இன்றைய மாணவர்களாகிய நீங்கள்தான் வருங்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் ஈடுபடப்போகிறீர்கள். அப்போது உங்களின் மற்றும் அத்துறைகளின் உயர்வும் வீழ்ச்சியும் உங்களால்தான் தீர்மானிக்கப்படப் போகிறது. உயர்வா? வீழ்ச்சியா? என்பது பல நிகழ்வுகளின் கூட்டு விளைவு என்றாலும், திறன் அளவு முக்கியமாகும்.
எடுத்துக்காட்டாக, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் நிலை. 1975 மற்றும் 1979 உலகக் கோப்பைகளை வென்றவர்கள், 2023 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடக்கூடத் தகுதி அடையவில்லை. அவர்களின் இந்த நிலைக்குக் காரணங்கள் பல இருந்திருக்கலாம்.
ஆனால், அவற்றுள் விளையாட்டு வீரர்களின் திறன் முதன்மையானது. ஏனெனில், எந்தச் சூழலும் அரங்கத்துக்கு வெளியில்தான். அரங்கத்துக்குள் விளையாட ஆரம்பித்தப் பிறகு வீரர்களின் திறனில் ஏற்படும் வீழ்ச்சிதான் தோல்விக்குக் காரணமாகிறது. எதிர் அணியினரைவிட திறன் மிக்கவர்களாக இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார்கள் அல்லவா? அதிர்ஷ்டம் சில நேரம் வெற்றிக் கனியைப் பறித்துத் தரலாம். திறன் மட்டுமே என்றென்றும் வெற்றிக்கான அடித்தளம்.
சிக்கலே வாய்ப்பு தரும்: இதுபோல், ஒரே மாதிரியான தொழில் நிறுவனங்களைப் பலர் ஆரம்பித்தாலும், அதில் சிறந்தத் திறனுள்ளவர்கள்தான் நீடித்த வெற்றியடைகிறார்கள். சிறந்தத் திறனாளிகளாக இருக்க வேண்டியது அனைத்துத் துறைகளில் செயல்படப்போகும் உங்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாகும்.
இனி வரும் காலத்தில், எல்லாத் துறைகளிலும் போட்டி என்பது திறனில் சிறந்தவர்களுக்குள் மட்டுமாகத்தான் இருக்கப்போகிறது. இது எல்லாக் காலத்திலும் நடைபெற்று வரக்கூடிய ஒன்றுதான் என்றாலும், எதிர்காலத்தில், தொழில்நுட்ப முன்னேற்றங்களான இயந்திரமாக்கல், செயற்கை நுண்ணறிவு போன்றவை, பெருந்தொற்று போன்ற எதிர்பாராத நிகழ்வுகள், நிறுவனங்கள் நேரடியாக ஊழியர்களை நியமிக்காமல் அவ்வப்போது கொடுக்கப்படும் பணிகளைச் செய்து முடிக்க ‘அவுட்சோர்ஸ்’ செய்வது, நிறுவனத்தின் கொள்கை மாற்றங்கள், காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை திறன் குறைந்தவர்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போவதற்கான காரணங்களாக இருக்கப்போகின்றன.
எனினும், இக்காரணங்களே சில புதிய தொழில்கள் மற்றும் வேலைகளுக்கான திறவுகோலாகவும் இருக்கப்போகின்றன என்பதும் உண்மை. இது போன்ற காரணங்களால் ஏற்படும் நிகழ்வுகளை, மாற்றங்களை அறிந்து, தேவையானவற்றைப் பயின்று, திறன்களை உயர்த்தி உங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டால் மட்டுமே கடினமான இடர்களும், இடறுகளும் இல்லாத வாழ்க்கையாக இருக்கும்.
வருங்காலத்தில் நீங்கள் வாழ்வாதாரத்துக்காக ஈடுபடப்போகும் வேலை, தொழில், தனித்திறமை ஆகியவற்றுக்கான காரணிகளாக அமையப்போவது, கனவா, தேவையா, தகுதியா, வாய்க்கப்பெற்றதா, திணிக்கப்படுவதா என்பனவற்றுள் எதுவென்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும். ஆனால், இவற்றில் வெற்றிபெற, விருப்பம், அறிவு, செயல்திறன், ஒழுக்கம், கவனச்சிதறலின்மை, தொடர்புகளின் துணை, மன உறுதி, தலைமைப்பண்பு போன்றவை அவசியமாகிறது.
உயரப் பறக்கலாம்: தங்களின் கனவை அடைய உறுதி கொண்டவர்களும் மற்றும் தேவை அதிகமாக உள்ளவர்களும் அவற்றை அடையத் தேவையான வகையில் இத்திறன்களை உயர்த்திக்கொண்டும் செயல்பட்டும் வெற்றி அடைகிறார்கள். ஆனால், தகுதி, வாய்க்கப்பெற்றது, திணிக்கப்படுவது ஆகிய மூன்று வகையினரில் பலர், இத்திறன்கள் இல்லாமையால், அல்லது குறைந்த அளவினால் பிறரின் கீழ் வேலை செய்பவர்களாகவும், வெற்றிபெற முடியாதவர்களாகவும் வாழ்கிறார்கள்.
தேவையான அளவுக்கு தங்களை உயர்த்திக் கொள்வதைத் தவிர இவர்கள் உயர்வதற்கு வேறு வழியில்லை.
மாணவர்களே காலம் நிறைய இருக்கிறது. இத்திறன்களை நாள்தோறும் கற்றல், பயிற்சி செய்தல், பயின்றதைப் பாசாங்கற்று துணிவுடன் கடைப்பிடித்தல் என்பதை வாழ்வியலாக்கிக் கொண்டு உயர்வடையுங்கள். இவ்வழிமுறை நீங்கள் ஆகச்சிறந்தவராக உருவாக உதவுவதுடன் பிறரை வழிநடத்தவும் தேவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘வல்லமைசேர்’,‘வேர்களின் கண்ணீர்’ ஆகிய புத்தகங்களின் ஆசிரியர்; ravikannappan6162@gmail.com
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
26 days ago