2024 மத்திய பட்ஜெட்டில் பள்ளிப் படிப்பு: கேள்வி உனது, பதில் எனது

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்திய அரசின் பட்ஜெட் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டுல, கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செஞ்சிருக்காங்கனு தெரியுமா? இதுல இரண்டு பிரிவுகள் இருக்கு. ஒண்ணு, பள்ளிக்கல்வித் துறைக்கு, ரூ.73,008 கோடி ஒதுக்கப்பட்டிருக்கு. மற்றொன்று உயர்கல்வித் துறைக்கு ரூ. 47,619 கோடி ஒதுக்கப்பட்டிருக்கு.

மத்திய அரசின் பள்ளிக்கல்வித் துறையில, பள்ளிக் கல்வி மட்டும் இல்ல. கல்வியறிவும் கூடவே இருக்கு. இதுல என்ன பண்ணுவாங்க? முறையா பள்ளிக்குப்போய், கல்வி பெற இயலாதவங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமா கல்வியை கொண்டு சேர்க்கிற பிரிவு செய்யுது. இந்த இரண்டு பிரிவுகளுக்குமா சேர்ந்து பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 73,008 கோடி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டு இருக்கு.

நிதி ஒதுக்கீடு உயர்கல்விக்கு ஒருமாதிரி இருக்கு; பள்ளிக் கல்வித் துறைக்கு வேறமாதிரி இருக்கே ஏன் என்கிற கேள்வி எழுதா? நம்முடைய அரசியலமைப்பு சட்டப்படி, கல்வி பொதுப் பட்டியல்ல இருக்கு. மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே கல்விப் பணி செய்கின்றன.

இதில் மத்திய அரசை போலவே மாநில அரசும் பட்ஜெட்டுல கல்வித்துறைக்கு நிதி ஒதுக்குவாங்க. அதுல, பள்ளிக்கல்வித் துறைக்கு தேவையான நிதி ஒதுக்கப்படுது. மத்திய அரசின்கீழ் உள்ள பள்ளிக்கூடங்கள், உயர்கல்வி அமைப்புகளான கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

கல்வித் துறையின் நிதி எதற்கெல்லாம் பயன்படும்? நேரடியாக மாணவர்கள் பயன்பெறும் திட்டங்கள் மட்டுமல்ல பள்ளிக் கட்டமைப்புகளை நிறுவவும் வலுப்படுத்தவும் சீரமைக்கவும் கூட இந்த நிதியில் இருந்துதான் செலவு செய்ய வேண்டும்.அதாவது ஒரு அரசு பள்ளிக்கூடத்துல அறிவியல் சோதனை மையம் அமைக்கணும், ஸ்மார்ட் வகுப்பறை நிறுவணும், பள்ளிக் கட்டிடத்தைப் புதுப்பிக்கணும், பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு மேலும் வசதிகள் செய்து தரணும், இதற்கெல்லாம் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு தேவைப்படுது.

நிதியை பகிர்ந்தளிக்கும் முறை: இந்தப் பணம் எப்படி நம் பள்ளிக்கு வந்து சேரும்? மத்திய பட்ஜெட் அல்லது மாநில பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி, முதலில் அவ்வந்த துறைக்கு வந்து சேரும். அந்தத் துறையின் அமைச்சர் அல்லது செயலாளர், இந்த நிதியைக் கையாளும் அதிகாரம் படைத்தவர்கள் ஆவர். அவர்தான் தேவை, அவசியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பகிர்ந்து தருவார்.

பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர், இயக்குனர், செயலாளர் என்று பல அலுவலர்கள் உள்ளனர். ஒரு பள்ளிக்குத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவதும் அல்லது ஒதுக்கீடு செய்வதும் இந்த நிதி முறையாகச் செலவு செய்யப்படுகிறதா என்று கண்காணிப்பதும் இந்த அலுவலர்களின் கடமையாகும்.

படிச்சு முடிச்ச பிறகு? - சரி.. கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு மட்டுமல்ல மற்றொரு முக்கிய அறிவிப்பும் இந்தாண்டு மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இது, பள்ளி / கல்லூரிக் கல்வி முடித்த இளைஞர்களுக்கானது. இருந்தாலும் சற்றே அறிந்து வைத்துக் கொண்டால் ‘நாளைக்கு’ பயன் தருமே.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு, 500 பெரு நிறுவனங்கள் மூலம், பணிப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு பயிற்சி பெறுவோருக்கு, மாதம் ரூ.5000 பயிற்சிப் படி, அந்தந்த நிறுவனங்கள் மூலம், மத்திய அரசால் வழங்கப்படும்.

இதன்படி ஓராண்டுக்கு சராசரியாக 4000 பேருக்கு ஒரு நிறுவனம் பயிற்சி அளிக்க வேண்டும். இந்த எண்ணிக்கை சில நிறுவனங்களில் அதிகமாகவும் சில நிறுவனங்களில் குறைவாகவும் இருக்கலாம். ஆனாலும் ஆண்டுக்கு 4000 பேருக்கு பணிப் பயிற்சி அளிக்கும் தேவையும் ஆற்றலும் கொண்ட500 நிறுவனங்கள் உள்ளனவா, அவையாவை உள்ளிட்ட விவரங்கள் இனிமேல்தான் தெரிய வரும்.

தற்போது நாம் விவாதித்து வரும் பட்ஜெட்ஒரு வரைவு அறிக்கை மட்டுமே. அதாவது, இதுவே முடிவானது அல்ல. துறை ரீதியாக நீண்ட விரிவான விவாதம் நடந்து, தேவைப்படும் திருத்தங்களுடன் இந்த நிதிநிலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அதன் பிறகே அது செயல்பாட்டுக்கு வரும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இளைஞர்களின் பணித் திறன் மேம்படும். இதன் வழியே வேலைவாய்ப்பு பெருகும். நிறுவனங்களின் உற்பத்தித் திறன் கூடும். இது பொருளாதாரத்துக்கு நன்மை சேர்க்கும்.

- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE