ராகுல் காந்தியின் அரசியல் செல்வாக்கு உயர்ந்துள்ளதா?
இந்தத் தீர்ப்பைச் செயலிழக்க வைக்க, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாடாளுமன்ற - சட்டப் பேரவை உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்காகப் பதைபதைக்க ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என பாஜக மூத்த தலைவர் அத்வானி தலைமையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு அளிக்கப்பட்டது. எனினும், இதுகுறித்து தீர்க்கமான கருத்தைத் தெரிவிக்காமல் இருந்தது காங்கிரஸ்.
ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, திடீரென மீடியாவைச் சந்தித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அவசரச் சட்டத்தைப் பகிரங்கமாக எதிர்த்தார். அதை முட்டாள்தனமானது என்று வருணித்ததுடன், அதைக் கிழித்து எறியவேண்டும் எனப் பொங்கினார். அவருக்கு அமெரிக்காவில் இருந்தபடியே உடனடியாக 'ரியாக்ட்' செய்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
அதன்பின், பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. பொதுச் சபையில் பேசியதைவிட, பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு நடத்தியதைவிட பல்வேறு மட்டத்திலும் அதிக கவனத்தை ஈர்த்தது ராகுல் காந்தியின் நடவடிக்கைகளும், அதற்கு பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி உள்ளிட்டோர் ஆற்றிய எதிர்வினைகளும்.
பிரதமரின் அதிகாரத்தையே பலவீனப்படுத்திவிட்டார் என ராகுல் மீது விதவிதமான குற்றச்சாட்டுகள். எதையும் கருத்தில்கொள்ளாத காங்கிரஸ், ராகுலின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதை ஒன்றிலேயே கவனத்துடன் செயல்பட்டிருப்பதற்கு, வெறும் 10 நிமிடத்தில் நடந்து முடிந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அவசரச் சட்டம் திரும்பப் பெற முடிவு செய்ததே சான்று என்கின்றது டெல்லி வட்டாரம்.
அவசரச் சட்ட விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் சொல்லும் சேதி என்ன?
இந்த விவகாரத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் செல்வாக்கு உயர்ந்துள்ளதா? மக்கள் எப்படிப் பார்ப்பார்கள்?
விவாதிக்கலாம் வாங்க.