சாதிச் சான்றிதழ் இன்றித் தவிக்கும் பழங்குடியினக் குழந்தைகள்: அரசு நலத்திட்டங்களைப் பெற முடியாத அவலம்

By த.சத்தியசீலன்

பழங்குடியினக் குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் இல்லாததால், அவர்கள் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் மற்றும் பில்லூர் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள மலைக் கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலிகள்.

போதிய பொருளாதார வசதியின்றி, அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பழங்குடியினருக்குப் பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. அவற்றைப் பெற சாதிச் சான்றிதழ் இல்லாமல் இங்குள்ள பழங்குடியினர் பல ஆண்டுகளாகத் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்துப் பில்லூரைச் சேர்ந்த வெள்ளிங்கிரி, கோரப்பதியைச் சேர்ந்த ரங்கசாமி, சசிகலா, வனிதா ஆகியோர் கூறியதாவது:

''அரசின் நலத்திட்டங்களைப் பெற முக்கிய ஆவணமாகச் சாதிச் சான்றிதழ் கேட்கப்படுகிறது. இச்சான்றிதழ் இல்லாமல் பல ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகளை இழந்து வருகிறோம். இதேபோல் எங்கள் குழந்தைகளும் சான்றிதழ் இல்லாமல் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உதவித்தொகை கோரும் விண்ணப்பத்துடன் சாதிச் சான்றிதழ் நகலை இணைத்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட துறையால் ஏற்றுக் கொள்ளப்படும். இதுவரை எங்களுக்கு, எங்கள் பெற்றோருக்கு சாதிச் சான்றிதழ் தேவைப்படவில்லை. அதற்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்த அறியாமையும் ஒரு காரணமாகும். இன்று எங்கள் குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் கட்டாயம் தேவைப்படுகிறது.

பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை எங்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பல ஆண்டுகளாக எங்கள் குழந்தைகள் கல்வி உதவித்தொகையை இழந்து வருகின்றனர். எங்கள் குழந்தைகளுக்கு உடனடியாகச் சாதிச் சான்றிதழ் வழங்குவதுடன், இதுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய கல்வி உதவித்தொகையையும் பெற்றுத்தர, கோவை மாவட்ட நிர்வாகமும், பழங்குடியினர் நலத்துறையும் முன்வர வேண்டும்''.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்துத் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ்.பரமசிவம் கூறும்போது, ''கோவை மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் எவ்வளவு பேர் வசிக்கின்றனர் என்ற புள்ளிவிவரங்கள் அரசுப் பதிவேட்டில் துல்லியமாக உள்ளன. அவர்கள் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், விசாரணை என்ற பெயரில் கிடப்பில் போடப்படுகிறது. சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் அதிகாரிகள் கொடுத்துவிடுவார்கள் என்ற அறியாமையில் எங்கள் மக்கள் உள்ளனர். நகரப் பகுதியையொட்டி உள்ளவர்கள் அரசு அலுவலகங்களை நாடிப் பலமுறை அலைந்து சாதிச் சான்றிதழ் பெற்று விடுகின்றனர். ஆனால், மழைவாழ் மக்களுக்கோ அதற்கான நேரம் இல்லை. ஒருநாள் வேலையை விட்டு வந்தாலும் சம்பந்தப்பட்ட துறைகளில் ஒன்றும் நடப்பதில்லை. அலுத்துப் போகின்றனர்.

இதனால் அவர்களின் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். அதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். பழங்குடியின மக்கள் 80 சதவீதம் பேருக்கு நலவாரிய அட்டைகள் கிடையாது. ஏனெனில் சாதிச் சான்றிதழ் இருந்தால்தான் நலவாரிய அட்டைகளைப் பெறவோ, புதுப்பிக்கவோ முடியும். எனவே ஊராட்சிகள் அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தி, அவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்