சி.வி.ராமனின் முகமூடி அணிந்து அறிவியல் பாடல்கள்:  பீமநகர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல்

திருச்சி, பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சி.வி.ராமனின் முகமூடி அணிந்து அறிவியல் பாடல்களைப் பாடி அசத்தினர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று (28.02.2020) தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பள்ளி மாணவர்களியே தேசிய அறிவியல் தினம் தொடர்பான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்கள் சர்.சி.வி.ராமனின் முகமூடி அணிந்திருந்தனர். அத்துடன் அறிவியல் தொடர்பான பாடல்களைப் பாடி தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.

பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் தோ.மேரிதனசெல்வி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் கோகுல் மாணவர்கள் மத்தியில் அறிவியலின் அவசியம், அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துதல் பற்றிய சிறப்புரையை ஆற்றி மாணவரிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டினார்.

தமிழ்ச்செம்மல் கவிஞர்.வீ.கோவிந்தசாமி அறிவியலின் சிறப்புகளையும்,மாணவர்களின் இலக்கு பற்றியும் கூறி சிறப்புரையை வழங்கினார். நிறைவாக இடைநிலை ஆசிரியர் சு.வரதராஜன் நன்றியுரை நிகழ்த்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE