மே 21-ம் தேதி வரை சென்னை விழா நீட்டிப்பு: தமிழக சுற்றுலாத் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விழா மே 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.

சென்னை தீவுத்திடலில் தமிழகசுற்றுலாத் துறை சார்பில் சென்னைவிழா எனப்படும் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழா ஏப்ரல் 28-ம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சென்னை விழாவில்,

அவர்கள் உற்பத்தி செய்த துணி வகைகள், பட்டுச் சேலைகள், கோ – ஆப் டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் ஆகியவை 70 அரங்கங்களில் இடம் பெற்றுள்ளன. மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் 75 அரங்கங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப் பொருட்கள் 30 அரங்கங்களிலும், 20 வெளி மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்கங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு உணவு வகைகள் கொண்ட அரங்குகள் என மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள் மற்றும் ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள், துணிப்பைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை விழா தினமும் காலை 11 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஏராளமானோர் சென்னை விழாவில் பங்கேற்று, அரங்கங்களைப் பார்வையிட்டு வருகின்றனர். இந்த விழா மே 14-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 21-ம் தேதி வரை நீட்டித்து தமிழக சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE