உள்நாட்டு தமிழ் இலக்கியத்தை டிஜிட்டல் மயமாக்குகிறது சிங்கப்பூர் அரசு

உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரின் 50 ஆவது சுதந்திர தினம், வரும் 2015 ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. அதற்குள், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டிஜிட்டல் மயமாக்கி ஆவணப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.

கடந்த 1965 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் இத்திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கப்படும். இது தொடர்பாக 'தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்' இதழில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட மற்றும் சிங்கப்பூர் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான பாடல்கள், கவிதைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன.

இது தொடர்பாக திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண் மகிழ்நன் கூறுகையில், “தமிழ் டிஜிட்டல் புராதனக் குழு, தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்கிறது. சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் இந்தப் படைப்புகளை எளிதில் கையாள முடியும். 1800 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தமிழப் புத்தகங்கள் பதிப்பித்து வெளியிடப்படுகின்றன” என்றார்.

சிங்கப்பூர் தமிழர்கள் மற்றும் சிங்கப்பூரில் நிரந்தரமாக வசிப்பவர்களின் படைப்புகளை, தேசிய நூலக வாரியம் 500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆவணப்படுத்தியுள்ளது. இதில், கே.டி.எம். இக்பால், எம். இளங்கண்ணன், சிங்கை முகிலன் ஆகியோரின் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE