கோவிட்-19 வைரஸ் தடுப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கேரள எல்லையை ஒட்டியுள்ள 7 மாவட்ட பள்ளிகளில் 5-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல், சீனாவைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸால் 1.38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினர், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதனை செய்கின்றனர். கோவிட்-19 வைரஸ் அறிகுறிஉள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை கோவைவிமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினர் இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த1.55 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பரிசோதனை செய்துள்ளனர். இதில், 1,300 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் 10 பேர்கோவிட்-19 வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 75 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரம் பொறியாளர் ஒருவருக்கு மட்டுமே வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள பொறியாளரின் உடல்நிலை குணமடைந்துள்ளதால், அவர் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்ப உள்ளார்.
இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இனி வரும் நாட்களில் பல்வேறுஅரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களிடையே மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு ஆகியவை குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், துறை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பீலா ராஜேஷ், டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜே விரிவாக விளக்கினார்.
ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னர் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் ப்ரீகேஜி முதல்5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் மார்ச் 16 முதல் 31-ம் தேதிவரை தொடர் விடுமுறை அளிக்கமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கோவிட்-19 வைரஸ் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் விரிவான அறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அலுவலகம் செல்ல வேண்டாம்
முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
வெளிநாடுகளில் இருந்து வரும்அனைத்து பயணிகளையும் கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும். மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். யாருக்காவது கோவிட்-19 வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தும்மல், சளி இருந்தால், அவரை உடனடியாக அரசுமருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனையில் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், நல்லமுறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
பொதுமக்களிடம் வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும். ‘காய்ச்சல், இருமல், தும்மல், சளி இருந்தால் 3 நாட்களுக்கு அலுவலகத்துக்கோ, பள்ளி, கல்லூரிக்கோ செல்ல வேண்டாம். வீட்டிலேயே ஓய்வு எடுங்கள். அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுங்கள்’ என்று அனைவருக்கும் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வைரஸ் பாதிப்பு குறையும்வரை திரையரங்குகளை மூடுவது தொடர்பான முடிவை இன்னும் ஓரிரு தினங்களில் எடுக்கலாம். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து துறைகளும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
புதுச்சேரியில்..
புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ருத்ர கவுடு, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘பள்ளிகளில் காலை நேர வழிபாட்டுக்காக மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வை நடத்தக்கூடாது.
பள்ளிகளில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட விழாக்களை மறு உத்தரவு வரும் வரைநடத்தக் கூடாது. `வாட்டர் பெல்' அடிக்கும்போது மாணவர்கள் தண்ணீர் குடிப்பது மட்டுமல்லாமல் கட்டாயமாக கைகளை கழுவ வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
29 days ago