காஷ்மீரில் 40 ஆண்டுக்கு பிறகு திரைப்பட படப்பிடிப்பு அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த 2 ஆண்டில் சுமார் 350 படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக உள்ளது.

காஷ்மீரில் முக்கிய ஹிந்தி திரைப்படங்கள் தவிர, பஞ்சாபி, உருது, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகின்றன. ‘ஹிஸ்ட்ரி டிவி18’-ல் ஒளிபரப்பாகும் பிரபலத் தொடர் ஒன்றும் (OMG! Yeh Mera India) காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமார் ஹிராணியின் ‘டன்கி’ படத்திற்காக நடிகர் ஷாருக் கான் கடந்த மாதம் காஷ்மீர் வந்தார். இப்படத்தில் அவர் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் பாடல் ஒன்று சோன்மார்க்கில் படமாக்கப்பட்டது. இதன் அருகில் தாஜிவாஸ் பனியாறுப் பகுதியில் படக்குழுவினர் ஓய்வு எடுத்தனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு புகழ்பெற்ற குல்மார்க் ஸ்கை ரிசார்ட்டுக்கு, முன்னணி நடிகர்கள் ரன்வீர் சிங், ஆலியா பட் உள்ளிட்டோருடன் இயக்குநர் கரண் ஜோஹர் வந்து படப்பிடிப்பு நடத்தினார்.

காஷ்மீரில் குல்மார்க், ஸ்ரீநகர், பஹல்காம், தூத்பத்ரி ஆகியவை படப்பிடிப்பு குழுவினருக்கு மிகவும் பிடித்தமான இடங்களாக உள்ளன. பிரபலமாகாத பிற இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த அரசு ஊக்குவித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் படப்பிடிப்பை ஊக்குவிப்பதற்காக இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான இடங்களை தேர்வு செய்துள்ளதாக சுற்றுலாத் துறை அண்மையில் கூறியது. ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஸ்ரீநகரில் நடைபெற உள்ளது. இதில் திரைப்பட சுற்றுலா தொடர்பான நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE