சர்வதேச யோகா தினம்: யோகா கலையினால் மாணவர்களின் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம்!

By ஸ்ரீ. பாக்யலஷ்மி ராம்குமார்

யோகாசனம் செய்வதால் உடலும் உள்ளமும் எப்பொழுதும் உற்சாகமாவே இருக்கும். குறிப்பாக உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் என்கிறார் யோகா ஆசிரியர் யுவராஜ்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் யோகா ஆசிரியர் யுவராஜுடன் பேசியதிலிருந்து:

நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது யோகா கற்க தொடங்கினேன். ஸ்ரீநாராயணகுரு சேவாஸ்ரமத்தில் கற்றுக் கொண்டேன். என்னுடைய 19 வயதில் வகுப்புகள் எடுக்க தொடங்கினேன். யோகா செய்வதற்கு காலை 8.30 மணிக்கு முன், மாலை 4.30 மணிக்கு மேல் பயிற்சி செய்ய சிறந்த நேரம் என்பதால் பகுதி நேர வகுப்புகள் மட்டும் எடுத்தேன். என்னுடைய மாணவி யோகேஸ்வரி மாநில அளவில் யோகா போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவில் விளையாட தேர்ச்சி பெற்றபோது தான் முழு நேர யோகா வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இன்று ஸ்ரீ நாராயணகுரு சேவாஸ்ரமத்தில் தலைமை யோகா பயிற்சி ஆசிரியராக இருக்கிறேன்.

ஆண்டுதோறும் 8 மாணவர்கள் வரை தேசிய யோக போட்டிக்கு தேர்ச்சி பெறுவார்கள். கடந்த ஆண்டு நடந்த ‘கேலோ இந்தியா’ தேசிய யோகா போட்டிக்கு 9 மாணவர்கள் தமிழகத்தில் இருந்து தேர்வானார்கள். அதில் 6 பேர் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவர்கள். இதில் வெற்றி பெற்று ரொக்கப் பரிசு, பதக்கங்களும் வென்றிருக்கிறார்கள். அரசு பள்ளி மாணவி தர்ஷிணி ஒருவர்கூட என்னிடம் யோகா பயிற்சி செய்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவர் +2 முடிப்பதற்குள் தேசிய போட்டிகளில் வெற்றி பெறுவார். அதன்படி கல்லூரி சேருவதற்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவை பயன்படுத்தலாம்.

யோகா ஆசிரியர் யுவராஜ்

இளம் வயதில் உடல் பிரச்சினை

தினமும் யோகாசனம் செய்வது சிறந்தது. இன்றைய காற்று மாசுபாட்டினால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எளிதாக சுவாச பிரச்சினைக்கு ஆளாகிறார்கள் . தினமும் மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் சுவாச மண்டலத்தில் இருந்து சீரான சுவாசம் கிடைக்கும். ஆஸ்துமா, இருமல், சளி அனைத்து அடிப்படை நோய்களையும் மருத்துவரிடம் செல்லாமல் யோக மூலம் சரி செய்து கொள்ளலாம். இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக அமையும். மேலும் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் இது உதவும்.

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வாரத்தில் ஓரிரு நாட்களில் 40 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி வகுப்புக்கு ஒதுக்குவார்கள். அதிலும் மழைக்காலம், தேர்வு நேரம் என்றால் மாணவர்கள் மைதானத்திற்கு சென்று விளையாடுவது என்பது அரிதான செயல் ஆகிவிடும். பள்ளிக்கு சென்றால் பெஞ்சில் அமர்ந்தபடி பாடத்தை கவனிப்பதும் வீட்டிற்கு வந்தவுடன் வீட்டுப்பாடத்தை செய்வதும், வெளியில் சென்று விளையாடாமல் கைபேசி, தொலைக்காட்சி என்று இருந்துவிடுகிறார்கள். இதனால் உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், தேவையற்ற சதைகள் கரையாமல் தேங்கி உடல் பருமனால் தைராய்டு, நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. வயதிற்கு ஏற்ற உடல் எடை இருக்க வேண்டும் என்றால் யோகா பயிற்சி முறையாக மேற்கொள்ள வேண்டும். இதை செய்ய தவறுவதினாலேதான் சிறுவர்கள்கூட இந்த காலத்தில் அதிக உடல்பருமனோடு வயதானவர்கள் போல தோற்றமளிக்கிறார்கள். இதையெல்லாம் தடுக்க வேண்டும் என்றால் யோகா செய்ய வேண்டும். யோகா செய்வதன் மூலம் தேவையற்ற சதைகள் குறைந்து உடலும் அழகான வடிவம் பெறுகிறது.

பட்டப்படிப்பும் வேலையும்

மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலும், ஞாபக திறனும், மனதை ஒருமுகப்படுத்தும் திறனும் யோகா செய்வதன் மூலம் மேம்படும். மொத்தத்தில் இளம் தலைமுறையினர் நோயின்றி ஆரோக்கியத்தோடு வாழ்வதற்கு யோகாசனம் கைகொடுக்கும்.

யோகா மீது ஆர்வம் இருக்கும் மாணவர்கள் பிளஸ் 2 முடித்த பிறகு பிஎஸ்சி யோகா பட்டப்படிப்பு, எம்பிஏ யோகா தெரபி பட்டப்படிப்பு, டிப்ளமோ யோகா அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகள் படிக்கலாம். இதுபோன்ற பட்டப்படிப்புகளை படித்தால் மட்டும் யோகாசனம் செய்துவிட முடியாது. ஒவ்வொரு ஆசனங்களையும் செய்முறை பயிற்சி மூலம் கற்றுக் கொண்டு நாள்தோறும் செய்தால் மட்டுமே இந்த கலையை கற்க முடியும். அதை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் யோகா ஆசிரியராகலாம், தனியாக பயிற்சி வகுப்புகளும் எடுக்கலாம்.

யோகா என்பது மதம் சார்ந்த கலை அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதே என் மிகப்பெரிய கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE