மலாலாவுக்கு கெளரவ குடியுரிமை வழங்க கனடா விருப்பம்

பெண் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 வயது சிறுமி மலாலாவுக்கு கெளரவக் குடியுரிமை வழங்க கனடா அரசு முன்வந்துள்ளது.

இதன்மூலம் கனடாவின் கவுரவ குடியுரிமை பெறப்போகும் 6-வது நபர் என்ற பெருமை இவருக்குக் கிடைக்கும். இந்தத் தகவலை பாகிஸ்தான் அரசு வானொலி தெரிவித்தது.

இதற்கு முன்பு, இன வெறிக்கு எதிராக போராடிய தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா, மியான்மர் எதிர்க்கட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கி, திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் அகா கான் மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த ரவுல் வல்லென்பெர்க் ஆகிய 5 பேர் இத்தகைய குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த மலாலா, பெண்கள் உரிமை மற்றும் கல்வி உரிமை குறித்து பிரசாரம் மேற்கொண்டார். இதனால் கடந்த ஆண்டு பள்ளிக்குச் சென்று திரும்பியபோது மலாலாவை பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார் மலாலா. இந்த ஆண்டு நோபல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஐரோப்பிய யூனியனின் புகழ்பெற்ற சகரோவ் மனித உரிமை பரிசு மலாலாவுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகைக்கு இவரை வரவழைத்துப் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE