குட்டிக் கதை 23:  ஒப்புக்கொள், கற்றுக்கொள்!

By செய்திப்பிரிவு

“என்ன ஆச்சு, ஏன் இவ்ளோ சோகமா இருக்க?”

“கடவுள் ஏன்தான் எனக்கு மட்டும் இவ்ளோ கஷ்டத்தை தந்தாரோ”

“அப்படி என்ன கஷ்டம் உனக்கு?”

“தனியா நிக்க முடியாம நானே வேற ஒரு கொழுகொம்புல படர்ந்து வாழ்ந்துட்டு இருக்கேன், அப்படி இருக்கும்போது இவ்ளோ பெரிய பூசணிக்காயை என்னால எப்படி தாங்க முடியும்? நீயே சொல்லு” என்றது பூசணிக் கொடி.

“ஓ! நீ கவலையா இருக்கறதுக்குக் காரணம் இதானா, சரி இதுக்கான பதிலை நாளைக்குச் சொல்றேன்” என்றது முருங்கை மரம்.

“ஏன்? இன்னைக்கே சொன்னா என்ன?”

“சும்மா சொன்னா உனக்குப் புரியாது, அதனால நாளைக்கு ஒரு நிகழ்ச்சி மூலமா உனக்கு புரிய வைக்கறேன்”

“அப்போ ஏதோ சஸ்பென்ஸ் இருக்கும் போல இருக்கு, சரி நாளைக்குதான் சொல்லு” என்றது பூசணி கொடி.

மறுநாள் முருங்கை மரம் பூசணிக் கொடியைப் பார்த்து “பக்கத்துக் கழனியில இருக்கற வேர்க்கடலைச் செடிகள் எல்லாம் எப்படி அழகா வளர்ந்து நிக்குதுங்க பார்த்தியா” என்று கேட்டது.

“ஆமாம், அதுக்கு என்ன இப்போ?”

“சரி, இப்போ உன் சந்தேகத்தை அந்த செடிகிட்டக் கேளு”

“ஹா!, ஹா!, ஹா!, உனக்கு பதில் தெரியலன்னா அதை நேத்தே நீ என் கிட்ட சொல்லி இருக்கலாம், இப்போ என்னடான்னா வேர்க்கடலை செடி கிட்ட கேக்க சொல்ற”

“சரி, நீ கேக்க வேண்டாம், நானே கேக்கறேன், நாங்க என்ன பேசறோம்னு மட்டும் கவனி” என்று கூறியது முருங்கை.

பிறகு பக்கத்தில் விளைந்திருந்த வேர்க்கடலை செடிகளைப் பார்த்து, “ என்ன தம்பிங்களா, எப்படி இருக்கீங்க”

“ஓ நாங்க ரொம்ப நல்லா இருக்கோம்” என்று அவை சந்தோஷமாக கூறின.

“அது சரி, உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும், உங்க செடியில இருக்கற காய்களைப் பறிச்சதும் உங்களைத் தூக்கிப் போட்டுடறாங்க, அதுக்கு அப்பறம் உங்க வாழ்க்கையே முடிஞ்சி போயிடுதே, அதை நினைச்சு உங்களுக்கு வருத்தமா இல்லையா?”

“உண்மையிலேயே நாங்க வருத்தப்பட மாட்டோம், ஏன்னா வருத்தமும் சந்தோஷமும் நாம் என்ன நினைக்கறோமோ அதனாலதான் ஏற்படுது. நாம கஷ்டப்படுறமேன்னு யோசிக்கறதுக்கு பதிலா வேற மாதிரி மாத்தி யோசிக்கணும்”

“மாத்தி யோசிக்கணுமா? அது எப்படி?”

“நம்ம வாழ்க்கை முடியறதுக்குள்ள யாருக்காவது உதவியா இருக்கணும், நாங்க மனிதர்களுக்கு வேர்க்கடலை தரோம், ஆனா அதைக் கொடுத்தபிறகு எங்களைப் பிடுங்கிப் போடறாங்க என்பது உண்மைதான், இயற்கை எங்க வாழ்க்கையை அப்படி தான் அமைச்சி வெச்சிருக்கு, அதனால நாம கஷ்டப்படறமேன்னு யோசிக்கறதை விட நம்மை விட அதிகமா கஷ்டப்படறவங்களை நினைத்து நம்ம மனசை சமாதானப்படுத்திக்கணும்”

“நீ சொல்றது சரி தான், உங்களை விட கஷ்டப்படறவங்க இருக்காங்களா?”

“வேர்க்கடலைகளை பறிச்சிட்டு எங்களை தூக்கிதான் போடறாங்க, ஆனா நெல்மணிகளை எடுக்கறதுக்கு, கதிர் அறுத்து அவற்றை அடிச்சுதான் நெல்லைப் பிரிச்சு எடுக்கறாங்க, அவங்களை அடிக்கும் போது எவளோ வலிக்கும், ஆனா மனிதர்களுக்குத் தேவையான உணவை உருவாக்கிக் கொடுத்து உதவி செய்யறோம்கற நினைப்பில அவங்க ரொம்ப சந்தோஷமா திருப்தியோட இருக்காங்க, அதனால அடுத்தவங்களுக்கு உதவி செய்யறதால எந்தக் கஷ்டம் வந்தாலும் அதை சந்தோஷமா ஏத்துக்கணும்”

“ஓ! அதனாலதான் நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கீங்களா?”

“ஆமாம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னது வேர்க்கடலை செடி.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பூசணிக்கொடி, வெட்கத்தால் தலை குனிந்தது. ‘பூசணிக்காய் பளுவாக உள்ளதற்குப் போய் வருத்தப்படுகிறோமே, அடுத்தவர்க்கு உதவுவதால் வரும் துன்பத்தை இவர்கள் எல்லாம் எவ்வளவு இன்பமாய் ஏற்றுக்கொள்கிறார்கள், இனி நாமும் இவர்களைப் போலவே வாழவேண்டும்’ என்ற நல்ல விஷயத்தை கற்றுக்கொண்ட மகிழ்வோடு சிரித்தது.

அதைப் பார்த்து முருங்கை மரமும் மகிழ்ந்தது.

நீதி: அடுத்தவர்க்கு உதவுவதால் வரும் துன்பத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

--கலாவல்லி அருள், தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி, திருக்காலிமேடு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்