உதகை சுற்றுலா: காட்சி முனைகளும், நீர்வீழ்ச்சிகளும்!

By செய்திப்பிரிவு

மேற்குத்தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடமும், நாட்டின் உயர்ந்த சிகரமுமான தொட்டபெட்டா, கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 623 மீட்டர் உயரம் கொண்டது. இங்கிருந்து நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களை காண முடியும்.

குறிப்பாக, சூரியன் மேற்கில் மறைவதை காண இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். உதகையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் தொட்டபெட்டா சிகரம் அமைந்துள்ளது. தனியார் கார்கள், சுற்றுப் பேருந்துகளில் சென்று காண முடியும்.

கோத்தகிரி அருகே கோடநாடு காட்சி முனை உள்ளது. கோத்தகிரியில் இருந்து 20.கி.மீ. தூரம் பயணித்தால் கோடநாடு காட்சி முனையை அடையலாம். இங்கிருந்து தெங்குமரஹாடா, பவானி அணை மற்றும் ரங்கசாமி மலைகளை காணலாம். இதேபோல, கூடலூர் அருகே ஊசிமலை காட்சி முனை, தவளை மலை காட்சி முனைகளை கூடலூரில் இருந்து உதகை செல்லும் வழியில் 10 கி.மீ.-ம், உதகையில் இருந்து கூடலூர் செல்லும் வழியில் 40 கி.மீ.-ம் பயணித்தால் காணலாம்.

குன்னூர் அருகே டால்பின் நோஸ் காட்சி முனை, லேம்ஸ் ராக் காட்சி முனை ஆகியவற்றை, குன்னூரில் இருந்து தனியார் வாகனங்கள் மற்றும் அரசு சுற்றுப் பேருந்துகள் மூலமாக சென்று பார்க்கலாம்.

உதகையை அடுத்த பைக்காரா அணையிலும் படகு சவாரி மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் நடுவே உள்ள இந்த அணையில் சீறி பாய்ந்து செல்லும் படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உதகையில் இருந்து 22 கி.மீ. தொலையில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி அமைந்துள்ளன.

இதுதவிர, உதகை - மைசூரு சாலையில் 13 கி.மீ. தொலைவில் கல்லட்டி நீர்வீழ்ச்சி, குன்னூரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் லாஸ் நீர்வீழ்ச்சி, குன்னூர் - குந்தா செல்லும் சாலையில் காட்டேரி நீர் வீழ்ச்சி, உதகை - கூடலூர் செல்லும் வழித்தடத்தில் பைக்காரா நீர் வீழ்ச்சி, கோத்தகிரி - மேட்டுப்பாளையம் செல்லும் வழித்தடத்தில் கேத்ரின் நீர்விழ்ச்சி, மாயார் நீர் வீழ்ச்சிகள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை கவர்கின்றன.

மேலும், மசினகுடி பகுதியிலுள்ள தனியார் வாகனங்களில் சென்று, முதுமலையின் இயற்கை அழகையும், வன விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE