மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொணடவர் ஜெனித்தா ஆன்டோ. 2014-ல் நார்வேயில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு துடிப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறார். சிறு வயதிலேயே போலியோ தாக்கத்தால் கால்களை இழந்த இவரை விடாமுயற்சியும் தன்னம்பிக்கையுமே கூட்டணி போட்டு இந்த உயரத்துக்கு இட்டு வந்திருக்கிறது.
திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த காணிக்கை இருதயராஜ் - ஜெயராணி தம்பதியின் மூன்றாவது மகள் ஜெனித்தா ஆன்டோ. காணிக்கை இருதயராஜ் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். முப்பத்தாறு வயதை எட்டிப் பிடித்திருக்கும் ஜெனித்தாவுக்கு மூன்று வயதிலேயே கால்கள் இரண்டும் போலியோவால் முடங்கிப் போனது. ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த மகளுக்கு கால்கள் முடங்கிப் போனதால் இருதயராஜும் ஜெயராணியும் கலங்கிப் போனார்கள்.
’அழகுபெத்த பொம்பள புள்ளைய வீட்டுக்குள்ள முடமா வைச்சிக்கிட்டு இருந்து என்ன பண்ண..?’ என்று உறவுகள் ஒரு பக்கம் உச்சுக் கொட்டின. இருதயராஜும் செல்ல மகள் மறுபடியும் ஓடியாட மாட்டாளா என்ற தவிப்பில் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் ஓடினார். எத்தனையோ வைத்தியங்கள்... எண்ணற்ற மருந்துகள். எதுவுமே அந்தக் குழந்தை எழுந்து நடக்க உதவவில்லை. கடைசியில், ‘முதுகுத் தண்டுவடத்துல பாதிப்பு ஏற்பட்டிருக்கு. அதனால இந்தக் குழந்தைக்கு இடுப்புக்குக் கீழே செயல்பாடு இருக்காது’ என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். பிறகு நடந்ததை இருதயராஜ் விவரித்தார்.. “எங்க பிள்ளை இனி ஓடியாடி விளையாட முடியாதுன்னு டாக்டர்கள் சொன்னப்ப நாங்க ரெண்டு பேரும் இடிஞ்சு போயிட்டோம். பள்ளிக்கூடத்துல சின்னப் புள்ளைங்க ஓடியாடி விளையாடுவாங்க. சில நேரங்கள்ல, அந்தக் குழந்தைகள் கீழே தவறி விழும்போது ‘பாத்துடா.. கைகால் அடிபட்டுறப் போகுது’ன்னு பதறியிருக்கேன். என் பிள்ளை அந்த சந்தோஷத்தை எல்லாம் பறிகுடுத்துட்டாளேன்னு நினைச்சப்ப மனசு கனத்துப் போச்சு. ஆனாலும், நானும் ஜெயராணியும் நம்பிக்கை இழக்கல. புள்ளைய எப்படியாச்சும் எதிலாவது ஒரு துறையில திறமையான மனுஷியா ஆக்கிடணும்னு எங்களுக்குள்ளேயே தீர்மானிச்சிக்கிட்டோம்.
எங்க புள்ளையப் போலவே போலியோவால பாதிக்கப்பட்ட சந்திரசேகர், ஒரு கண்ணுல பார்வை இழந்த பட்டோடி இவங்க எல்லாம் கிரிக்கெட்டுல சாதனை பண்ணலையா? அதேமாதிரி நம்ம புள்ளயும் ஏன் சாதிக்க முடியாதுன்னு யோசிச்சேன். ஜெனித்தாவுக்காக நான் தேர்ந்தெடுத்த விளையாட்டு செஸ்! எனக்கும் செஸ் தெரியும்கிறதால தொடக்கத்துல நானே அவளுக்கு செஸ் சொல்லிக் குடுத்தேன். ஒரு கட்டத்துல என்னையவே அடிக்கிற அளவுக்கு அவ மூளை அற்புதமா வேலை செஞ்சுது’’
இருதயராஜ் நிறுத்த... “அதுக்கப்புறம் நான் சொல்றேன் டாடி..” என்று ஆர்வத்தோடு ஆரம்பித்தார் ஜெனித்தா.. “அப்பா - அம்மாவோட ஆசையை புரிஞ்சுக்கிட்டு, நிறைய ஹோம் ஒர்க் பண்ணுனேன். அதனால எட்டு வயசுலயே எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைச்சிட்டேன். எட்டு வயசுல மாவட்ட செஸ் போட்டியில நான் சாம்பியனா வந்தப்ப எல்லாரும் பாராட்டினாங்க. அப்பா – அம்மா அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. அன்றைக்கு வந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்தான் என்னை அடுத்தடுத்த சாதனைகளுக்கு உந்தித் தள்ளுச்சு. அதுக்கப்புறம் எத்தனை போட்டிகள்ல கலந்துக்கிட்டேன்னுகூட எனக்கு நினைவில்ல. ஆனா, அத்தனையிலும் நான்தான் ஜெயிச்சேன்.
2008-ல் ஜெர்மனியில நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துக்க இந்தியா சார்பில் ஐந்து பேருக்கு வாய்ப்பு கிடைச்சிது. அதுல எனக்கும் ஒரு இடம்! சர்வதேச அளவுல மொத்தம் 570 பேர் கலந்துக்கிட்டோம். அதில் 8 புள்ளிகளுடன் எனக்கு 25 வது ரேங்க் கிடைச்சிது. அடுத்ததா 2010-ல் ரஷ்யாவுல நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துக்கிட்டு, மாஸ்டர் வீராங்கனை (Women Canditate Master) பட்டம் வாங்கினேன். இதுக்கு நடுவுல அப்பாவுக்கு ஒரு ஆக்ஸிடென்ட். அதனால, அடுத்த வருஷம் நடந்த சர்வதேச போட்டிகள்ல கலந்துக்க முடியாம போச்சு.
இந்த வருஷம் நானும் அப்பாவும் மறுபடியும் உற்சாகமா கிளம்பிட்டோம். ஜூன் மாசம் செக் குடியரசில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் கலந்துக்கிட்டேன். இதில் பெண்களுக்கான மாற்றுத் திறனாளிகள் பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிட்டு வந்துட்டேன். இந்த வெற்றி மூலம் மகளிர் இன்டர்நேஷனல் மாஸ்டர் (Women International Master) பட்டமும் எனக்கே கிடைச்சுது. இப்ப அடுத்த கட்டமா, நார்வே ஒலிம்பியாட்சுக்கு தயாராகிட்டு இருக்கேன். இதிலும் கண்டிப்பா நான்தான் சாம்பியன்” நம்பிக்கையுடன் துள்ளுகிறார் ஜெனித்தா ஆன்டோ.
தினமும் குறைந்தது ஐந்து மணிநேரம் செஸ் பயிற்சி எடுத்துக்கொள்ளும் ஜெனித்தா, இந்தியாவின் முன்னாள் கிராண்ட் மாஸ்டர் ராஜா ரவிசேகரிடம் நேரடிப் பயிற்சியும் எடுத்துவருகிறார். ரவி சேகரிடம் 40 மூவ்கள் வரை சளைக்காமல் விளையாடுவாராம் ஜெனித்தா. சமீபத்தில் திருச்சியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் முதலிடத்தில் வந்த ஒருவருடன் கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடி ஜெயித்து அனைவரையும் அதிசயிக்க வைத்தார் ஜெனித்தா. திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஜெனித்தாவின் இந்தத் திறமையை பாராட்டி பரிசும் வழங்கி இருக்கிறார்.
“கால் முடங்கினா என்ன.. என் மனசு முழுக்கதான் தைரியம் இருக்கே. ‘எனக்கு இப்படி ஆகிருச்சே’ன்னு மனம் தளர்ந்துடாம அதிர்ஷ்டத்தை நம்பாம, எடுத்த துறையில விடாமுயற்சியோட உழைச்சா உலகம் நிச்சயம் ஒருநாள் நம்மை திரும்பிப் பார்க்கும்’’ விடை பெறுவதற்கு முன்பு ஜெனித்தா ஆன்டோ சொன்ன வெற்றியின் ரகசியம் இது!
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago