல் தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பட்டப் படிப்பை மேற்கொள்ளலாம்.

நான்காண்டு பட்டப் படிப்பான இதில் தமிழ் நாடக மரபு, இந்திய நாடக மரபு, மேற்கத்திய நாடக மரபு, அரங்க ஒலி மற்றும் ஒளி அமைப்பு, குரல் பண்பேற்ற பயிற்சி, ஒப்பனைப் பயிற்சி, நாடக முகமூடி வடிவமைப்பு உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக நடிப்பு, நாடக இயக்கம், தயாரிப்பு, நடனம் உள்ளிட்டவை சிறப்பாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் செயல்முறை வகுப்புகள் நடைபெறும். இந்த வகுப்புகளின்போது சிறந்த நாடகக் கலைஞர்கள், ஒப்பனை பயிற்றுநர்கள், ஒலி-ஒளி அமைப்பு நிபுணர்கள் நேரடியாக வகுப்பெடுத்து பயிற்சி அளிப்பார்கள்.

ச.முருகபூபதி, ஞான கோபி, ரெசின் ரோஸ் உள்ளிட்ட பல கலைஞர்கள் எங்களுடைய மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள் பிரமாண்டமான அரங்கம், சிறிய திரையரங்கம், பயிற்சி அரங்கம் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் நல்ல முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் குறைந்த செலவில் தங்க வழிகாட்டவும் செய்கிறோம். வார இறுதியில் நடத்தப்படும் வளாக வகுப்புகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் பிரத்தியேக 10நாள் பயிலரங்கம் நடத்தி வருகிறோம்.

ஒரு நாடகக் கலைஞர் குறித்த ஆவணப்படம் எடுத்து அல்லது அவரை நேர்காணல் செய்து நான்காவது ஆண்டில் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் தலைசிறந்த நாடகக் கலைஞர்கள் குறித்த வரலாற்று ஆவணத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். சிறுகதைகளை நாடகமாக்கும் கலையையும் கற்பிக்கிறோம்.

ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.3000/- மட்டுமே. இதுதவிர தேர்வு கட்டணம் வசூலிக்கப்படும். நாடகம் மற்றும் அரங்கக் கலை மட்டுமின்றி தமிழ் திரைத்துறை வரலாறு, தமிழ் தொலைக்காட்சி வரலாறு, தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் ஆகியவை கற்பிக்கப்படுகிறது. மொழிப்பாடங்களைத் தவிர தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது. இந்தப் பட்டப் படிப்பை முடித்தவர்கள் நாடகத் துறை, திரைத் துறை, ஊடகத் துறை ஆகியவற்றில் பிரகாசிக்கலாம். அது மட்டுமின்றி குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிவாய்ப்புக்கும் தகுதி பெறுகிறார்கள்.

வழக்கமான பாடங்களுக்கு இணையான முக்கியத்துவத்தைக் கலை வடிவங்களுக்கும் அளிக்கும்படி புதிய தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. ஆகையால் இந்தத் துறையில் பட்டம் பெறுபவர்களுக்கு நிச்சயம் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் 15-க்கும் மேற்பட்ட இளம் தெருக்கூத்து கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், திரைப்பட மற்றும் ஊடகக் கலைஞர்கள் என்று பலதரப்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்டோபர் 30 வரை ஆன்லைன் வழி சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கை மற்றும் தொடர்புக்கு: www.tnou.ac.in, 8838681851”.

இவ்வாறு கார்த்திகேயன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்