தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
''அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2020-ம் ஆண்டிற்கான சேர்க்கை மேற்கொள்வதற்காக விண்ணப்பங்கள் http://www.skilltraining.gov.in/ என்ற இணையதளம் வாயிலாகப் பெறப்பட்டு வருகிறது.
விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி நாளாக 15.09.2020 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 17.09.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெற்ற மாவட்ட வாரியான கலந்தாய்வு இம்முறை தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு, மாநில அளவில் கல்லூரிகளில் நடைபெறுவதைப் போல இணைய வழியில் நடைபெற உள்ளது. கலந்தாய்வு தொடர்பான நிகழ்ச்சி நிரல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 18.09.2020 அன்று விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.
16.09.2020 முதல் விண்ணப்பதாரர்களின் தரவரிசைக்கேற்ப அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கலந்தாய்வுத் தேதி அலைபேசி குறுஞ்செய்தியில் அனுப்பப்படும். 18.09.2020 மற்றும் 19.09.2020 ஆகிய நாட்களில் முன்னுரிமை விண்ணப்பதாரர்களுக்கும், 23.09.2020, 24.09.2020 மற்றும் 25.09.2020 ஆகிய நாட்களில் பொது விண்ணப்பதாரர்களுக்கும் கலந்தாய்வு நடக்கவுள்ளது.
கலந்தாய்வு நடைபெறும் நாளில் http://www.skilltraining.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3 நாட்கள் அவகாசத்திற்குள் தங்கள் முன்னுரிமை வரிசைகளில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வுக்குப் பின் விண்ணப்பதாரர்களின் முன்னுரிமை மற்றும் விருப்பங்களுக்கேற்ப உறுதிசெய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம் / தொழிற்பிரிவுகளுக்குத் தற்காலிகச் சேர்க்கை ஆணை வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாகச் சேர்க்கைக் கட்டணம் பெறப்பட்டு, சேர்க்கை உறுதி செய்யப்படும்.
இது தொடர்பாகச் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 9499055612 ,9499055618 என்ற அலைபேசி எண்ணிலும், onlineitiadmission@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.