அரசமைப்புச் சட்டம்: தலைசிறந்த மானுட ஆவணத்தின் 75-வது ஆண்டு

By இரா.வினோத்


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு இது. 1949 நவம்பர் 26-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் இந்த சட்டம் முறையாக ஏற்கப்பட்டது. இந்த ஆண்டு முழுவதும் அரசமைப்புச் சட்ட தினத்தை பல்வேறு வகைகளில் கொண்டாட மத்திய மாநில அரசுகளும் திட்டமிட்டுள்ளன. ‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ என பிரதான அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பேசத் தொடங்கியுள்ளன.

உலகின் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்துக்கு மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. உலகிலேயே மிக நீண்ட எழுத்துப்பூர்வமான அரசமைப்புச் சட்டம் நம்முடையதுதான். இதனை ‘சிறந்த‌ மானுட ஆவணம்’ என்று சட்டவியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வரலாற்று பின்னணி: இந்த‌ அரசமைப்புச் ச‌ட்டத்தை எழுதுவதற்கான அரசியல் சட்ட நிர்ணய சபை 9.12.1946-ல் முதல்முறையாகக் கூடியது. இந்த சபை 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள் கூடி, அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. 11 தொடர்களாக, மொத்தம் 165 நாட்கள் சபை கூட்டம் நடந்தது. அதில் 114 நாட்கள் வரைவு அரசியல் சட்டம் தொடர்பான விவாதங்களுக்கும் திருத்தத் தீர்மானங்களுக்கும் செலவிடப்பட்டன‌. இந்திய அரசமைப்பு சட்டத்தில் மொத்தம் 395 பிரிவுகள், 12 அட்டவணைகள் ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் இடம்பெற்றுள்ளன.

புத்தரும் அம்பேத்கரும்: இந்திய அரசமைப்புச் சட்ட உருவாக்க பணிகளில் பல்வேறு தலைவர்களுக்குப் பங்கு இருந்தாலும், அதனை தனி ஆளாக அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சட்டமாக உருவாக்கியதில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு மகத்தான பங்கு இருக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம்பெற்றிருக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்று தத்துவங்களையும் அம்பேத்கர் பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து எடுத்தாளவில்லை. மாறாக அவரது மானசீக குருவான புத்தரின் போதனைகளில் இருந்து பெற்றதாகக் குறிப்பிடுகிறார்.

அரசும் நிலமும் தொழிலும்: பல்வேறு முரண்களைக் கொண்ட ஒரு பெருந்தேசத்தின் மக்களை ஒரு கணத்தில் சமத்துவத்துடன், ‘இந்திய மக்களாகிய நாம்’ என்று தொடங்க வைக்கிறார். அரசமைப்புச் சட்டத்தின் 39-வது ஷரத்தில், “மக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைக்கக்கூடியதான சமுதாய அமைப்பினை உருவாக்கி, நல அரசை உருவாக்க அரசாங்கம் முயல வேண்டும்.

தேசிய வாழ்வின் அனைத்து ஸ்தாபனங்களிலும் அவ்வுணர்வு பரவ வகை செய்ய வேண்டும். ஆண்-பெண் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களின் ஆரோக்கியமும், சிறாரின் பால்யமும் தவறாகப் பயன்படுத்தாமல் நெறிப்படுத்த வேண்டும்” என வலியுறுத்துகிறார்.

முக்கியத் தொழில்துறைகள் அனைத்தும் அரசால் நடத்தப்பட வேண்டும். அனைத்து விவசாய நிலங்களையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அவற்றை விவசாயிகளுக்குக் குத்தகை முறையில் பங்கிட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசே அனைவருக்கும் காப்பீடு வழங்க வேண்டும் என விரும்பினார். ஆனால், அதனை பிறர் ஏற்காததால் அம்பேத்கரின் சோஷலிச சிந்தனை செயலாக மாறாமல் போனது. அரசுக்கு ஆணை பிறப்பிக்கும் உரிமையை நீதிமன்றங்களுக்கு வழங்க வேண்டும் என அரசமைப்புச் சட்டத்திலே கொண்டுவந்தார்.

அம்பேத்கரின் எச்சரிக்கை: நம் அரசமைப்புச் சட்டம் “இறையாண்மை மிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு” என நம் நாட்டைப் பற்றி வரையறுக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை எளிதில் மாற்றிவிடக் கூடாது என்பதற்காகவே மிக நீண்டதாக அம்பேத்கர் எழுதினார். அதனை நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு மாற்றினால் பெரும் குழப்பமே ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கிறார்.

இதேபோல, அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் பேசுகையில், “1950 ஜனவரி 26-ம் தேதியன்று, நாம் முரண்பட்ட வாழ்க்கையில் நுழையப் போகிறோம். அரசியலில் நமக்கு சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக, பொருளாதாரத் தளத்தில் - சமத்துவமற்ற தன்மையே நீடிக்கும்.

அரசியலில் நாம் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு நெறி என்பதை அங்கீகரிப்போம். ஆனால் நமது சமூக, பொருளாதார வாழ்க்கையில் நம்முடைய பொருளாதார, சமூக அமைப்பின் காரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு நெறி என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து மறுத்து வருவோம்.

இதுபோன்ற முரண்பட்ட வாழ்க்கை முறைகளுடன் நாம் எவ்வளவு காலம் வாழப்போகிறோம்? நம்முடைய சமூக, பொருளாதார வாழ்க்கையில் இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் சமத்துவத்தை மறுக்கப்போகிறோம்? இப்படித் தொடர்ந்து மறுத்துவருவதன் மூலம் அரசியல் ஜனநாயகத்துக்குப் பேரிடர் மட்டுமே விளைவிப்போம்.

இம்முரண்பாடுகளை நாம் முடியும் வரை குறைந்த காலத்துக்குள் களைந்திட வேண்டும். இல்லையெனில், சமத்துவமின்மையால் அல்லலுறும் மக்களால் இம்மன்றம் மிகுந்த சிரமங்களுக்கு இடையே கட்டியுள்ள அரசியல் ஜனநாயகமே தகர்க்கப்பட்டுவிடும்” என எச்சரிப்பதை மறந்துவிடக்கூடாது.

- vinoth.r@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்