நாட்டின் புதிய, தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உயர் கல்வித்துறை செயலர் அமித் கரே அதன் முக்கிய அம்சங்களைத் தெரிவித்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்
பள்ளிக்கல்வியின் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல்
மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை, தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது. 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு, தேசிய திறந்தவெளிப் பள்ளி மற்றும் மாநில திறந்தவெளிப் பள்ளிகள் வாயிலாக கல்வி புகட்டுதல், 10 மற்றும் 12-ம் நிலைகளுக்கு இணையான இடைநிலைக் கல்வி பாடத் திட்டங்கள், தொழிற்கல்விப் பாடங்கள், முதியோர் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்கள் ஆகியவையும் இலக்கினை அடைவதற்கான யோசனைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் தேசிய கல்விக் கொள்கை 2020-இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முன் குழந்தைப்பருவ கவனிப்பு, புதிய பாடத்திட்டக் கல்வி மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு
தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும். இதுவரை பள்ளிக்கு வராத 3 – 6 வயது வரையிலானவர்கள் படிப்பதற்கு இந்தப் புதிய முறை உதவும். இக்கல்வி 3 ஆண்டு மழலையர் கல்வியுடன், 12 ஆண்டு பள்ளிக்கூடப் படிப்பைக் கொண்டதாக இருக்கும்.
» புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: மாலை 4 மணிக்கு முழு விவரம் வெளியாகிறது
8 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன் குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை என்சிஇஆர்டி உருவாக்கும். இந்த கல்வி முறையை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மற்றும் பழங்குடியினர் நலத்துறைகள் மூலம் கூட்டாக மேற்கொள்ளப்படும்.
தேசிய புத்தக மேம்பாட்டுக் கொள்கை ஒன்றும் வகுக்கப்பட வேண்டும்.
பள்ளிக்கூடங்களிலேயே 6-ம் வகுப்பு முதற்கொண்டே தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படுவதோடு, உள்ளுறை பயிற்சிமுறையைக் கொண்டதாகவும் இருககும்.
புதிய மற்றும் விரிவான பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு 2020-21 (National Curricular Framework for School Education, NCFSE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஏற்படுத்தப்படும்.
பன்மொழி மற்றும் மொழியின் ஆற்றல்
குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும் , ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் , தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி , பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கை வலியுறுத்துகிறது.
செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களின் பயன்பாட்டுக்காக, தேசிய, மாநில பாடத்திட்டப் பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மதிப்பீட்டு சீர்திருத்தங்கள்
3, 5, 8-ம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் , உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை எழுதுவார்கள். 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் தொடரும். அதேசமயம் , முழுமையான மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, திருத்தியமைக்கப்படும்.
புதிய தேசிய மதிப்பீட்டு மையம், பராக் - திறன் மதிப்பீடு, மறுஆய்வு மற்றும் முழுமையான மேம்பாட்டுக்கான அறிவுப் பகுப்பாய்வு ) (PARAKH - Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development) நிலையான அமைப்பு ஒன்றால், உருவாக்கப்படும்.
சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி
பின்தங்கிய பகுதிகள் மற்றும் குழுக்களுக்காக பாலின உள்ளடக்க நிதி, சிறப்புக் கல்வி மண்டலங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாநிலமும்/ மாவட்டமும், பகல் நேர உறைவிடப் பள்ளியாக பால பவன்களை அமைக்க ஊக்குவிக்கப்படும்.
வலுவான ஆசிரியர் சேர்க்கை மற்றும் தொழில் பாதை
ஆசிரியர்கள் வலுவான, வெளிப்படையான நடைமுறைகளின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். தகுதி அடிப்படையிலும், செயல்திறன் மதிப்பீடு, முன்னேற்ற வழிமுறைகளின்படியும் , பதவி உயர்வு இருக்கும். ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறைத் தரம் என்ற ஒரு பொதுவான அமைப்பு உருவாக்கப்படும்.
