ஆங்கிலம் அறிவோமே 4.0: 92 - அங்கதம் அடங்கிய திரை விமர்சனம்!

By ஜி.எஸ்.எஸ்

Puncture, Acupuncture இரண்டுக்கும் தொடர்பு உண்டா? - துளை என்பதுதான் தொடர்பு. Puncture என்று நாம் பரவலாகக் குறிப்பிடுவது சைக்கிளின் ரப்பர் சக்கரத்தில் (டயர்களில்) கூரான ஒரு பொருளால் ஏற்படும் சிறு துளை. Acupuncture என்பது உடலின் குறிப்பிட்ட இடங்களில் மெல்லிய ஊசிகளைப் பொருத்தி, துளையிட்டு, நோய் தணிக்கும் மருத்துவ முறையாகும்.

Caustic review என்றால் என்ன? - Caustic என்பது வேதியியல் செயல்பாடு காரணமாக அழிக்க கூடிய தன்மை கொண்டது. Caustic soda எனப்படும் சோடியம் ஹைட்ராக்ஸைடு பட்டால் கடுமையான புண்கள் ஏற்படும். Caustic film review என்பது ஒரு திரைப்படத்தை நார் நாராகக் கிழித்துத் தொங்கவிடும், அங்கதம் அடங்கிய விமர்சனம்.

Furious என்பது கோபமாக இருப்பதை குறிக்கிறதா? - கடுங்கோபம். Very angry. இப்படி veryத்தன மான வேறு சிலவற்றை சுட்டிக்காட்டும் ஆங்கில வார்த்தைகளைப் பார்ப்போம்.

Very big - Massive
Very happy - Ecstatic
Very upset - Devastated
Very fast - Rapid
Very ugly - Hideous
Very clever - Genius
Very stupid - Moronic
Very old - Ancient.

எனக்கு முன்னால் இருப்பதை எந்தச் சொற்களால் விவரிக்கலாம், In front of me என்றா அல்லது before me என்றா? - பொதுவாக இடத்தைக் குறிப்பதற்கு before என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. அப்போது in front of என்பதைத்தான் பயன்படுத்துகிறோம். Visu was sitting in front of my colleagues. எனவே வரிசையில் எனக்கு முன்னால் இருக்கிறாய் என்பதைக் குறிக்கும்போது in front of என்பதைப் பயன்படுத்துவோம்.

Before என்பதைக் காலத்தைக் குறிக்கப் பயன்படுத்துவோம். You must be in your seats before 10 a.m.
He was before me. So he should be in front of me in the queue.
Before என்பதன் எதிர்ச்சொல் after. In front of என்பதன் எதிர்ச்சொல் behind.
விதிவிலக்கு ஒன்று உண்டு. ஒரு பட்டியலில் குறிப்பிட்ட விஷயம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் குறிக்க before என்பதைப் பயன்படுத்துவோம். C comes before D in the alphabet.

இரு பிரபல கட்சிகளைக் குறிப்பிட்டு ‘They trade barbs’ என்கிறது ஒரு செய்தித் தலைப்பு. இதற்கு என்ன பொருள்? - கூரிய முனையைக் குறிக்கும் சொல் Barb. அம்பின் நுனி வளைவைப்போல, தூண்டிலின் முனையைப்போல. அதாவது அந்த அம்பையோ தூண்டிலையோ அது தைத்த பகுதியிலிருந்து சரக்கென்று எடுத்து விடாதபடி அது தடுக்கும். இரண்டு குழுக்களைச் சேர்ந்த இருவர் புத்திசாலித்தனமான வார்த்தைகளின் மூலம் நகைச்சுவையாகவும் ஆழமாகவும் ஒருவரை ஒருவர் அவமானப்படுத்த முயல்வதை trade barbs என விவரிப்பார்கள்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE