பாதித்த கல்வி, அதிகரிக்கும் வன்முறை: விளிம்புநிலைக் குழந்தைகளின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட கரோனா

By க.சே.ரமணி பிரபா தேவி

நாடு முழுவதும் ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாற்று ஏற்பாடாக மத்திய, மாநில அரசுகள் சார்பிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலமாகவும் இணையவழிக் கற்பித்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி, பொதிகை ஆகிய தொலைக்காட்சிகளிலும் யூடியூப் சேனல்களிலும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

ஆன்லைன் வழிக் கற்பித்தலைப் பெற முடிந்த மாணவர்களுக்கு இது தேவையானதாக, போதுமானதாக இருக்கலாம். ஆனால் எந்தவொரு வசதியும் இல்லாமல், கரோனாவால் உணவு உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரமே கேள்விக் குறியாகிவிட்ட குழந்தைகளும் இந்த மண்ணில் வாழ்கின்றனர்.

கரோனா பிரச்சினைக்கு முன்னதாகவே பல்வேறு காரணங்களால் 9.5 கோடி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தனர். தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழலில், தெற்காசிய நாடுகளில் மட்டும் 43 கோடி குழந்தைகள் இடைநிற்றல் அபாயத்தில் இருப்பதாக யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது. இங்கு 33 சதவீதக் குழந்தைகளுக்கு மட்டுமே இணைய வசதி கிடைக்கிறது.

பல்வேறு பழங்குடியினக் குடியிருப்புகள், மலைவாழ் கிராமங்களில் தொலைக்காட்சி, வானொலி வசதி கூட இன்னும் சாத்தியப் பட்டிருக்கவில்லை. தற்போது பள்ளிகளும் இல்லாததால் கற்றலுக்கான மாற்று வழிகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதனால் இடைநிற்றல் ஏற்படும் சூழல் உருவாகிறது.

குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான குடும்ப வன்முறை, குழந்தைத் திருமணம் ஆகியவற்றுக்கான அபாயம் அதிகரிக்கிறது. வீட்டு வேலைகளில் அவர்கள் அதிகம் ஈடுபடுத்தப்படுவதற்கான சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையை எதிர்கொள்வது எப்படி?

கற்பித்தல் ஓர் அநீதி
இந்த நெருக்கடியான சூழலில் கற்பித்தல் என்பதே குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி, வன்முறை என்கிறார் குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன். வீடு என்பது மகிழ்ச்சிக்குரிய ஓரிடம். அங்கும் தொடர்ந்து படிக்கச் சொல்வது வெறுப்புணர்வையே உண்டாக்கும் என்கிறார்.

அவர் மேலும் கூறும்போது, இந்த நேரத்தில் மாணவர்களின் மனநிலை, ஈடுபாடு, சூழல் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டியது அவசியம். அதை அறியாமல் அவர்களைப் படி, படி என்பது, குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாக மாறி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

அன்றாடங்காய்ச்சிகள் குறித்தும் பேசுவோம்
ஆன்லைன் கற்பித்தல் குறித்துப் பேசும் நாம் அன்றாடங்காய்ச்சிகள் குறித்தும் பேச வேண்டும். அரசுப் பள்ளிகளில் தாய்மொழி வழிக்கல்வியில் படிக்கும் குழந்தைகள் விளிம்பு நிலையில் வாழ்பவர்களே. ஓரறையில்தான் அவர்களின் ஒட்டுமொத்த வீடே இருக்கும். அவர்களுக்கு இணைய வசதி அத்தனை எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. இதுவே ஒரு சமூகப் புறக்கணிப்புதான். நவீனத் தொழில்நுட்பத்தில் படித்து வெளியே வரும் குழந்தைகளுடன்தான் அவர்கள் போட்டி போடவேண்டும். எவ்வளவு பெரிய அநீதி இது? என்று கேள்வி எழுப்புகிறார் தேவநேயன்.

கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் 40 கோடித் தொழிலாளர்கள் கடும் வறுமைக்கு ஆளாவர் என்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது. குறிப்பாக தினக்கூலி பெறுவோரின் நிலை இன்னும் மோசம். அவர்களுடைய குழந்தைகளின் வாழ்வாதாரமும் கற்றலும் என்னவாகும் என்று கேட்டதற்கு, கல்வியை விட சோறு முக்கியம். அடுத்ததாக பெற்றோர்களுக்கே உணவு கிடைக்காமல் போகும்போது, அவர்களின் கோபம் குழந்தைகள் மீதுதான் பாயும். இதையும் குழந்தைகளே எதிர்கொள்ள வேண்டியது அவசியம்.

சிறப்பு இட ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் சுனாமி, சென்னை வெள்ளம் ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு இடைநிற்றல் அதிகரித்தது, குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகினர். குழந்தைகள் மீதான வன்முறையும் அதிகரித்தது. இதுபோன்ற நிகழ்வுகள் இப்போதும் நடக்க வாய்ப்புண்டு. இதனால் கற்றலை இனிமையாக்க வேண்டும்.

அடித்தட்டு மக்களில் இருந்தே எந்தவொரு திட்டங்களையும் தொடங்க வேண்டும். தமிழ் வழியில் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படித்த குழந்தைகளுக்கு 11-ம் வகுப்புக்கும் கல்லூரிக்கும் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கியே தீரவேண்டும். பொதுத் தேர்வுகளை எளிமையாக்க வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்புக் குழு
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 3 மாதத்துக்கு ஒருமுறை நடக்கும் கூட்டத்தை கரோனாவுக்குப் பிறகு உடனடியாக நடத்த வேண்டும். இதன்மூலம் மாணவ இடைநிற்றல், குழந்தைகள் புலம்பெயர்தல், குழந்தைத் திருமணம் ஆகியவற்றைக் கண்டறிந்து தடுக்க முடியும் என்கிறார் தேவநேயன்.

விளிம்புநிலைக் குழந்தைகளின் வாழ்வில் பள்ளியும் ஆசிரியருமே முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்; வாழ்க்கை மாற்றத்துக்கும் காரணமாக இருக்கிறார்கள். பள்ளிகள் இயங்காத சூழலில் ஆசிரியர்களின் பணி எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது என்று கேட்டபோது, தன்னிடம் படிக்கும் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும், அந்தந்த வகுப்பு ஆசிரியர்களிடம் இருக்கும்.

அவர்கள் மாணவர்களிடம் போனில் பேச வேண்டியது அவசியம். உளவியல் நம்பிக்கை ஊட்ட வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார்களா என்று கேட்டு, அரசிடம் உதவி பெற்றுத் தரலாம். வீட்டில் ஏதேனும் பிரச்சினையா என்று கேட்டறிந்து அதைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். பள்ளிகளில் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று உறுதியளிக்க வேண்டும். தேர்வு மீதான பயத்தைப் போக்க வேண்டும். ஊரடங்கு நாட்களில் தினமும் ஒரு பக்கம் எழுது, படம் வரை, கவிதை பழகு, பாட்டுப் பாடு எனச் சொல்லலாம் என்று ஆலோசனை வழங்குகிறார்.

உளவியல் ஆற்றுப்படுத்தலே முக்கியம்
பள்ளிகள் திறக்கப்பட்டதும் ஆசிரியர்கள் உடனடியாகப் பாடம் நடத்துக்கூடாது என்கிறார் தேவநேயன். உளவியல் ஆற்றுப்படுத்தலே முதன்மையாக இருக்க வேண்டும் என்பவர், மேலும் தொடர்கிறார். முதல் நாள் எத்தனை பேர் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க வேண்டும். குழந்தைகளைக் கொண்டாடுங்கள், குதூகலப்படுத்துங்கள். அடிப்படைக் கற்றல் பயிற்சிகளைத் திருப்புதல் செய்யலாம்.

குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன்

தேர்வு ஒரு தடையில்லை என்று உத்வேகம் அளிக்க வேண்டும். குழந்தைகளிடம் உறவாடுங்கள். வீட்டிலேயே மாணவர்கள் இருக்க வைக்கப்படுவதால் உளவியல் சிக்கலுக்கும் அவர்கள் ஆளாகி இருக்கக்கூடும். அதையும் கண்டறிந்து நீக்க வேண்டும். ஒரு சில ஆசிரியர்கள் இதைச் செய்கிறார்கள், இது அனைத்து இடங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும் என்று முடித்தார் தேவநேயன்.

நீண்டுகொண்டே செல்லும் ஊரடங்கால் குழந்தைகள் குறிப்பாக விளிம்புநிலையில் வாழ்வோர் அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் சூழலில், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் தடையின்றி, தொடர்ந்து கிடைப்பதையும் அவர்கள் பள்ளிக்குத் திரும்புவதையும் அரசு உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்