பள்ளி நிர்வாகம்
பள்ளிகள் வளாகங்களாகவோ, தொகுப்புகளாகவோ அமைக்கப்படும். உள்கட்டமைப்பு, கல்வி நூலகங்கள், வலுவான தொழில்முறை ஆசிரியர் சமூகம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில், நிர்வாகத்தின் அடிப்படை அலகாக அது இருக்கும்.
பள்ளிக் கல்விக்கான நிலையான அமைப்பு மற்றும் அங்கீகாரம்
புதிய கல்வி கொள்கை 2020 , கல்வி தொடர்பான விஷயங்கள் மற்றும் கொள்கை வகுத்தல், முறைப்படுத்துதல், இயக்குதல் ஆகியவற்றுக்கு தெளிவான, தனி நடைமுறைகளைக் கொண்டுள்ளது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், சுதந்திரமான மாநில கல்வித் தர ஆணையத்தை (SSSA) அமைத்துக் கொள்ளும்.
உயர் கல்வி
2035 வாக்கில் மொத்தப் பதிவு விகிதம் 50 சதவீதமாக உயர்த்தப்படும். தொழில் கல்வி விகிதத்தை 26.3 சதவீதத்திலிருந்து (2018) , 2035-ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவீதமாக உயர்த்துவது இதன் நோக்கம். உயர் கல்வி நிறுவனங்களில் 3.5 கோடி புதிய இடங்கள் சேர்க்கப்படும்.
முழுமையான பன்முகக் கல்வி
இளநிலை பட்டக் கல்வி , பன்னோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டு கால படிப்பாக இருக்கலாம். இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும். உதாரணமாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், 2 ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட டிப்ளமோ, 3 ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.
பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கல்வி மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்க , அகாடமிக் கிரெடிட் வங்கி உருவாக்கப்படும். இது கடைசியாகப் பட்டம் வழங்கப்படும்போது சேர்ப்பதற்கு வாய்ப்பாக அமையும்.
நாட்டில் உலகத் தரத்துக்கு இணையாக சிறந்த பன்னோக்கு கல்வி வழங்கும் மாதிரி அமைப்பாக, ஐஐடிக்கள், ஐஐஎம்கள் ஆகியவற்றுக்கு இணையாக, பன்னோக்குக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
உயர் கல்வியில், ஆராய்ச்சித் திறனைக் கட்டமைக்கவும், வலுவான ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை வளர்க்கவும், தேசிய ஆராய்ச்சி பவுண்டேசன் உருவாக்கப்படும்.
ஒழுங்குமுறை
மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகளைத் தவிர ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் ஒரே முதன்மை அமைப்பாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும்.
இந்திய உயர் கல்வி ஆணையம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும். ஒழுங்குமுறைக்காக தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறைக் குழு, தர நிர்ணயித்தலுக்காக பொதுக் கல்விக் குழு, நிதியுதவிக்காக உயர் கல்வி மானியக் குழு மற்றும் அங்கீகாரத்துக்காக தேசிய அங்கீகாரக் குழு.
நெறிமுறைப்படுத்தப்பட்ட நிறுவனக் கட்டமைப்பு
கல்லூரிகளுக்கான இணைப்பு அனுமதி 15 வருடங்களில் காலாவதி ஆகும் மற்றும் கல்லூரிகளுக்கு தன்னாட்சியை கட்டம் கட்டமாக படிப்படியாக வழங்குவதற்காக பல படிநிலைகளைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்படும். சில காலத்துக்கு பிறகு, ஒவ்வொரு கல்லூரியையும் தன்னாட்சியுடைய பட்டங்களை வழங்கும் கல்லூரியாகவோ அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகவோ மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வி
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவுடன் ஆலோசித்து புதிய மற்றும் விரிவான தேசிய ஆசிரியர் கல்வித் திட்டக் கட்டமைப்பு வடிவமைக்கப்படும். 2030-க்குள் கற்பித்தலுக்கான குறைந்தபட்ச பட்டத் தகுதி நான்கு வருட பி.எட். பட்டமாக இருக்கும். தரம் குறைந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கற்பித்தல் இயக்கம்
இந்திய மொழிகளில் கற்பிக்கும் திறன் வாய்ந்த மற்றும் பல்கலைக்கழக/ கல்லூரி ஆசிரியர்களுக்குக் குறுகிய கால மற்றும் நீண்ட கால கற்றல்/ தொழில்முறை ஆதரவை அளிக்க விரும்பும் திறன்வாய்ந்த மூத்த/ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட தேசிய கற்பித்தல் இயக்கம் அமைக்கப்படும்.
மாணவர்களுக்கு நிதி உதவி
எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர மாணவ தொழில்முனைவோர் வளர்ச்சிப் பிரிவுகளை சார்ந்த நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கல்வி உதவித்தொகையைப் பெறும் மாணவர்களின் முன்னேற்றத்தை ஆதரித்து, மேம்படுத்தி மற்றும் கண்காணிக்க தேசிய கல்வி உதவித்தொகை தளம் விரிவுபடுத்தப்படும். தங்களது மாணவர்களுக்கு அதிக அளவில் இலவச கல்வி மற்றும் கல்வி உதவித்தொகையை அளிக்கத் தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கப்படும்.
திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி
இணைய வழி படிப்புகள், டிஜிட்டல் சேமிப்புத் தளங்கள், ஆராய்ச்சிக்கு நிதியுதவி, மேம்படுத்தப்பட்ட மாணவர் சேவைகள், திறந்தவெளி இணைய வழிப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் ஆகியவற்றுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இணையவழிக் கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வி
தொற்று நோய்கள் மற்றும் பெருந்தொற்று சமயங்களில், சமீபத்திய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாரம்பரியமான மற்றும் நேரடிக் கல்வி எங்கெல்லாம் சாத்தியமில்லையோ அங்கெல்லாம் இணைய வழிக் கற்றலை ஊக்குவிக்க, தரமான மாற்றுக் கல்வியை வழங்குவதற்கான தயார் நிலையை உறுதி செய்ய விரிவான பரிந்துரைகள் வகுக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பாடங்கள் மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றைக் கட்டமைக்க மனித வள மேம்பாடு அமைச்சகத்தில் ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாக்கப்பட்டு, கல்வி மற்றும் உயர்கல்வியின் மின்-கற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
கல்வியில் தொழில்நுட்பம்
கல்வி, மதிப்பிடுதல், திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் யோசனைகளைத் தடையின்றிப் பகிர்ந்து கொள்ள தேசிய கல்வி தொழில்நுட்பப் பேரவை என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும்.
இந்திய மொழிகளை ஊக்கப்படுத்துதல்
அனைத்து இந்திய மொழிகளின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் துடிப்புடன் இயங்கும் தன்மையை உறுதி செய்ய, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் விளக்க நிறுவனம், பாலி, பெர்சிய மற்றும் பிராகிருதத்துக்கான தேசிய நிறுவனம் (அல்லது நிறுவனங்கள்), உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம் மற்றும் இதர மொழித் துறைகள் மற்றும் அதிக உயர்கல்வி நிறுவனங்களில் தாய்மொழி/உள்ளூர் மொழியில் கற்பித்தலை உறுதி செய்தல் ஆகியவற்றை தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.
வயது வந்தோருக்கான கல்வி
இளைஞர் மற்றும் வயது வந்தோருக்கான கல்வியை 100 சதவீதம் உறுதி செய்யவேண்டும்.
கல்விக்கு நிதியுதவி
கல்வித் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பொதுமுதலீடு 6 சதவீதம் விரைவில் எட்டப்படும்.
தொழில்முறைக் கல்வி
அனைத்துத் தொழில்முறைப் படிப்புகளும் உயர் கல்வி அமைப்பின் இன்றியமையாத அங்கமாக இருக்கும். தனிப்பட்ட தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள், சுகாதார அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவை பல்நோக்கு நிறுவனங்களாக ஆவதற்கு முயற்சி செய்யும்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago