உலகின் போக்கை மாற்றிய அறிவியல் மனப்பான்மை | தேசிய அறிவியல் நாள் 2024

By ம.சுசித்ரா

பேரண்டத்தில் உள்ள சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த பூமியில்தான் மனிதர்கள் வசிக்கிறோம். அப்படியானால் நடுவில் உள்ள சூரியனைச் சுற்றி நீள்வட்ட பாதையில் பூமி உட்பட 8 கோள்களும் சுழன்று கொண்டிருக்கின்றன இல்லையா! ‘சந்திரயான் - 3, ஆதித்யா எல்-1 எல்லாம் விண்ணில் செலுத்திவிட்ட காலத்தில் இதென்ன புதுசா சொல்லிக்கிட்டிருக்கீங்க. தெரிஞ்சதுதானே’ என்கிற உங்கள் மனதின் குரல் சத்தமாகக் கேட்கிறது.

இதுபோன்ற விண்வெளி சாதனைகளை படைக்கத் தொடக்கப்புள்ளியாக இருந்தவர்கள் ஒரு காலத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது தெரியுமா? நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்பதுபோல யார் எதிர்த்தாலும் அறிவியல் உண்மை உண்மையே என்று பல அறிஞர்கள் அறிவியல் மனப்பான்மையுடன் போராடியதன் பலனைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம். அறிவியல் தெரியும். அதென்ன

அறிவியல் மனப்பான்மை? - அறிவியல் மனப்பான்மை என்பது ஒரு வாழ்க்கை முறை - ஒவ்வொரு தனிநபரும் சமூகமும் கூட்டாக சிந்தித்து இயங்கும் முறை. இதில் கேள்வி எழுப்புதல், உண்மையை உற்று கவனித்தல், சோதனை செய்தல், அனுமானித்தல், அலசி ஆராய்தல், இவற்றின் வழியாக கண்டறிந்த உண்மையை பிறகு எடுத்துச் சொல்லுதல் என்ற அறிவியல் முறையை பின்பற்றுதல் என்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ‘கண்டறிந்த இந்தியா’ புத்தகத்தில் எழுதினார். இதன் சுருக்கத்தைத்தான் திருவள்ளுவர், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்றார்.

மத்தியில் பூமி அல்ல சூரியன்: இத்தகைய அறிவியல் மனப்பான்மையை, மனிதநேயத்தை, எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் உத்வேகத்தை வளர்த்தெடுத்து சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமக்களின் கடமை என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

அறிவியல் மனப்பான்மை கொண்ட மனிதர்களினால்தான் சமூகம் வளர்ச்சி அடைந்துள்ளது. அவ்வாறு தங்களது அறிவியல் கண்ணோட்டத்தின் வழியாக உலகின் போக்கை மாற்றிய சில அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் குறித்தும் பார்ப்போம் வாருங்கள்.

ஆரம்பத்தில் சொன்ன சூரியக்குடும்பம் விஷயத்துக்கே முதலில் வருவோம். 16-ம் நூற்றாண்டு முன்புவரை பிரபஞ்சத்தின் மையத்தில் பூமி இருப்பதாகத்தான் நம்பப்பட்டது. சமய, சாத்திரங்கள் அப்படித்தான் கூறின. புவி மையக் கோட்பாட்டை மறுதலித்து போலந்து நாட்டு வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ் சூரியக்குடும்ப கோட்பாட்டை முன்வைத்து 1543-ல் ‘On the Revolutions of the Celestial Spheres’ நூலை வெளியிட்டார். அவரது ஆய்வு நூலுக்கு கத்தோலிக்க தேவாலயம் அன்று தடை விதித்தது.

அதன் பிறகு அரை நூற்றாண்டு கடந்து இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி தனது தொலைநோக்கி மூலம் இன்னும் காத்திரமாக சூரிய மைய கோட்பாட்டை நிரூபித்துக்காட்டினார். வியாழன் கோளின் நிலவுகளெல்லாம் வியாழனைத்தான் சுற்றி வருகின்றனவே தவிர்த்து பூமியை அல்ல என்று அவர் ஆதாரத்துடன் காட்டினார்.

இப்போது மதவாதிகள் மேலும் கோபமடைந்தனர். அதன் பின்னர் தனது வாழ்நாள் முழுவதும் கலிலியோ வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். அவர் துன்பப்பட்டாலும் அவர் கொண்டிருந்த அறிவியல் மனப்பான்மை உலகிற்கு விண்வெளி ஆராய்ச்சிக்கான கதவுகளை அகலத்திறந்து விட்டு அறிவியல் விடுதலை காற்று வீசச் செய்தது.

தொழில்நுட்பமும் மனிதனும்: அடுத்து, இன்று பொறியியல், தொழில்நுட்பத் துறைகளில் உலகம் கண்டுவரும் அபரிமித வளர்ச்சிக்குத் தொடக்கப்புள்ளி எது என்று அறிந்து கொள்வோமா? பொருள்களின் இயக்கத்தை விளக்கிய நவீன இயற்பியல்தான் அது. ஐசாக் நியூட்டன் முன்வைத்த இயக்க விதிகளின் மூலம்தான் ஒரு பொருளை இயக்க, விசை முக்கியம் என்று மனிதர்கள் உணரத் தொடங்கினர்.

ஆரம்பகால போக்குவரத்து வாகனமான நீராவி இயந்திரம் தொடங்கி இன்று நம்மை அதிவேகமாக ஓட்டிச்செல்லும் மோட்டார் வாகனங்கள், விமானம்வரை நியூட்டன் விதிகளை அடியொட்டி விரிவுபடுத்தப்பட்ட அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடே. நியூட்டன் விண்வெளி ஆராய்ச்சியிலும் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு வித்திட்டார்.

பிரபஞ்சத்தை புரிந்துகொள்ளவும், தொழில் நுட்பத்தை வளர்க்கவும் துணைபுரிந்தவர்கள் இருக்கட்டும் முதலில் மனித இனம், பிற உயிரினங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா? இயற்கை தேர்வு (Natural Selection) மூலம் ஒவ்வொரு உயிரினமும் எப்படி காலத்துக்குக் காலம் மாற்றம் கண்டு வருகிறது என்று பரிணாம வளர்ச்சி கோட்பாடு மூலம் டார்வின் விளக்கினார்.

மனிதன் இறைவனால் படைக்கப்பட்டான் என்ற கற்பிதத்தை 19-ம் நூற்றாண்டில் டார்வினின் அறிவியல் மனப்பான்மை துணிச்சலாகப் புரட்டிப்போட்டது. இதனை நிரூபித்துக்காட்ட அவர் புதைபடிமங்கள், உடற்கூறு ஒப்பாய்வு, மூலக்கூறு உயிரியல் (molecular biology) போன்ற பல அறிவியல் முறைகளை துணைக்கு இழுத்தார்.

அதன் பிறகே மருத்துவத்துறையும் மளமளவென வளர்ச்சி கண்டது. கரோனா பெருந்தொற்று போன்ற அபாயகரமான சூழலில் மருந்துகளும், தடுப்பூசியும், சுகாதாரமும் முக்கியம் என்கிற புரிதல் மனிதக்குலத்திற்கு இன்று வந்துள்ளது என்றால் அதற்கு டார்வின் கொண்டிருந்த அறிவியல் மனப்பான்மை முக்கிய மைல் கல். அதையும் தாண்டி மரபியல், சூழலியல், நவீன வேளாண்மை என மனித சமூகம் தனது அறிவு பரப்பை விரிவுபடுத்திக்கொள்ள முக்கிய காரணி அவர்.

இருட்டைக் கண்டு அஞ்சி அஞ்சி வாழ்ந்த மனித சமூகத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சியது மின்சாரம் எனும் மகத்தான கண்டுபிடிப்பு. மின் ஒளி, தொடர்பாற்றல், போக்குவரத்து வசதி, கணினி தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற பல்துறைகள் 1821-ல் முதல் எலெக்ட்ரிக் மோட்டாரை மைக்கேல் பாரடே கண்டுபிடித்த பிறகே வேகம் எடுத்தன.

இப்படி பல நூறு அறிவியலாளர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வளர்த்தெடுத்த அறிவியல் மனப்பான்மையின் பலனைத்தான் இன்று நாம் ஒவ்வொருவரும் அனுதினம் அனுபவித்து வருகிறோம். நாமும் அறிவியல் மனப்பான்மையுடன் செயலாற்றுவதன் வழியாக மட்டுமே முற்போக்கான, முன்னேறிய சமூகமாக உயர்த்தெழ முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE