கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் அன்பிற்கினிய மாணவர்கள் திளைத்துக் கொண்டிருப்பீர்கள். அதே நேரத்தில் கொளுத்தும் வெயில் வெளியே சுற்றித்திரிய முடியாதபடி வாட்டி வதைக்கிறது. வழக்கமாக பள்ளிகளில் மாணவர்களுக்கான கோடை சிறப்பு முகாம்கள் நடைபெறுவதுண்டு.
சில தனியார் பள்ளிகள் சிறார் தங்கி பயிலும் சிறப்பு பயிலரங்குகளைக்கூட கூடுதல் கட்டணம் வசூலித்து ஏற்பாடு செய்வதுண்டு. அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பல திறந்தவெளி பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும். இதுபோக உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும்.
இதனிடையில், தற்போது இயல்பைக் காட்டிலும் கூடுதலாக வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுவியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான வகுப்புகள், நிகழ்ச்சிகளைத் தவிர்த்திட தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
முற்றிலும் இலவசம்: அப்படியானால், இந்த கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க வேறு வழியே இல்லையா? தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் ‘குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் மே - 2024’ சிறப்பு உள்ளரங்கு நிகழ்ச்சி இதற்கான பதிலை கோலாகலமாக அளித்து வருகிறது.
» உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
» பெரியார் பல்கலை., துணைவேந்தரை பணிநீக்கம் செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில் காலை 11 முதல் மதியம் 12:30 மணிவரையிலும், மதுரை புது நத்தம் சாலை பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் காலை 11 முதல் மதியம் 1 மணிவரையிலும் நூல் வாசிப்பு மற்றும் கலந்துரையாடல், சிறார் சினிமா திரையிடல், மேஜிக் காட்சி, நாடக பயிற்சி, ஓவிய பயிற்சி உள்ளிட்ட பலவிதமான கலைகள் முற்றிலும் இலவசமாக துறைசார் நிபுணர்கள் மூலம் மே 1 முதல் மே 31 வரை கற்பிக்கப்பட்டு வருகிறது.
நூலகம் வர பொய் சொல்லும் பிள்ளைகள்! - இது பற்றி அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் முனைவர் எஸ். காமாட்சி கூறுகையில், “வாசிப்பின் மீது ஆர்வமூட்டவும், ஒயிலாட்டம், பொம்மலாட்டம் போன்ற தமிழர் பாரம்பரிய கலைகளை அறிமுகப்படுத்தவும், நவீன அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயிற்றுவிக்கவும், உடல் ஆரோக்கியத்தைப் பேண யோகா மற்றும் உடற்பயிற்சி சொல்லித்தரவும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் இந்த மே மாதம் முழுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பெற்றோரைவிடவும் தாத்தா பாட்டிகள் தங்களது பேரக்குழந்தைகளை அத்தனை வாஞ்சையுடன் இங்கு அழைத்து வருகிறார்கள். குழந்தைகளும் பயிலரங்கில் பங்கேற்ற பிறகும் இங்கே நூலகத்திலேயே கூடுதல் நேரத்தை கழிக்க ஆசைப்படுகிறார்கள். இன்று மேலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தனது பேரன் பொய்சொல்லி தன்னை காலை சீக்கிரமே அழைத்து வந்துவிட்டதாகச் சற்று முன்புதான் ஒரு முதியவர் சொல்லி சிரித்தார்.
பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி நவீன தொழில்நுட்பத்திலும் மாணவர்களை மெருகேற்ற அமெரிக்க தூதரகத்துடன் இணைந்து கியூப் சாட் என்னும் சிறியரக செயற்கைக்கோள் வடிவமைப்பு கற்றுத்தரப்பட்டது. வரும் மே 27-29வரை ரோபோடிக்ஸ் பயிற்சி வகுப்பு நடைபெறவிருக்கிறது. முகாமின் நிறைவாக மே 31 அன்று கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் பற்றிய வினாடி வினா போட்டி நடத்தப்படும்” என்றார்.
ஆடி, பாடி, வாசி! - வெயிலின் தகிப்பிலிருந்து தப்பித்து உயர்தர ரகத்தில் உள்வடிவமைப்பு செய்யப்பட்ட குலுகுலுவென குளிரூட்டப்பட்ட அறைகளில் விடுமுறையை மதுரையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உல்லாசமாகக் கழிப்பதாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் முனைவர் வி.தினேஷ் குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “வாசி வாசி என்று குழந்தைகளை நிர்ப்பந்திப்பதால் பயனில்லை. அதுவே வாசிப்பை நோக்கி ஈர்க்கக்கூடிய சூழலில் குழந்தைகள் ஆடி, பாடி நேரம் கழிக்கும்போது தன்னை அறியாமல் புத்தகங்களால் கவரப்படுகிறார்கள் என்பதை இந்த முகாமில் கண்கூடாகக் காண்கிறோம்.
தினந்தோறும் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியின் தகவலையும், புகைப்படங்களையும் எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றுகிறோம். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எந்த கட்டணமும் இன்றி பங்கேற்கலாம். கதை எழுதுதல், கலைப்பொருட்கள் வடிவமைத்தல், குறும்படம் தயாரித்தல், ஓவியம் வரைதல் என இந்த மாதம் முழுவதும் குழந்தைகள் கற்ற அனைத்தையும் மே 31ஆம் தேதி கலை நிகழ்ச்சியாக மேடை ஏற்றவிருக்கிறார்கள்” என்றார்.
கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையிலும் குதூகலமாகவும் கழித்திடக் குழந்தைகளுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்!
- தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
14 hours ago
வெற்றிக் கொடி
14 hours ago
வெற்றிக் கொடி
14 hours ago
வெற்றிக் கொடி
14 hours ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
18 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago