இளவரசி டயானா விருதுபெற்ற ஓசூர் மாணவி

By எல்.ரேணுகா தேவி

பொருளாதாரத்தில் நலிவுற்ற, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்நிலையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் ஓசூர் மாணவி நிஹாரிக்காவிற்கு இங்கிலாந்து அரச குடும்பத்தின் கீழ் செயல்பட்டுவரும் ‘The Diana Award’ தொண்டு நிறுவனம் ‘இளவரசி டயானா விருது’ வழங்கி கவுரவித்துள்ளது.

உலக அளவில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு உதவும் 9-25 வயதிற்குட்பட்ட இளம் தலைமுறையினரின் சேவையைப் பாராட்டி அவர்களுக்கு இளவரசி டயானாவின் பிறந்த நாளான ஜூலை 1-ம் தேதியன்று இவ்விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் 23 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த நிஹாரிக்காவிற்கு ‘டயானா விருது’ வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா சபையில் பேசிய மாணவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தில்லை நகரில் வசித்துவரும் கோபிநாத், ஸ்ரீஷா தம்பதியினரின் மகள் நிஹாரிக்கா(16). இவர் பெங்களூருவில் உள்ள ஆக்ரிட்ஜ் சர்வதேசப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவருகிறார். படிப்பு மட்டுமல்லாது பரதநாட்டியம், ஓவியம் போன்ற கலைகளிலும் சிறந்த மாணவியாகத் திகழ்கிறார்.

நிஹாரிக்கா படிக்கும் பள்ளியில் ஒவ்வொரு மாணவரும் சமூகத்திற்குத் தொண்டாற்றும் வகையில் மாணவர்களுக்குச் செயல் திட்டம் கொடுக்கப்படுகிறது. படிப்பிற்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் மாணவர்களின் சமூக சேவைப் பணிக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நிஹாரிக்கா ‘ஹோப் வேர்ல்டு’ என்ற தன்னுடைய செயல் திட்டத்தின் அடிப்படையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செயல்பட்டுவரும் ‘அபாலா’ ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள பெண்களுக்குக் காகிதப் பை, துணிப்பை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுத்தருகிறார். அதேபோல் தேன்கனிக்கோட்டையில் உள்ள மலைக் கிராமமான தொட்ட மஞ்சியில் வசிக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்குத் தையல் பயிற்சி கொடுத்து, வருவாய் ஈட்டவும் வழிவகை செய்துவருகிறார்.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. சபையின் ‘இளம் தலைவர்கள் திட்டத்தின்’ கீழ் இந்தியாவிலிருந்து முப்பது பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் நிஹாரிக்காவும் ஒருவர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் நிஹாரிக்கா உட்பட மூவர் மட்டுமே ஐ.நா.வில் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது தன்னுடைய ‘ஹோப் வேர்ல்டு’ திட்டத்தை விளக்கி, பலரின் பாராட்டைப் பெற்றார்.

சேவை செய்யக் கற்றுக்கொடுத்த பள்ளி

பள்ளியின் சேவைத் திட்டத்தின் அடிப்படையில் வீட்டு வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளுக்குத் தோழிகளுடன் இணைந்து டியூஷன் எடுப்பதோடு முதியோர் காப்பகங்களில் உள்ளவர்களுக்கும் உதவி செய்துள்ளார். அதேபோல் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ‘CRY’, ‘Vcare’ தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தஞ்சை ஓவியங்கள், வார்லி மற்றும் கோண்டா பழங்குடியின ஓவியங்கள் வரைந்து விற்பனை செய்தும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் நடனமாடிக் கிடைத்த வருவாய் ஒரு லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய நிஹாரிக்கா, “என்னால் மற்றவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கியது என்னுடைய பள்ளிதான். தொடக்கத்தில் சிறு உதவிகள் செய்து வந்தேன். பிறகு இதனைப் பெரிய அளவில் செய்ய ‘ஹோப் வேர்ல்டு’ என்ற செயல் திட்டத்தை உருவாக்கினேன். இதற்காகப் பல முன்னணி நிறுவனங்களிடம் சிஎஸ்ஆர் உதவிகளைக் கேட்டு விண்ணப்பித்தேன். அவர்கள் செய்த உதவியால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் வழங்கி உதவி செய்ய முடிந்தது. எனக்கு ஓவியம் வரைய நன்றாகத் தெரியும் என்பதால் என்னுடைய ஓவியத் திறமையைச் செயல் திட்டத்தில் பயன்படுத்த நினைத்தேன். துணிப் பைகள் மற்றும் கலைப்பொருட்கள் செய்வதற்குத்தான் முக்கியத்துவம் அளித்தேன். இந்தத் திட்டத்தை மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மத்தியில் கொண்டுசெல்வது தொடக்கத்தில் கடினமாக இருந்தது. அவர்கள் பல ஆண்டுகளாகத் தனிமையிலிருந்தவர்கள். சிலநேரம் நன்றாகப் பேசும் அவர்கள் திடீரென கோபப்படுவார்கள். இதற்காகக் குறைந்த அளவு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முதற்கட்டமாக மனநல ஆலோசகரை வரவழைத்து கவுன்சிலிங்க வழங்கி அவர்களுடைய மனநிலையைப் புரிந்துகொண்டேன்.

பின்னர் தையல் இயந்திரத்தின் உதவியுடன் துணிப்பை தயாரிப்பது மற்றும் காகிதப் பை, கண்ணாடி பாட்டில்களைக் கலைப்பொருட்களாக மாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தினேன். தற்போது அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். அதேபோல் தொட்ட மஞ்சியில் உள்ள மலைக் கிராம பெண்கள் பெரும்பாலும் வெளியுலகம் தெரியாதவர்கள். தங்களுடைய கிராமத்திலிருந்து கூட வெளியே வராத அவர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமானது. இதற்காகக் கிராமப் பெரியவர்களிடம் பேசி அங்குள்ள பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் வழங்கி துணிப் பைகள் செய்யக் கற்றுக்கொடுத்தோம். இதன்மூலம் கிடைக்கும் வருவாயைச் சம்பந்தப்பட்டவர்களுக்கே கொடுத்துவிடுகிறோம்.

என்னுடைய செயல் திட்டத்தின் மூலம் பல பெண்கள் கைத்தொழில் கற்றுக்கொண்டுவருகிறார்கள். அவர்களுக்கு தற்போது தன்னம்பிக்கை உருவாகியுள்ளது என்பதை நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக நிறுவனங்களின் உதவிப் பணிகள் தடைப்பட்டுள்ளன. நிலைமை சரியான பிறகு மீண்டும் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன். இந்த செயல் திட்டத்தை விளம்பு நிலையில் உள்ள பெண்களுக்குக் கொண்டு செல்வதுதான் என்னுடைய எதிர்காலத் திட்டமாக உள்ளது” என்கிறார் நிஹாரிக்கா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்