உதகை ரயில் நிலைய பூங்கா சீரமைப்பு: சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

உதகை: உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக, ரயில் நிலையம் முன் சுமார் ஓர் ஏக்கர் பரப்பில் தெற்கு ரயில்வே நிர்வாகம்சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு வந்ததால், மலர் கண்காட்சியை ஒட்டி தோட்டக்கலைத் துறை சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் பல முறை சுழற்கோப்பைகளை வென்றுள்ளது.

இந்நிலையில், 2018-ம் ஆண்டுக்கு பின்னர் பூங்கா பராமரிப்பின்றி விடப்பட்டது. மேலும், அங்கு ரயில்வே கேன்டீன் அமைத்து பூங்காவை அகற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு பாரம்பரிய நீராவி அறக்கட்டளை ரத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து, தெற்கு ரயில்வே நிர்வாகிக்கு மனு அளித்தது. இதனால், பூங்காவை அகற்றி கேன்டீன் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உதகை ரயில் நிலைய பூங்கா சீரமைக்கப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு, நீரூற்றுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பூங்கா மற்றும் ரயில் நிலைய சுவர்களில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள், ஐ லவ் உதகை என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள ரயில்வே இன்ஜின், பழங்கால டிக்கெட் டேட்டிங் இயந்திரம், கடிகாரம் உள்ளிட்ட இடங்களில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

அதே நேரம் பூங்காவுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. எனவே, உதகை ரயில் நிலைய பூங்காவுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE