ஆடுகளம் : உள்ளம் மகிழ பல்லாங்குழி!

By கிருத்திகா தரண்

“மழை ச்சோன்னு கொட்டுது. டிவியும் பார்த்துட்டேன். போரடிக்குதும்மா. வா, போர்டு கேம் விளையாடலாம்” என்று பிள்ளைகள் கூப்பிடுகிறார்கள். விலை அதிகம் கொடுத்து வாங்கிய அத்தனை போர்டு கேம்களும் அலுத்துவிட்டன.

நாம் சிறுவராக இருந்தபோது, பொழுதுபோக்குக்கு எதுவுமே இல்லாமல் நாம் எப்படி காலம் கழித்தோம் என்று யோசிக்கும்பொழுது, பாட்டி சொல்லிக் கொடுத்த அத்தனை விளையாட்டுக்களும் நினைவுக்கு வந்தன. அவை எத்தனை தடவை விளையாடினாலும் அலுக்காத வகையில் இருந்தன. நேரம் காலம் போவது தெரியாமல் விளையாடுவோம்.

அப்புறம் என்ன? களத்தில் இறங்கி நாம் கற்றுக்கொடுக்க வேண்டியதுதான் என்று முதலில் ஆரம்பித்தது பல்லாங்குழியில்!

பல்லாங்குழி பெண்களுக்கான விளையாட்டு மட்டுமல்ல. எல்லாரும் விளையாடலாம். இது ஆபிப்ரிக்காவிலும் விளையாடப்பட்டு வருகிறது. ஆதி விளையாட்டு என்பதற்கு இதுவே சான்று. பைன் மோட்டர் ஸ்கில்ஸ் என்று குழந்தைகளில் பல மர விளையாட்டுகள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நம் பழங்கால விளையாட்டுகள் அனைத்திலும் கைக்கும் மூளைக்குமான பயிற்சி அழகாக இருக்கும் (hands, brain co-ordination).

பல்லாங்குழியில் புளியமுத்து அல்லது சோழிகளில் விளையாடலாம். சோழிகளை அடிக்கடி தொலைத்து அம்மா, பாட்டியிடம் திட்டு வாங்கிவிட்டு, கடைசியில் புளியமுத்துதான் கதி. புளியமுத்து பொறுக்க அங்கயும் எங்கேயும் அலையவேண்டாம். அந்தக் காலத்தில் வீட்டில் ஒவ்வொரு இடமும் ஒரு தொழிற்சாலைதான். அந்த அளவுக்கு வீடுகள் தன்னிறைவு பெற்றிருந்தது. புளி குத்தி விதை எடுப்பார்கள். துடைப்பம் கீற்றிலிருந்து செய்வார்கள். தேங்காய் காயவைத்து எண்ணெய் ஆட கொடுப்பார்கள். அடுப்புகூட வீட்டில்தான் செய்வார்கள். எந்தப் பொருளாதார வீழ்ச்சியும் தனி மனிதனை அதிகமாக பாதிக்காத தன்னிறைவு. ஆனால், இப்போதெல்லாம் சீனா துடைப்பம்தான் நன்றாக கூட்டுகிறதாம்.

பல்லாங்குழியில் ஆறு சோழி இல்லாவிடில் பன்னிரெண்டு சோழி ஆட்டம் உண்டு. ஒவ்வொரு குழியிலும் ஆறு சோழிகள் அல்லது பன்னிரெண்டு சோழிகளை போட்டுக்கொள்ள வேண்டும். ஏழு, ஏழு குழிகள் இருபக்கமும் இருக்கும். விளையாடுபவர் அப்படியே சோழிகளை எடுத்து ஒவ்வொன்றிலும் போட்டுக்கொண்டே வரவேண்டும். கையில் இருப்பது முடிந்தவுடன் திரும்ப அடுத்த குழி காயை எடுத்துப் போடவேண்டும். அடுத்த குழியில் காய் இல்லாதபோது, முதல் குழி சோழிகள் ஆடுபவருக்கு. இப்படி அடுத்தவரின் காய் தீரும் வரை விளையாடலாம். ஒவ்வொரு பகுதியிலும் சிறிது ஆட்ட முறைகள் மாறுவதுண்டு. வாய்ப்பேசிக் கொண்டே பாட்டி கணக்கு மாறாமல் அருமையாக ஆடுவார்கள். கணக்கு பாடங்களைச் சொல்லி கொடுக்க பல்லாங்குழியும் ஓர் அருமையான விளையாட்டுப் பாடமே, விளையாட்டு கல்வியில் பல்லாங்குழியையும் சேர்த்தால் குழந்தைகள் விளையாட்டாக விளையாட்டையும், கணக்கையும் கற்றுக்கொள்வார்கள்.

ஆப்பிரிக்க பல்லாங்குழியும் கிட்டத்தட்ட நம்மூர்போலதான் இருக்கும். பலவிதங்களில் பலகை, உலோகங்களில் பல டிசைன்களில் பல்லாங்குழி பலகை கிடைகிறது. அந்தக் காலத்தில் ஒரு வீட்டில் அழகாக, வழ வழவென வீட்டிலயே தரையில் பல்லாங்குழி குழிகள் செய்து வைத்திருந்தார்கள். யூட்யூப் காலத்தில் பல்லாங்குழி எளிதாக கற்றுக்கொண்டு குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கலாம். நல்ல விளையாட்டுகளை விட்டுவிட்டு புதுப்புது கேம்களை இன்டர்நெட்டில் தேடும் தலைமுறை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. விளையாடிப் பார்ப்போமே மனதுக்கு பிடித்த விளையாட்டை!

(களம் இறங்குவோம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்