புரிசை தொடரும் பண்பாட்டு மரபு

வந்தவாசி – செய்யாறு சாலையில் சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் ஆர்ப்பாட்டம் ஏதும் இன்றிப் புரிசை வாழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், முழு கிராமமும் குழுமித் தமிழக மரபு மற்றும் நவீன நிகழ்த்து கலைகளுக்கு மேடையமைக்கிறது. புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் கடந்த பத்தாண்டுகளாகக் கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் நினைவாக நாடக விழா நடத்திவருகிறது. அவரது மைந்தர்களான காசி, சம்பந்தம் ஆகிய இருவரின் விடா முயற்சி தொடர்கிறது. அக்டோபர் 5, 6 ஆம் தேதிகளில் இவ்வாண்டு விழா நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனை விருது தேவராட்டக் கலைஞர் கண்ணன் குமாருக்கு வழங்கப்பட்டது. நிகழ்த்து கலைத் துறையில் பல்கலைக்கழக மட்டப் பேராசிரியர்கள் ரவீந்திரன், முருகேசன், இராசு ஆகியோருடன் ஊர் தலைவர்கள், மக்கள் ஆகியோர் வாழ்த்த இவ்விருது வழங்கப்பட்டது. தேவராட்டம் என்ற இனக்குழுக் கலையை நிகழ்த்து கலை வெளியில் அறிமுகப்படுத்தியது அரங்கத் துறைதான். ஜமீன் கோடங்கிப்பட்டி கிராமத்தில் இருந்து அதனை வெளிக் கொணர்ந்த மு. இரமசாமி, சென்னை நகரில் பள்ளி, கல்லூரிகளில் அறிமுகப்படுத்திய முதுசாமி, தேவிகா ஆகியோரை அவர் நினைவுகூர்ந்தார். அந்த வரலாறு இன்னும் பதிவுசெய்யப்படவில்லை.

வைகறை கோவிந்தனின் இசையின்றிப் புரிசை விழா இல்லை. நாட்டார் பாடல்களின் மணம் கமழ முற்போக்கு இயக்கங்களின் பாடல்களை மேடைதோறும் பரப்பிவரும் குழு அவருடையது. இவ்வருடத்தின் முக்கிய அம்சம் புரிசையைச் சேர்ந்த குழந்தைகளின் துடும்பாட்டம். கௌரி சம்பந்தனின் தமிழிசைப் பயிற்சி, சம்பத்குமார் மற்றும் குடியரசு அவர்களின் வீர விளையாட்டுப் பயிற்சி பெற்ற இக் குழந்தைகள் மேடையைத் தமதாக்கிக் கொண்டனர். இவ்வித்து விருட்சமாகும்.

நரேந்திரகுமார் இயக்கத்தில் அனுஷம் குழு சக்தி என்ற நாட்டிய நாடகத்தை வழங்கியது. சென்னை அரீனா மல்டிமீடியா மாணவர்கள் இயக்கிய அனிமேஷன் படங்களைத் திரையிட்டனர். பொதுவாக கிராமப்புற மேடைகளில் இடம் பெறாத இக்கலைகள் புதியதொரு அனுபவத்தைப் பெற்றிருக்கும். தொடர்ச்சியாக மதுரை நிகழ் நாடகக் குழுவின் போங்கோவின் தேசம் நாடகம் சண்முகராஜாவின் இயக்கத்தில் இடம் பெற்றது. வித்தியாசமான ஒளியமைப்புடன் நிகழ்த்தப்பட்ட இந்நாடகம் நகைச்சுவை ததும்ப இன்றைய அரசியல் கேளிக்கைகளை விமர்சனம் செய்தது. அன்றாட செய்தித்தாள் பதிவை காட்சிவடிவத்தில் நிகழ்த்திய நாடகமாக இது அமைந்தது.

இந்நாடகத்திற்கு நேர்மாறான வகையில் மரப்பாச்சி குழுவின் சுடலையம்மா நாடகம் தமிழகத்தில் எழுபதுகளின் இறுதியில் நடந்த அரச வன்முறைக்குப் பலியான சீராளனின் நினைவை மயானத் தொழிலாளியான சுடலையம்மாவின் பார்வையில் வெளிப்படுத்தியது. நீத்தார் கடன் செய்யும் பணியைத் தன் வாழ்வின் அர்த்தமாகப் பார்த்த பெண்ணின் குரல் நடுநிசியில் மேடையேறியபோது பல கணங்களில் ஒருவித ஒவ்வாமை உணர்வை உருவாக்கியதை உணர முடிந்தது.

முதல் நாள் இரவு இறுதியாக நடந்த காமன் கதைப்பாடல் லாவணி முதல் முறையாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளிவந்து நிகழ்த்தப்பட்ட அரிய நிகழ்ச்சி. ரதி – மன்மதன் திருமணச் சடங்கோடு தொடங்கிய இக்கதைப்பாடல் அரிய தமிழ்ப் பனுவலை அறிமுகப் படுத்தியது. கிட்டத்தட்ட ஒரே விதமான அடவுகளைப் போட்டபடி இருவருக்குமிடையே தர்க்கம் தொடர்ந்தது. காலையில் அவ்வடிவத்தைப் பற்றி அக்கலைஞர்களிடம் உரையாடியபோது, அவர்கள் ஊரில், இதனை ஆடியபடி வீதிகளில் செல்வார்கள் எனக் கூறினர். வீடுகளில் நிறுத்தி உரிய மரியாதை செய்வார்கள் என்பதைச் சொன்னபோது, இதற்கான மேடை இரு பக்கம் நின்று பார்க்கும் வடிவம் என்பதை உணர முடிந்தது. வளமைச் சடங்கோடு செய்யப்படும் இக்கூத்து இன்னும் அறியப்படாத உலகைக் காட்டியது.

இரண்டாம் நாள் புரிசைச் சிறுவர்களின் துடும்பு, கண்ணன் குமார் குழுவின் தேவராட்டம் ஆகியவற்றோடு தொடங்கியது. மாமரம் குழுவின் ‘பிரசாதம்’, சுந்தர ராமசாமியின் சிறுகதையை நாடகமாக்கிக் காட்டியது.

மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த கலாச்சாரக் குழு பெண் அலை என்ற கூத்தை அரங்கேற்றியது. சம்பந்தன் நெறியாள்கையில் அனைவரும் பெண்களாகக் கூத்தினை நிகழ்த்தியது இதுவே முதல் முறை. இலங்கையைச் சேர்ந்த தமிழ், சிங்கள கலைஞர்கள் பலர் இவ்விழாவில் ஆண்டுதோறும் கலந்துகொள்கின்றனர். இளைய பத்மநாதன், மௌனகுரு, ஜெயசங்கர், தர்மசிரி, பராக்கிரம நீரியல போன்றோர் பல காலமாகப் புரிசையோடு தொடர்புகொண்டவர்கள். தமிழக, ஈழ நிகழ்த்து கலை ஆய்வுகளில் இக்குழு இடம் பெற்றுள்ளது. ஆனால், முழுக் கூத்து ஒன்றை இரண்டு மணிநேரம் மேடையேற்றும் முயற்சி பல்கலைக்கழகத்தில், தேசிய நாடகப் பள்ளி பயிற்சிகளில் மட்டுமே இதுவரை நடைபெற்றுள்ளது. சூரியா குழு குருகுலம் போல் புரிசையில் தங்கி இருந்து, இரு வார காலத்தில் பெண் அலையை மேடையேற்றியது வியக்க வைத்தது.

சம்பந்தன் என்ற கலைஞனின் உன்னதமான அர்ப்பணிப்பும், படைப்பாளுமையும் சொல்லில் அடங்காது. மரபார்ந்த கூத்துக் கலையோடு நவீன நிகழ்த்து கலையின் பன்முகப் பரிச்சயம் கொண்ட அவர் தனது கலை சார் வெளிப்பாடு குறித்துக் கொண்டிருக்கும் உறுதியைப் புரிந்துகொள்ள இக்கூத்து உதவியது. பெண் அலை உருவாக்கத்தில் தொடக்கத்தில் இருந்து பங்கேற்றவள் என்ற வகையில் இப்புரிதல் என்னை நெகிழ வைத்தது.

திருமணத்தை ஏற்க மறுக்கும் இளவரசி புன்னை மரத்தில் தஞ்சம் அடைகிறாள். அவளைப் பின் தொடரும் இளவரசனும் இன்னொரு மரத்தில் ஏறிவிடுகிறான். தப்பிக்க, மரத்தை இன்னும் ஒரு முழம் வளரச் சொல்கிறாள் இளவரசி. இக்காட்சியை விசுப்பலகை மேல் ஒரு சிறு ஸ்டூல் மூலம் உருவாக்கியிருந்தார் சம்பந்தன். இன்னும் ஒரு முழம் வளரும் மரம் சற்று பெரிய ஸ்டூலில் அவள் ஏறுவதில் காட்டப்பட்டது. பெண் பாத்திரம் பலகை மீது ஏறுவது கூத்தில் வெகு அரிது. ஆண், பெண் இரு பாத்திரங்களும் மேலேறி நிற்கையில், பெண் இன்னும் ஒரு படி மேல் நிற்பது அரிதிலும் அரிது. நாட்டார் கலைகளின் எளிமை, நெகிழ்வுக் கூறுகள் பற்றி ஏட்டிலும், நிகழ்விலும் பார்த்தவருக்குக்கூட இக்காட்சி நிமிர்ந்து உட்கார வைப்பதாய் இருந்தது. அக்குழுவிற்குப் பயிற்சி அளிக்கையில் பார்த்த சம்பந்தன் என்ற கூத்து ஆசான் வணக்கத்திற்குரிய மாபெரும் கலைஞன்.

கர்நாடகா மாநிலத்தில் ஹெக்கோடு கிராமத்தில் நீநாசம் இயங்குவது போன்ற நிறுவன வசதிகள் புரிசைக்கு இல்லை. புஞ்ஞரசந்தாங்கல் கட்டை கூத்துப் பள்ளி போல் சிறுவர்களைப் பயிற்றுவிக்கும் திட்டமும் முழுமையாக இங்கில்லை. ஆனால், உலகளாவிய, நாடு தழுவிய கலைஞர்களையும், கலைகளையும் தொடர்ந்து கண்டுவரும் அனுபவம் புரிசையில் சாத்தியமாகியுள்ளது. அதனைத் தமிழகத்தின் அடையாளமாக காப்பது நம் கையில். புரிசையில் இவ்விழா தொடர்ந்து நடக்கவும், உண்மையான பொருளில் உலகளாவிய கலை வெளிப்பாட்டை வளர்க்கவும் உரிய ஆதரவு கொடுப்பது அரசு, பிற நிறுவனங்கள் கடமை. கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஐநூறுக்கும் மேற்பட்ட விருந்தினருக்கு உணவளிக்கும் விருந்தோம்பல் பண்புக்குத் தலை வணங்குவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்