''எங்களால் யாருக்கும் கரோனா வராது; உணவுக்கே வழியில்லை''- பிலிப்பைன்ஸில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் வேதனை

By செய்திப்பிரிவு

எங்களால் யாருக்கும் கரோனா வராது என்றும் உணவுக்கே வழியில்லை என்றும் பிலிப்பைன்ஸில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 112-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் காரணமாக பிலிப்பைன்ஸில் ஏப்ரல் 14 வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் இருந்து கல்வி பயிலும் மாணவர்கள் 3 நாட்களுக்குள் தாய்நாடு திரும்ப வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து மக்கள் இந்தியா வர, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்து வரும் 200-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள், நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், ''19-ம் தேதிக்குள் நாங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும். எங்களால் யாருக்கும் கரோனா வராது. நாங்கள் மருத்துவம் படித்து வரும் மாணவர்கள்தான். இந்தியா வந்தவுடன் தனிமைப்படுத்தலுக்கும் தயாராக இருக்கிறோம். இங்கே உண்ண உணவும், குடிநீரும் கிடைப்பதில்லை. மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படவில்லை.

மின்சாரமும் அடிக்கடி நின்றுபோகிறது. நள்ளிரவு 1 மணிக்கு ஏர்போர்ட் வாசலில் காத்துக் கிடக்கிறோம். இந்திய அரசு விரைவில் எங்களை மீட்க வேண்டும்'' என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE