நவநீதம் பிள்ளை யார் பக்கம்?



"ராணுவத்தினரால் தமிழ்ப் பெண்கள் அதிலும் குறிப்பாக, குடும்பத் தலைவர் இல்லாத வீடுகளைச் சேர்ந்த பெண்கள் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களுக்கும் இழிவுகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், அண்மையில் தான் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 30 சதவீத தமிழ்ப் பெண்கள், எவ்விதக் காரணமுமின்றி ராணுவத்தினர் தமது வீடுகளுக்கு அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பதாகக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். "பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை இலங்கை அரசு சகித்துக்கொள்ளக் கூடாது" எனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் ஆய்வு மேற்கொண்ட நவநீதம் பிள்ளை, "இலங்கை அரசு மென்மேலும் அதிகாரத்துவத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது" எனக் குற்றம்சாட்டியிருந்தார். அப்போதிலிருந்தே அவரது வாய்மொழி அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துவந்தது. "இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தொடர்ந்த கண்காணிப்பு தேவை" எனக் கூறியிருக்கும் அவர் வலியுறுத்தியிருக்கும் மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை:

1. தேர்தல் ஆணையம், மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட சுயேச்சையான அமைப்புகளை நியமிக்கும் அரசியலமைப்புச் சட்ட ஆணையத்தைக் கலைத்து, அண்மையில் ராஜபக்ச அரசாங்கம் கொண்டுவந்த 18-வது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும்.

2. மீண்டும் 17-வது அரசியல் சட்டத் திருத்தத்தை உயிர்ப்பிக்க வேண்டும்.

3. எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.

தமிழர்கள் மீதான கொடுமைகளை மட்டும் அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அண்மையில் இலங்கைக்குச் சென்றபோது முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் ஆகிய சிறுபான்மை மதத்தவர் தாக்கப்படுவது தொடர்பாகப் பல புகார்கள் தன்னிடம் கூறப்பட்டதாகவும் 2013 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட 227 தாக்குதல்கள் குறித்த தொகுப்பு தன்னிடம் கையளிக்கப்பட்டதாகவும் அந்த விவரங்களை அரசாங்கத்துடன் தாம் பகிர்ந்துகொள்ள இருப்பதாகவும் கூறியுள்ள அவர், "இதைச் சகித்துக்கொள்ள முடியாது. சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்" எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், தமிழர் பகுதிகளில் கல்வி, விவசாயம், சுற்றுலா முதலான பணிகளைக்கூட இப்போதும் ராணுவம்தான் செய்கிறது. ராணுவத்தின் ஒரு பிரிவாகக் காவல் துறை வைக்கப்பட்டிருந்ததற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையர் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால், தற்போது காவல் துறை தனியே பிரிக்கப்பட்டுள்ளது என்றாலும் அது இப்போதும் ராணுவ அதிகாரி ஒருவரின் கட்டுப்பாட்டிலும், அதிபரின் நேரடிக் கட்டுப்பாட்டிலும்தான் வைக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் நடந்து முடிந்திருக்கும் வடக்கு மாகாணத்தில் சிங்கள ராணுவ வீரர்கள் ஏராளமாக நிலைகொண்டிருக்கிறார்கள். இலங்கையின் உண்மை நிலவரத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்ட நவநீதம் பிள்ளை "இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்களை விசாரிக்க சுதந்திரமானதொரு விசாரணை அமைப்பை நியமிக்க வேண்டும்" என்ற சர்வதேசத்தின் வற்புறுத்தலுக்கு இலங்கை மதிப்பளிக்காததைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

"ராணுவமே தனது போர்க் குற்றங்களை விசாரித்துக்கொள்ள வேண்டும் என இலங்கை அரசு கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. 2014 மார்ச் மாதத்துக்குள், இலங்கை அரசு போர்க் குற்றம் இழைத்தவர்களை விசாரித்துத் தண்டிக்காவிட்டால், சுயேச்சையான விசாரணை ஒன்றை நடத்த வேண்டிய கடமையை சர்வதேசச் சமூகம் நிறைவேற்ற வேண்டியிருக்கும்" என எச்சரித்திருக்கிறார்.

நவநீதம் பிள்ளையின் வாய்மொழி அறிக்கை, இலங்கை அரசுக்கு ஆத்திரமூட்டுவதில் ஆச்சரியமில்லை. ஈழத் தமிழர்களில் ஒரு பிரிவினர் குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழும் ஒரு சிறு குழுவினரின் சாதனமாக விளங்கும் 'தமிழ்நெட்'இணையதளத்தைச் சேர்ந்தவர்கள் நவநீதம் பிள்ளையைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

"தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களையும் ராஜபக்‌ச ஆட்சியில் காணப்படும் பிற குறைபாடுகளையும் நவநீதம் பிள்ளை சமமாகப் பாவிக்கிறார். இன்னும் எல்.எல்.ஆர்.சி-யின் பரிந்துரைகளை வலியுறுத்துகிறார். தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினையைச் சிறுபான்மையினர் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார்" என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இலங்கை அரசு, "நவநீதம் பிள்ளை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்" என்கிறது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோ, "நவநீதம் பிள்ளை அரசாங்கத்தை மையப்படுத்தி சிந்திக்கிறவர்" என விமர்சிக்கிறார்கள். இரண்டையும் இணைத்துப் பார்க்கும்போது நவநீதம் பிள்ளை நடுநிலையோடு கருத்துகளைக் கூறியிருக்கிறார் என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியிருக்கிறது.

ரவிக்குமார், எழுத்தாளர் - தொடர்புக்கு: manarkeni@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE