சுற்றுலா ஸ்பெஷல்: கோடையைக் கொண்டாட ஊட்டி போகலாம் வாங்க! - எப்படி செல்லலாம், எங்கே தங்கலாம்?

By ஆர்.டி.சிவசங்கர்


இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் புகழ்பெற்றது உதகை. உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றது நகரமாக உதகை திகழ்கிறது. நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பச்சை நிற கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கும் புல்வெளிகள், வனப்பகுதிகள், எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள், நீர் வீழ்ச்சிகள், அணைகள் மற்றும் காய்கறி தோட்டங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இது தவிர உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் உள்ள பூங்காக்கள், உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி என எங்கு பார்த்தாலும் இயற்கை அழகுடன் காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

கோடை சீசன் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை நடக்கும். இந்த சமயத்தில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இவர்களை மகிழ்விப்பதற்காக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு கண்காட்சி மற்றும் போட்டிகள், கலை விழாக்கள் என மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் விழா கொண்டாடப்படுகிறது.

அரசு தாவரவியல் பூங்கா: உதகை அரசு தாவரவியல் பூங்கா அனைத்து சுற்றுலா பயணிகளையும் கவர்வதில் முதலிடம் வகிக்கிறது. இந்த பூங்கா கடந்த 1897-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டது. நூற்றாண்டு கடந்த இந்த பூங்காவில், பல வகை வண்ண மலர்கள் மட்டுமின்றி, 20 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரம், குரங்குகள் ஏறாத புஷ்சில் மரங்கள், இத்தாலி நாட்டில் உள்ளதைப் போன்ற பூங்கா, ஜப்பான் நாட்டில் உள்ளதைப் போன்ற மிதக்கும் பூங்காக்கள், ஆசிய கண்டத்தில் உள்ள பெரணி வகைகளை கொண்ட பெரணி இல்லம், அனைத்து வகை ஆர்கிட் மலர்களை கொண்ட கண்ணாடி மாளிகை என சுற்றுலா பயணிகளை வியப்பூட்டும் பல விஷயங்கள் உள்ளன.

ஆண்டு தோறும் மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி இங்கு நடத்தப்படுகிறது. இங்கு இன்று நடத்தப்படும் மலர் கண்காட்சியில் பல லட்சம் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். இப்பூங்கா உதகை நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சுற்றுப் பேருந்து, நகரப் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் செல்லலாம்.

உதகைக்கு எப்படி செல்லலாம், எங்கே தங்கலாம்..? - சென்னை, மதுரை, திருச்சி உட்பட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ரயில்கள் மூலம் கோவைக்கும் அல்லது நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் மேட்டுப்பாளையத்துக்கும் வரலாம். அங்கிருந்து மலை ரயில் மூலம் குன்னூர் மற்றும் உதகைக்கு செல்லலாம். மேலும் கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து உதகைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் கோடை காலத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்துகளை இயக்குகிறது. குறிப்பாக கோவையில் இருந்து உதகைக்கு அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து உதகைக்கு 88 கி.மீ., மட்டுமே. மேட்டுப்பாளையத்தில் இருந்து 54 கி.மீ., தூரமும், ஈரோட்டில் இருந்து உதகைக்கு 135 கி.மீ., தூரம் மட்டுமே உள்ளது.

உதகை வந்த பின் தங்களது வசதிக்கேற்ப தனியார் வாகனங்களின் மூலமாகவோ அல்லது சர்க்கியூட் பேருந்து எனப்படும் சுழற்சி முறையில் குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களை சுற்றி வரும் அரசுப் பேருந்திலோ சென்று சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கலாம். தனியார் வாகனங்களில் வருபவர்கள் சுற்றுலா வழிகாட்டி மூலம் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கலாம்.

தங்கும் வசதி: உதகை மற்றும் குன்னூர் பகுதியில் ஏராளமான லாட்ஜ், ஹோட்டல்கள், காட்டேஜ்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.15 ஆயிரம் வரை ஒரு அறைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், தங்களது வசதிக்கேற்ப அறைகளை எடுத்துக் கொண்டு தங்கலாம். ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்களிலேயே சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்க்கவும் வாகன வசதி செய்து தரப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டு அனைத்து சுற்றுலா தலங்களையும் காண்பிக்கும் பேக்கேஜ் டூர் முறையும் உள்ளது.

உணவு வகைகள்: உதகையை பொறுத்தவரை அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும். சைனீஸ், பஞ்சாபி, வட இந்திய, தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்கும். நட்சத்திர ஹோட்டல்களில் அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும். சாதாரணமாக இந்த வகை உணவுக்காக பிரத்யேக உணவகங்கள் உள்ளன. இவற்றுக்கு சென்று சுற்றுலா பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை ருசிக்கலாம். சைனீஸ் உணவுக்காக புகழ் பெற்ற ‘ஷின்க்ஹவுஸ்’ உள்ளது. இது சீன தம்பதிகளால் நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

3 days ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

5 days ago

சுற்றுலா

8 days ago

சுற்றுலா

8 days ago

சுற்றுலா

11 days ago

சுற்றுலா

11 days ago

சுற்றுலா

20 days ago

சுற்றுலா

21 days ago

சுற்றுலா

30 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

மேலும்