தாவரங்கள் பேசுமா? ஆம்! தாவரங்கள் பேசுகின்றன. அவற்றின் உடல்மொழியின் மூலம் நாம் அதை உணர்ந்துகொள்கிறோமா என்பதை சிந்திப்போம். காற்றடித்தால் ஆடி மாதம்.
வெயிலடித்தால் சித்திரை. பனி பெய்தால் மார்கழி. மழை பொழிந்தால் ஐப்பசி என காலங்கள் நமக்கு உணர்த்தப்படுவது போல தாவரங்களும் சில செய்திகளை உணர்த்துகின்றன.
அவற்றின் உடல்மொழியின் மூலம்தான் முன்னோர்கள் சூழலின் நிலையையும், மண்ணின் வளத்தையும் அறிந்து பயன்படுத்தத் தொடங்கினர். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாம் தாவரங்களை உற்று நோக்குவதைக் குறைத்துவிட்டோம். இதனால்தான் அவற்றின் உடல் மொழியை உணர்ந்து கொள்ள முடியாமல் போனோம். இந்த இடைவெளியை நிரப்ப ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய எளிமையான பழக்கம் எதுவென சிந்தியுங்கள்.
பேசும் தாவரங்கள்: குழந்தைகள் முன்னிலையில் செடிகளையும் மரங்களையும் வளர்ப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அவை உணர்த்துவதை உணர இதுவே உன்னத வழி. சரி நாம் உணரத் தவறிய உடல் மொழிகள் உள்ளனவா எனப் பார்ப்போமா?
நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை,
கடை நிலம் எருக்கு! என்பது வேளாண் பழமொழி.
நல்ல நிலத்தில் கொழுஞ்சியும், நடுத்தர நிலத்தில் கரந்தையும், தரமற்ற நிலத்தில் எருக்கஞ் செடியும் வளரும். எனவே ஒரு நிலத்தின் தன்மையை அந்நிலத்தில் வளரும் தாவரங்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். சிறிதும் பெரிதுமான புல் இனங்கள் பசுமையாக முளைத்து வரும் மண் விவசாயம் செய்ய உகந்த மண்.
நிலத்தடி நீர்மட்டம் கூறும் தாவரங்கள்: குறைந்த ஈரப்பதம் உடைய மண்ணில் வேலமரம், எருக்கு, கற்றாழையையும், மட்கு அதிகமுள்ள மண்ணில் காளான், குறிஞ்சிப்பூ செடியையும், சதுப்பு நிலத்தில் சுரப்புன்னை, அலையாத்தி, தாழைமரத்தையும், உவர் மண்ணில் பனை, சவுக்கு, தேவதாரு, கள்ளிச் செடியையும் காணலாம்.
உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம் உள்ள பகுதிகளில் வேம்பு, அசோக மரம் புளியமரமும், ஆழமான நிலத்தடி நீர் மட்டம் இருக்கும் இடங்களில் ஆவாரை, பீளை, கிலுவையும் காணப்படும். அதுபோல நீர் நிலைகளை முழுமையாக ஆக்கிரமித்து நீர்வாழ் தாவரங்களும், பாசிகளும் மலர்ந்து (Algal Bloom) படர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். பாஸ்பேட் மற்றும் நைட்ரேட் அதிகரித்து ஊட்டச்சத்து மாசுபாடு (Eutrophication) அடைந்திருப்பதை நமக்கு அது உணர்த்துகிறது.
பாறைப்பரப்பு, சுவர்கள் மற்றும் மரங்கள் மீது படர்வதும் பூக்கள் அற்றதுமான மிகச் சிறிய தாவரமான மரப்பாசி அல்லது கற்பாசி (Lichens) இருக்கும் இடங்களில் மாசற்ற காற்று உள்ளதாக அறியலாம்.
தாவரத்தின் தரைமேல் பகுதி வான்வெளி நோக்கியும் வேர் பகுதி புவி நோக்கியும் ஏன் வளர்கிறது என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் தோன்றியிருக்கலாம். அவை சூரிய ஒளி சார்ந்தும், புவியீர்ப்பு விசை சார்ந்தும் வளர்கின்றன. தொட்டால் சிணுங்கி தாவரத்தின் இலைகளை நாம் தொட்டவுடன் அவற்றின் இலைகள் மூடிக்கொண்டு தளர்வுறுகின்றன.
வீனஸ் பூச்சி பிடிப்பான் தாவரம் (Venus fly trap) தன் மீது பூச்சி வந்து அமர்ந்தவுடன் அவற்றை மூடி பிடித்துக் கொள்ளும். இத்தகைய செயல்களும் தொடு உணர்வுக்கு பதில் விளைவாக இருக்கின்றன. இவ்வாறு தாவரங்கள் தூண்டல்களுக்கு ஏற்ப துலங்களை வெளிப்படுத்துவதும் உரையாடல் தான்.
1978-ல் வெளிவந்த தமிழ் சினிமா பாடலான "பூவரசம் பூ பூத்தாச்சு..." அறியாதவர்கள் இருக்க முடியாது. கிணற்று மேடுகளில் இருக்கும் பூவரசு மரம் மார்கழி மாதத்தில் பூ பூக்கும். அடுத்து வரவிருக்கும் மாதங்கள் சுப காரியங்களுக்கானவை என்பதை உணர்த்தும் அடையாளமாக பூவரசம் பூ இருந்ததை அறிய முடிகிறது.
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ தாவரங்கள் அன்றாடம் பேசிக்கொண்டே தான் இருக்கின்றன. அவற்றைக் கேட்பதற்கும், பார்ப்பதற்கும், உணர்வதற்கும் தயாராக இருந்தால் நாமும் "மலரே... குறிஞ்சி மலரே..." என மனதிற்குள் குதூகலிக்கலாம்.
- கட்டுரையாளர் ஆசிரியர் (தாவரவியல்) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago