போலீஸாக விரும்பும் 12 வயதுச் சிறுவனுக்கு ஆசிரியராக மாறித் தினந்தோறும் பாடம் கற்பித்து வருகிறார் இந்தூரைச் சேர்ந்த இளம் காவல் அதிகாரி.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் பலாசியா காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் வினோத் தீக்ஷித். இவர் பொதுமுடக்க நேரத்தில் தினசரி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒருநாள் 12 வயதுச் சிறுவன் ராஜ், அவரைச் சந்தித்துள்ளார். காவல்துறையில் சேர வேண்டும் என்று சிறுவன் தனது ஆசையைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும் வினோத் தீக்ஷித், ''படிக்க ஆசைப்பட்டாலும் சிறுவனுக்கு டியூஷன் செல்ல வசதியில்லை. சிறுவனின் அப்பா சாலையோரத்தில் டிபன் கடை போட்டிருந்தார். தாத்தா நடைபாதை வியாபாரி.
சிறுவனின் கனவை நனவாக்க ஆசைப்பட்டேன். மாலை வரை காவல் பணியைப் பார்த்து முடித்துவிட்டு, இரவில் ராஜூவுக்கு டியூஷன் சொல்லித் தருகிறேன். கடந்த ஒரு மாதமாக ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களைக் கற்றுக்கொடுத்து வருகிறேன்.
சிறுவனின் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் காணும்போது கண்டிப்பாக ஒருநாள் போலீஸ் அதிகாரியாவார் என்ற நம்பிக்கை உள்ளது'' என்கிறார் வினோத் தீக்ஷித்.