தமிழகத்தில் கற்றல் - கற்பித்தல் தொடர்பான நிபுணர் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பு: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

By எஸ்.கோமதி விநாயகம்

தமிழகத்தில் கற்றல் - கற்பித்தல் தொடர்பான நிபுணர் குழுவில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இன்றைய கல்விச் சூழலை, களச்சூழலை நன்கு உணர்ந்த தகுதி வாய்ந்த, சிறந்த ஆசிரியர்களையும் இணைப்பது அவசியமாகும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் கூறும்போது, "கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 16-ம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2019 - 20-ம் கல்வியாண்டில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டதாலும், 2020 - 21-ம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாலும் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்றைய நிலையில் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், கற்றல் கற்பித்தல் செயல்முறைகளில் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான வழிவகைகள், அதற்காகப் பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட கூறுகளைப் பற்றி ஆய்வு செய்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு கடந்த 12-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.

குழுவில் அலுவல் ரீதியாக கல்வித்துறையில் இயக்குநர்கள் மட்டத்திலான அலுவலர்களும், யுனிசெப், டி.என்.இ.ஜி.ஏ., சென்னை ஐ.ஐ.டி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில் நிபுணர் குழுவில் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தலைவர்கள் உள்ளிட்ட 4 பேரைக் கூடுதலாக தமிழக அரசு சேர்த்துள்ளது. கரோனா நோய்த்தொற்றால் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

இதில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு வாய்ப்புள்ளவர்களாகவும், தாங்கள் பயிலும் பள்ளிகளிலும், தங்கள் வீடுகளிலும் பல்வேறு கற்றல் வாய்ப்புக்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

ஆனால், குக்கிராமங்களிலெல்லாம் செயல்பாட்டுக் கொண்டிருப்பவை அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான். அங்கு பயிலும் மாணவர்கள் கிராமப்புற, ஏழை எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, நவீன தொழில்நுட்ப வசதிகள் எதுவுமில்லாதவர்கள். கல்வியறிவு அதிகம் பெறாத பெற்றோர்களின் குழந்தைகள். தற்போதைய கல்விச் சூழலை எதிர் கொள்வதற்குரிய வசதி வாய்ப்பு இல்லாதவர்கள்.

கோவிட்-19-ல் தமிழகத்தின் கல்வி மற்றும் கற்றல், கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைத் தீர்க்கும் ஆலோசனைகள் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி சார்ந்த, கற்றல் கற்பித்தல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அமைய வேண்டும்.

எனவே, அதற்கேற்றவாறு தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இன்றைய கல்விச் சூழலை, களச்சூழலை நன்கு உணர்ந்த தகுதி வாய்ந்த, சிறந்த ஆசிரியர்களையும் நிபுணர் குழுவில் இணைப்பது அவசியமாகும்.

மேலும், தமிழகத்தில் இன்றைய கல்விச்சூழலை, கல்வியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நன்கு ஆய்ந்து தெளிந்த தலைசிறந்த கல்வியாளர்கள் பலர் உள்ளனர்.

அவர்களில் பொருத்தமான சிலரையும் நிபுணர் குழுவில் இணைக்க வேண்டும். அதுவே நிபுணர் குழுவின் ஆலோசனைகள் உண்மையான பலனைத் தருவதாகவும், தமிழகத்தின் இன்றைய பள்ளிக்கல்வி எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்குரிய செயல் திட்டங்களைத் தருவதாகவும், எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு ஏதுவாகவும் அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்