வீடுகளிலேயே கல்வி, வீடியோ பாடங்கள், சைகை மொழியில் கற்பித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வரும் கல்வித் தொலைக்காட்சி ஓராண்டை நிறைவு செய்ததை ஒட்டி, முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ஆம் நாள், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கற்றல்-கற்பித்தல் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். இதனைத் தொடர்ந்து, 2019-2020 ஆம் கல்வியாண்டின் இறுதிவரை அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் சார்ந்த பகுதிகள் குறைவான கால அளவில் வீடியோ பதிவுகளாக எடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.
இந்தச் சூழ்நிலையில், மனிதகுலம் இதுவரை சந்தித்திராத கோவிட்-19 என்னும் கொடும் தொற்றுநோய் உலகத்தையே முடக்கிப் போட்டதன் காரணமாக, புதிய கல்வி ஆண்டைத் தொடங்குவது என்பது மிகப் பெரும் சவாலாக இருந்தபோதிலும், இந்தச் சவாலை எதிர்கொண்டு, இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில், மாணவர்கள் தங்கள் கற்றலை தங்கள் இல்லங்களிலிருந்தே தங்குதடையின்றி பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சி மாற்றி அமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கான பாட அட்டவணைப் போன்று கல்வித் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அட்டவணை, வகுப்பு வாரியாக, பாட வாரியாக, வார நாட்களுக்குத் தயாரிக்கப்பட்டு இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் வீடியோ பாடப்பதிவுகள் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.
» நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு
» நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
இவ்வகையில் தயாரிக்கப்பட்ட அனைத்து வீடியோ பாடப் பகுதிகளிலும் க்யூஆர் கோடு விரைவுக்குறியீடு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இப்புதிய வடிவில் தயாரிக்கப்பட்ட பாடங்களை கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியை நான் 14.7.2020 அன்று தொடங்கி வைத்தேன். தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக 11 தனியார் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளிலும், ஏர்டெல் டிடிஹெச்சிலும் கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முதல் நாள் பார்க்கத் தவறியவர்கள், மறுநாள் முதல் கல்வித் தொலைக்காட்சியின் யூடியூப் பக்கம் வழியாகப் பாடங்கள் படித்துப் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அட்டவணை மற்றும் இதர தகவல்கள் கல்வித் தொலைக்காட்சியின் இணைய தளத்திலும் கிடைக்கிறது. 1 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பமாகும்.
பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கான பாடங்கள் தமிழ்நாடு அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினிகளில் 2939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஹைடெக் ஆய்வகங்கள் வாயிலாகப் பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காகத் திட்டமிடப்பட்ட 1498 வீடியோ பாடங்களில் முதற்கட்டமாக 414 வீடியோ பாடங்கள், 4,20,624 மாணவர்களின் மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது என்பதையும், மீதமுள்ள பாடங்கள் வரும் மாதங்களில் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டிலேயே முதன் முறையாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி வேலை நாட்களில் பாடங்கள் நடத்தப்படுவதைப் போன்று ஒளிபரப்பு அட்டவணை தயாரிக்கப்பட்டு, பாடவாரியாக, தலைப்பு வாரியாகப் பாடம் நடத்துவதும், 10-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மொழியில் பாடம் ஒளிபரப்புவதும் கல்வித் தொலைக்காட்சியின் தனிச் சிறப்பாகும்.
`கல்வித் தொலைக்காட்சி' இன்றுடன் முதலாம் ஆண்டினை பூர்த்தி செய்கிறது என்ற செய்தியும், இந்தத் தொலைக்காட்சி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்ற செய்தியும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியினை அளிக்கிறது.
ஓராண்டு நிறைவு செய்த கல்வித் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்தினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், அலுவலர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago