புதுமை புகுத்து 25: வானில் ஒரு விண்மீன் வெடிக்கப்போகிறது

By த.வி.வெங்கடேஸ்வரன்

வரும் செப்டம்பர் மாதத்துக்குள் 3,000 ஒளியாண்டு தொலைவில் உள்ள டி கொரோனே பொரியாலிஸ் (T CrB) எனும் விண்மீன் வெடித்து சீறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பிரகாசம் 1600 மடங்கு கூடும். வெறும் கண்களுக்கு ஒருவாரம் வரை புலப்படும். 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விண்மீன் வெடித்து சீறும். இதற்கு முன்னால் 1946இலும், அதற்கும் முன்பு 1866இலும் இந்த விண்மீன் சீறி பிரகாசம் அடைந்தது.

எனவே 78 ஆண்டுகள் கடந்துவிட்டதால் எப்போது வேண்டுமானாலும் சீற்ற நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைநோக்கியில் கூட காட்சிக்கு ஒரே ஒரு ஒளிப்புள்ளியாக தென்பட்டாலும் உள்ளபடியே ஒன்றை ஒன்று உரசாமல் சுற்றும் ஜோடி இந்த விண்மீன். இதில் ஒன்று வெள்ளைக்குள்ள வகை, மற்றொன்று சிவப்பு ராட்சச வகை விண்மீனாகும்.

கை பிடித்து விளையாடும் நட்சத்திரம்: குழந்தை, சிறுவர், பதின்வயது, இளமை, நடுத்தரவயது, மூப்பு என நமது வாழ்கையில் பல வளர்ச்சி கட்டங்கள் உள்ளதுபோல விண்மீனும் பல்வேறு கட்டங்களைத் தாங்கி செல்லும். இளம் வயதில் சூரியன்போல ஜி வகை விண்மீனாக இருக்கும்.

இந்த நிலையில் அதன் மையத்தில் மீ பெரும் வெப்பமும் அழுத்தமும் ஏற்படும். அழுத்தத்தினால் விண்மீன்களின் கருவில் ஹைட்ரஜன் அணுக் கருக்கள் இணைந்து கருப்பிணைவு வினையின் வழியே ஹீலியம் அணுக்கரு உருவாகும். கருபிணைவு நிகழ்வு காரணமாகத்தான் விண்மீன்கள் ஒளிர்கின்றன.

பின்னர் அதன் கருவின் உள்ளே ஹைட்ரஜன் தீர்ந்து போனதும், நடுத்தர வயது நபர்போல தொந்தி பெரிதாகி, சிவப்பு ராட்சச விண்மீனாக உருவெடுக்கும். விண்மீனின் வெளிப்புறம் பலூன்போல விரியும்; மையம் சிறுக்கும்.

அழுந்திய மையத்தில் கூடுதல் வெப்பமும் அழுத்தமும் உருவாகும். இந்த மீ வெப்ப அழுத்த நிலையில் ஹீலியம் அணுக்கள் கருப்பிணைவு செய்து கார்பனை உருவாக்க முடியும். இதுவே சிவப்பு ராட்சச விண்மீன் நிலை.

மையத்தில் ஹீலியமும் தீர்ந்து முழுவதும் கார்பனாக மாறிய பிறகு இந்த வகை விண்மீனின் ஆயுள் உப்பு சப்பில்லாத தலைநரைத்த இறுதி நிலைக்குச் சென்றுவிடும். இந்த நிலையில் கரு முழுவதும் கார்பன் அணுக்கள் மட்டுமே இருக்கும். மிஞ்சும் நிறை சூரிய நிறையில் பத்தில் எட்டு பங்கைத் தாண்டாது. எனவே கார்பன்-கார்பன் கருப்பிணைவு நிகழத் தேவையான அளவு அழுத்தமும் வெப்பமும் உருவாகாது. காலப்போக்கில் மிகு அழுத்தத்தில் கார்பன் வைர வடிவம் பெரும். இதுவே வெள்ளைக்குள்ள விண்மீனாகும்.

உருவம் சிறிது என்றாலும் T CrB வெள்ளைக்குள்ள விண்மீனின் ஈர்ப்பு ஆற்றல் வலியது. இதனால் சிறுவர்கள் எதிரெதிர் திசையில் நின்று கைப்பிடித்துச் சுழன்று விளையாடும் தட்டாமாலை போன்ற வடிவத்தை 228 நாட்களுக்கு ஒருமுறை இந்த வெள்ளைக்குள்ள விண்மீன் T CrB சிவப்பு ராட்சச விண்மீனுடன் கொண்டிருக்கும்.

அப்போது இரண்டுக்கும் இடையில் உள்ள பொருள் ஸ்ட்ரா வைத்து உறிஞ்சுவது போல, கவர்ந்து இழுக்கப்படும். மேற்கொண்டு விண்மீன் எப்படி வெடித்துச் சிதறும் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்