கேரள மாணவிக்கு ரூ.94 லட்சம் உதவித்தொகை: ஷாருக் கான் வழங்கினார்

கேரள ஆய்வு மாணவிக்கு முனைவர் பட்டப் படிப்புக்காக ரூ.94 லட்சம் உதவித்தொகையை நடிகர் ஷாருக் கான் வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலுள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் பெயரில் பிஎச்டி படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் ஒன்றை அறிவித்திருந்தது.

அந்த உதவித் தொகை, 10 ஆண்டுகளுக்குள் முதுகலை ஆராய்ச்சிப் படிப்பை முடித்த தகுதி வாய்ந்த இந்தியப் பெண்ணுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் நடுவர் குழு, கோபிகாவைத் தேர்வு செய்தது.

இதையடுத்து லா ட்ரோப் பல்கலைக்கழக பிஎச்டி படிப்பின் முதல் ஸ்காலர்ஷிப்பை மாணவி கோபிகாவுக்கு ஷாருக் கான் வழங்கினார். இவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.94 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிகா. கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் படித்த அவர், அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர், கேரளத்தில் உள்ள ஆசிய யானைகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

உணவு உற்பத்தியில் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவனம், குடிநீர், அவற்றுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளார். இந்த உதவித்தொகைக்குப் பிறகு, கோபிகா லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவோடு இணைந்து ஆராய்ச்சியை மேற்கொள்வார். வைரஸ், கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து உலகின் தேனி உற்பத்தியைப் பாதுகாப்பதே இக்குழுவின் நோக்கமாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE