மூடநம்பிக்கைகளை விரட்டும் அறிவியல் ஆராய்ச்சிகள் | தேசிய அறிவியல் நாள் 2024

By ஹேமாவதி

புதுடெல்லியில் 1995 செப்டம்பர் 21 அன்று ஒரு கோயில் சாமியார் ஒரு கரண்டி நிறைய பால் எடுத்து அதை பிள்ளையாருக்கு ஊட்டினார். ஊட்டிய பால் மறைந்து போவ தைக் கண்டார். அதிர்ச்சியுற்றார். பிள்ளையார் பால் குடித்தது அதிசயம் என்று பிரமிக்கப்பட்டது. விரைவில் இந்நிகழ்வு வெளி உலகிற்குப் பரவியது.ஆம். கடவுளுக்கு தாகம் ஏற்பட்டுள்ளது.

தாகத்தை தீர்ப்பது பக்தர்களுடைய கடமை என்று நினைத்து அங்குள்ள பல கோயில்களில் பிள்ளையாருக்கு பால் கொடுக்க மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் பக்தியுடன் நின்றனர். இதை, ’கடவுள் பால் குடிக்க கற்றுக் கொண்டாரா?!’, ’கடவுளின் வினோத .தாகம்!’, ’சிலைகள் பால் குடிப்பது அறிவியல் உண்மை!’ என்று தலைப்புகளிட்டு இந்திய மற்றும் உலக பத்திரிகைகள் மேலும் இந்நிகழ்வை தூண்டி விட்டன. இச்செய்தி காட்டுத் தீ போல அணையாமல் பரவியது.

இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவின் எல்லா மாகாணங்கள், இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இது பரபரப்பு செய்தியானது. கூட்டம் கூட்டமாக மக்கள் பால் குடங்களுடன் கோயில்களை நோக்கி விரைந்தனர். பால் விலை உடனடியாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பால் விற்பனைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அடுத்த சில நாட்களுக்கு இந்தியாவின் ஏழை பச்சிளம் குழந்தைகளுக்குப் பால் கிடைக்கவில்லை.

அறிவியலால் அமைதி திரும்பியது: நிஜமாகவே பிள்ளையார் பால் குடித்தாரா? அதன் பின்னால் உள்ள உண்மை என்ன? இச்செயல்பாட்டின் அறிவியல் பின்னணியை விஞ்ஞானிகள் கௌகர் ராஜா, ஜெயராமன் இருவரும் தொலைக்காட்சியில் விளக்கினார்கள். உடனுக்குடன் அறிவியல் செய்தி எல்லா தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் பரவலாக வெளியிடப்பட்டது.

நீர் உறிஞ்சாத திட பரப்பில் நீர்த் திவலை உப்பிக்கொண்டு நிற்கும் பொழுது நாம் அதனை விரலால் ஒரு தடத்தில் இழுத்து விடுவது உண்டு தானே. அத்தடத்தில் நாம் இழுக்கும் தூரம் வரைக்கும், இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்து தானே நீர் ஒடி வரும்? இச்செயல்பாடு அறிவியலில் தந்துகி கவர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. வேரில் இருந்து தாவர உச்சிக்கு நீர் ஏறுவதும், குளித்துவிட்டு உடம்பை துவட்டும் பொழுது துண்டு ஈரமாவதும் இத்தந்துகி கவர்ச்சியால் நிகழும் நிகழ்வுகளே. அதுபோன்றது தான் பிள்ளையார் பால் குடித்ததும்.

கரண்டியில் பாலை எடுத்து சிலையின் வாய்க்கு அருகில் வைக்கும் பொழுது பரப்பு இழுவிசை என்ற திரவப்பண்பு அதனை சிலைக்கு அருகில் இழுக்கிறது. இரு உதடுகளுக்கு இடையில் உள்ள பள்ளத்தின் வழியாக பால் வழிந்தோடி சிலையின் உடலில் வழிந்து மிகுதியான பால் சிலைக்கு அடியில் தேங்கி நிற்கிறது. பால் வழிந்து ஓடுவதற்குக் காரணம் நாம் முன்பு கூறிய தந்துகிக் கவர்ச்சி விசையாகும்.

பால் உடலில் வழியும் பொழுது தொடக்கத்தில் சிறிதளவு பால் சிலையால் உறிஞ்சப்படலாம். அடுத்தடுத்து பால் ஊட்டும் பொழுது இச்செயல்பாடு மேலும் எளிமையாகும். முன்பு உருவாகிய பால் தடத்திலே பால் கடகடவென்று வழியும். மீதி பால் வழிந்து சிலைக்கு அடியில் குளம் போல் நிற்கும். மக்களின் பக்தி கண்கள் இதனை பார்க்கத் தவறும். கடவுள் பால் குடிக்கிறார் என்று நம்பும்.

மனப்பாடம் செய்யாதீர்! - இதேபோன்று அவ்வப்போது சில மூடநம்பிக்கைகள் புரளிகளாக நம்மை சுற்றி வட்டமிடுகின்றன. இந்தியாவில் அறிவியலைப் படித்தவர்கள் பெரும்பான்மையானவர்கள் இல்லை. அறிவியலை படித்தவர்களும் அறிவியலையும் அதன் கோட்பாடுகளையும் அறிவியல் வழி முறைகளில் செய்து பார்த்து கற்காமல் மனப்பாடம் செய்து படித்ததனால் இயற்பியல் கோட்பாடுகளையும் உணர முடியவில்லை.

இனியேனும் இளம் மாணவச்சமூகம் இயற்கை தத்துவத்தை உற்று நோக்குவது, கேள்வி கேட்பது, அறிவியல் அடிப்படையில் ஆராய்வது, விமர்சனப் பார்வையுடன் அணுகுவது, பகுத்தறிவு சிந்தனையுடன் செயல்படுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை தேவைகள் ஆகும் என்பதை உணர வேண்டும்.

இதை நம் கல்வி முறையில் நாம் பயன்படுத்த வேண்டும், பின்பற்ற வேண்டும் அதனை நாம் பரப்ப வேண்டும். இந்த அடிப்படைகள் இல்லாததினால்தான் படித்தவர்கள் கூட பிள்ளையார் பால் குடிப்பார் என்று அன்று நம்பினார்கள். இன்றும் இதுபோன்ற பல அறிவியலுக்கு புறம்பான நம்பிக்கைகள் பரப்பப்படுகிறது.

இதனால் மூடநம்பிக்கை வளர்கின்றது. கல்வி மூடநம்பிக்கையை நீக்கி அறிவியல் அறிவை தரவேண்டும். மூடநம்பிக்கைகள் நவீன சமூகத்தை வளர்த்தெடுக்காது. அறிவியலுக்கு மூடநம்பிக்கைக்குமான சர்ச்சையில் என்றுமே அரசாங்கம் மவுனியாக இருக்கக் கூடாது. அதிசயம் என்று கூறும் செயல்பாடுகளை நாம் ஒருபோதும் பரப்பக் கூடாது. இந்த அதிசயங்களைப் பரவும் வேர்களை நாம் ஆராய வேண்டும். தடுக்க வேண்டும்.

வெகுஜன வெறித்தனம் உருவாகாமல் கண்காணிக்க வேண்டும். உலகப் பிரசித்தி பெற்ற வானவியல் விஞ்ஞானி காரல் சாகன் கூறுவது போல அறிவியல் முற்றுப் பெற்றதல்ல. அறிவியல் அடிக்கடி தவறாக பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் ஒரு கருவிதான். ஆனால் நம்மிடம் உள்ள மிகச் சிறந்த கருவி அது. அது சுய திருத்தம், எப்பொழுதும் மாறும் தன்மை, எல்லாவற்றுக்கும் பொருந்துவது.

- கட்டுரையாளர்: அறிவியல் செயற்பாட்டாளர், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE