கற்றல்- கற்பித்தல் தொடர்பான நிபுணர் குழுவில் ஆசிரியர் பிரதிநிதிகள் புறக்கணிப்பு: பல்வேறு சங்கங்கள் கடும் கண்டனம்

By க.சே.ரமணி பிரபா தேவி

கரோனா தொடர் ஊரடங்கால், பள்ளிக் கல்வி கற்றல்- கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களைய அமைக்கப்பட்ட குழுவில் சர்ச்சை எழுந்துள்ளது.

வல்லுநர் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் சேர்க்கப்படவில்லை எனக் கூறி பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 16 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தொடர் ஊரடங்கு காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள் காலவரையன்றி மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே பள்ளிகளை எப்போது திறக்கலாம், புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை எப்போது தொடங்கலாம்? பாடத் திட்டங்களைக் குறைப்பது சரியா, சுழற்சி முறை வகுப்புகளில் உள்ள சாதக பாதகங்கள், கற்றல் கற்பித்தல் செயல் முறைகளில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து ஆராய்வதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்தது. துறை ஆணையர் சி.ஜி.தாமஸ் வைத்தியன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை பள்ளிக் கல்வித்துறை அமைத்தது.

இதில் கல்வித் துறையில் இயக்குநர்கள் மட்டத்திலான அலுவலர்களும், யூனிசெஃப், டி.என்.இ.ஜி.ஏ., சென்னை ஐஐடி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம்பெற்றனர். இவர்களுடன் கடந்த 29-ம் தேதி தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தலைவர்கள் உள்ளிட்ட 4 பேரைக் கூடுதலாக தமிழக அரசு சேர்த்தது.

இந்தக் குழுவில் தமிழ்நாடு அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் யாரும் இடம்பெறவில்லை. இது ஆசிரியா்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதுபற்றி தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வெளியிட்ட அறிக்கையில், ''விரிவாக்கப்பட்ட வல்லுநர் குழுவிலும் அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. மாறாக மத்தியப் பாடத்திட்டப் பள்ளி நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். இது மாணவர்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைச் சிறுமைப்படுத்தும் செயலாகும்.

பாட அளவு, கற்பித்தல் முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல முடிவுகளை மேற்கொள்ள உள்ள இக்குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளை இணைக்க வேண்டும். மூத்த கல்வியாளர்களை இணைக்க வேண்டும். இந்தக் குழு ஆசிரியர், மாணவர், பெற்றோர் அமைப்புகளுடன் விரிவான கலந்தாய்வு நடத்தி அதன் பிறகு அரசுக்கு அறிக்கை அளித்திட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.

அதேபோல தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கூறும்போது, ''கோவிட்-19 ஆல் தமிழகத்தின் கல்வி மற்றும் கற்றல், கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகளைத் தீர்க்கும் ஆலோசனைகள் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி சார்ந்த, கற்றல், கற்பித்தல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அமைய வேண்டும்.

அதற்கேற்றவாறு தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும், இன்றைய கல்விச் சூழலை, களச்சூழலை நன்கு உணர்ந்த தகுதி வாய்ந்த, சிறந்த ஆசிரியர்களையும் நிபுணர் குழுவில் இணைப்பது அவசியம்'' என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், ''மாணவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் யாரும் இடம்பெறாதது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

விரிவாக்கப்பட்ட வல்லுநர் குழுவிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் யாரும் இடம்பெறவில்லை. உயர் அதிகாரிகளும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகளும் மட்டுமே இடம் பெற்றுள்ளார்கள். ஆசிரியர் சங்கப் பிரதிநிகளை இணைத்துக்கொண்டால் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்களின் சூழலை அறிந்து ஆய்வுக்கு உட்படுத்தி, பேரிடருக்குப் பிறகான கல்விச் சூழலை முடிவெடுப்பது சாத்தியமாகும்'' என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகளுக்கும், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சமச்சீர்க் கல்வி புதிய பாடத்திட்டத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

அந்தக் குழுவில் குறைந்தபட்சம் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி கூட இல்லை. எனவே இந்தக் குழுவில் பள்ளிகள், மாணவர்களின் பிரச்சினைகளை அறிந்த அரசு, தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளை இணைக்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்