35 மாணவர்களுக்கு தலா ரூ.1000: சொந்தப் பணத்தை வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

By க.சே.ரமணி பிரபா தேவி

திருச்சி களத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 என 35 பெற்றோர்களுக்கு ரூ.35,000 வழங்கியுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியர் குருமூர்த்தி.

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாங்கும் திறனும் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக ஏழை மக்களின் நிலை, சொல்லமுடியாத அளவுக்கு வறுமையுடன் இருக்கிறது.

இதற்கிடையே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஏராளமான தன்னார்வலர்கள், தினக்கூலிப் பணியாளர்களுக்கு உதவி வருகின்றனர். ஏராளமானோர் உணவுப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர் குருமூர்த்தி தனது பள்ளி மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 என 35 பெற்றோர்களுக்கு ரூ.35,000 வழங்கியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ஆசிரியர் குருமூர்த்தி, ''சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி செய்தியொன்றில் ஒருவர், 'என் பிள்ளைக்குத் தினமும் தீனி வாங்கித் தருவது வழக்கம். இப்போது வேலைக்குச் செல்ல முடியாததால் கையிலிருந்த பணம் செலவாகிவிட்டது. என் பிள்ளை கேட்பதை என்னால் வாங்கித் தர முடியவில்லை. கடை இல்லை என்று கூறி மகனைச் சமாளித்து வருகிறேன்.' என்று கூறினார்.

இதைக் கேட்டதும் துயரமாக இருந்தது. நம் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் கூலி வேலைக்குச் செல்வதால் அவர்களுக்கும் இந்நிலைதானே ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தேன். மாணவர்களின் சிறு தேவையைப் பூர்த்தி செய்ய இத்தொகையை வழங்கத் திட்டமிட்டேன்.

என்னால் முசிறியில் இருந்து மாணவர்களின் ஊரான மு.களத்தூருக்கு நேரில் சென்று வழங்க முடியவில்லை. அதனால் எங்கள் ஊர் அஞ்சலகத்தில் பணிபுரிபவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினேன். அவருடைய குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்ப்பதற்காகவே எங்கள் ஊருக்குக் குடிபெயர்ந்து வந்தவர் அவர். அவர் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவரின் ஒத்துழைப்புடன் அனைத்துப் பெற்றோர்களுக்கும் தலா 1000 ரூபாயை வழங்கிவிட்டோம்.

ஒரு வாரத்திற்கு முன்பே எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டிருந்தாலும் இந்து தமிழ் இணையத்தில் வெளிவந்த "பாதித்த கல்வி; அதிகரிக்கும் வன்முறை" என்ற கட்டுரையைப் பார்த்தபின்பு இதை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துப் பணம் அனுப்பினேன் என்று புன்னகைக்கிறார் ஆசிரியர் குருமூர்த்தி.

இதுகுறித்து மேலும் பேசுபவர், "எங்கள் பள்ளியில் சென்ற ஆண்டு படித்த ஒரு மாணவிக்கு அவருடைய குடும்பச் சூழ்நிலையை அறிந்து அவருக்கும் ரூ.1000 வழங்கலாமா என்று நினைத்திருந்தேன். அந்த வேளையில் 1000 ரூபாய் கொடுக்கத் திட்டமிட்டிருந்த ஒரு பெற்றோர் என்னிடம் , "நாங்கள் அரசுப் பணியில் உள்ளதால் எங்களுக்கு அப்பணம் வேண்டாம். அதை வேறு யாரேனும் இல்லாதவருக்குக் கொடுங்கள்" என்று கூறினார். எண்ண அலைகளின் வீரியத்தை அப்போதுதான் உணர்ந்தேன். எனவே அவருக்குத் தரவேண்டிய பணத்தை சென்ற ஆண்டு படித்த மாணவிக்கு வழங்கினோம்.

உதவி பெறுபவர்களைச் சங்கடப்படுத்தக் கூடாது என்பதற்காகப் புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை. என் மாணவர்களின் மகிழ்ச்சிக்கு முன் இத்தொகை பெரிதாகத் தெரியவில்லை" என்று நெகிழ்கிறார் ஆசிரியர் குருமூர்த்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்