‘‘நாம்! நம் பொறுப்பு” என்பதை உறுதி செய்யும் கல்வி

By கே. பாரதி

சென்னை மாநகராட்சி பள்ளிகள் சிலவற்றில் மழலையர் மாண்டிசோரி கல்வி கற்றுத் தரப்படுகிறது. வகுப்பில், குழந்தைகள் காலையில் வந்தவுடன் காலணிகளை முறையாக வரிசையில் கழற்றி வைத்துவிட்டு வகுப்புக்குள் நுழைவார்கள். வகுப்பின் மூலையில் அவரவர்களுக்கான சிறு சதுர வடிவ பாய்கள் இருக்கும். அவற்றை அவர்களே எடுத்துக் கொண்டுபோய் தரையில் வைத்து நிதானமாக விரித்து நடுவில் அமர்வார்கள். பாய்களை மிதிக்கக் கூடாது என்று அவர்களுக்கு ஏற்கெனவே சொல்லித் தரப்பட்டிருக்கிறது.

பாய் என்பது அவர்களுக்கான இட எல்லை (Space). தன்னைப் போலவே மற்றவர்களுக்கும் எல்லை உண்டு என்பதை இவர்கள் புரிந்து கொள்கிறார்கள். மற்றவர் பாயையும் மிதிக்காமல் இடைவெளியில் நடந்து போவார்கள். அவர்களுக்குக் கல்வி புகட்டும் உபகரணங்கள் கைக்கு எட்டும் உயரத்திலும் அவர்களால் தூக்கக் கூடிய கன அளவிலும் இருக்கும்.

அன்றைக்கு செய்ய வேண்டிய தன் செயல்பாட்டை அவர்களே தீர்மானிக்கிறார்கள். குறும்புத்தனமோ, விளையாட்டுத்தனமோ, அலட்சியமோ இல்லாமல் உபகரணத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆழ்ந்த கவனத்துடன் செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.

இந்த அனுபவத்தை எடுத்து சொன்னபோது “இரண்டரை வயது குழந்தையை அப்படி கட்டுப்படுத்த முடியுமா என்ன? அது இயற்கைக்கு விரோதமானது” என்று நண்பர் ஆவேசப்பட்டார். “குழந்தை உளவியலைக் கூர்ந்து கவனித்து மரியா மாண்டிசோரி அம்மையார் உருவாக்கிய செயல்பாடுகள் இவை. அதனால்தான் அவர்களால் ஒன்றுபட்டு ஈடுபட முடிகிறது” என்றேன்.

இனிமேல் அடிக்க மாட்டான் மிஸ்! - பொட்டுக்கடலை இடிப்பது, கேரட் நறுக்குவது போன்ற அன்றாட பயிற்சிகளை ஆர்வத்துடன் செய்வார்கள். உடைத்த கடலைப் பொடியை சுற்றியுள்ள குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு மிஞ்சி இருப்பதை தங்கள் வாயில் போட்டு சுவைப்பார்கள். இந்த எளிய செயல்பாடுகள் மூலம் குழந்தைகள் “நான்” என்பதிலிருந்து “நாம்” என்கிற உணர்வு நிலைக்கு இயல்பாக மேம்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு சமயம் மாண்டிசோரி வகுப்பில் புதிதாக சேர்ந்திருந்த சிறுவன் மற்றொரு சிறுவனை அடித்து விட்டான். குழந்தையின் தவறை உணர வைக்க அடித்த சிறுவனை மென்மையாக அப்புறப்படுத்தி சுவர் ஓரமாக நிற்கச் சொன்னார் மாண்டிசோரி ஆசிரியர்.

அடி வாங்கின சிறுவனை எழுந்து அடித்த சிறுவனின் அருகில் போய் “இனிமேல் என்னை அடிக்க மாட்டேதானே?” என்று கேட்டான். "ஆமாம், அடிக்க மாட்டேன்” என்றான் அவன். "மிஸ், அவன் இனிமேல் என்னை அடிக்கமாட்டான் மிஸ். அவனை என் பக்கத்திலேயே உட்காரச் சொல்லுங்க” என்று சொல்லுவிட்டு அவன் கையை பிடித்து அழைத்து வந்து அருகில் அமர்த்திக்கொண்டான். இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டவர் மாண்டிசோரி ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பவரான உமா சங்கர்.

உமா சங்கர்

நாம் என்பது இப்படி இளம் நெஞ்சங்களில் விதைக்கப்படும் போது பிறகு ஒரு போதும் அதை எவராலும் அசைக்க முடியாது என்கிறார் இந்த கல்வியை எளிய மக்களுக்குக் கொண்டு செல்லும்பத்மினி கோபாலன். அறக்கட்டளை மூலம் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் ஒருசில அரசு பள்ளிகளிலும் இந்த சமத்துவ கல்வியை விதைத்தவர் இவர்.

பத்மினி கோபாலன்

மனிதப்பிறவி எப்படிப்பட்டது? - இதையே குறையாக நினைப்பவர்களும் உண்டு. “வீட்டிலே எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யறான்" என்றார் ஒரு சிறுவனின் தாய். "அதிலே உங்களுக்கு மகிழ்ச்சிதானே” என்று கேட்டிருக்கிறார் ஆசிரியர். "நம்ம வீட்டு வேலையை செஞ்சா பரவாயில்லை. அடுத்த வீட்டு ஆயாவுக்கும் எல்லா வேலையையும் செய்யுறான். ஆயா முடியாம இருக்காங்க.

செய்தா என்னதப்புன்னு கேட்கறான்" என்றார் குற்றம் சாட்டும் தொனியில். மாண்டிசோரி முறையின் மகத்துவம் இது என்று புரிந்து வைத்திருந்த ரீனா டீச்சர் புன்னகைத்துக் கொண்டார். இப்படி குழந்தைகள் வெளிப்படுத்தும் மகத்துவத்தை புரிந்து கொள்ளாமல் அதையே குறையாக நினைப்பவர்கள் ஒருசிலர்தான்.

பெரும்பாலோர் தங்கள் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வதையும் பிறருக்கு பொறுபேற்பதையும் குறித்து பெருமைபடுகிறார்கள். “மனிதன் அடிப்படையில் ஒரு உயர்ந்த பிறவிதானா அப்படி இருந்தால் ஏன் இத்தனை ஜாதி மத வேற்றுமைகள், சண்டை சச்சரவுகள்? என்று எனக்கு எப்போதும் சந்தேகம் உண்டு.

மாண்டிசோரி கல்வி முறை குழந்தைகளுக்குள் பிறவியிலேயே இயல்பாக இருக்கும் உன்னத பண்புகளை வெளிக்கொண்டுவரும் அதிசயத்தைப் பார்க்கிறேன். மனிதன் அடிப்படையில் ஒரு மேன்மையான பிறவிதான் என்று இப்போது நம்புகிறேன்” என்கிறார் பத்மினி கோபாலன். வேற்றுமைகளைக் களையும் இந்த கல்வி முறையை மேலும் பரவலாக்க சென்னை மாநகராட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருவது பாராட்டுக்குரியது.

- தொடர்புக்கு: bharathichandru14@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE