ஏற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை கோடை மலர் கண்காட்சி தொடக்கம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

By வி.சீனிவாசன்

சேலம்: ஏற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை 46-வது கோடை விழா மலர்க் கண்காட்சி துவங்கி, வரும் 28-ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழிலை கண்டு களிக்க தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 சகிமீ., மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஏற்காடு, 21 கொண்டை ஊசிகளை கொண்ட மலைப்பாதை நெடுகிலும் வின்னை தொடுமளவு மரங்கள், ஆங்காங்கே கொட்டும் அருவிகளாய் கண்ணுக்கு குளிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. அழகிய ஏரியும், படகு சவாரியும், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோயில், தலைச்சோலை என பார்வையாளர்களை கவரும் இடங்கள் அதிகம்.

நடப்பாண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு துவங்கி, வரும் 28-ம்தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. வருவாய்துறை, காவல் துறை, மருத்துவத் துறை, சுற்றுலா துறை, தோட்டக்கலை துறை, தீயணைப்புதுறை என அனைத்து துறை அதிகாரிகளின் தலைமையில் சுற்றுலா பயணிகள் வந்து, இயற்கை எழிலை கண்டு ரசித்து செல்ல தேவையான அடிப்படை வசதிகளையும், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு வசதிகளை செய்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்து வசதிகளை அதிகரிக்க தயார் நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.

நாளை மறுநாள் தொடக் உள்ள கோடைவிழாவை முன்னிட்டு ஏற்காடு மலைப்பாதையில் உள்ள தடுப்புச் சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகன நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்தை சீர்படுத்த கூடுதலான போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மலை பாதையை ஒருவழி பாதையாக மாற்றுவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் கோடைவிழா மலர் கண்காட்சியை கண்டுகளிக்க அனைத்து வசதிகளையும் செய்யப்பட்டுள்ளது.

கோடை விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ''ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கா.ராமச்சந்திரன், மா.மதிவேந்தன் தொடங்கி வைக்கின்றனர். ஏற்காடு கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீ உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னேஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட 5 லட்சம் அரிய வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்படவுள்ளது. மேலும் டாலியா, மேரி கோல்ட், ஜீனியா, டோரினியம், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் வண்ண மலர்களை கொண்ட 10 ஆயிரம் மலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மலர்க் கண்காட்சியில் மலைப்பகுதிகளில் விளையும் பல்வேறு பழங்களை கொண்டு பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் கோடை விழா மலர்க்கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ள நிலையில் மலர்க்கண்காட்சிக்கு தேவையான முன்னேற்பாடுகளை தோட்டக்கலைத்துறையினர் செய்து வருகின்றனர். அண்ணா பூங்காவில் நூற்றுக்கணக்கான பணியாளர்களை கொண்டு மலர்க்காட்சிக்கு தேவையான பணிகளை செய்து வருகின்றனர்.

40 சிறப்பு பேருந்துகள்: ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல ஏற்காட்டில் சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்கும் வகையில் சேர்வராயன் கோயில், லேடீஸ் சீட், ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு 3 சிறப்புப் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. கோடை விழாவையொட்டி ஏற்காடு மலைப் பாதையில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் மே 21 முதல் மே 28 ஆம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஏற்காடு செல்லும்போது கோரிமேடு, ஏற்காடு மலை அடிவாரம் வழியாக கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்தப் பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

அதேபோல ஏற்காடு சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு, குப்பனூர் வழியாக இறங்கி செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் இரவு நேரத்தில் மட்டும் ஏற்காடு வந்து செல்ல அனுமதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் அதிகளவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போதிய அளவில் வாகன நிறுத்த இடங்கள் ஏற்படுத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் கோடைவிழா மலர் கண்காட்சியைக் கண்டுகளிக்க போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE