‘காணத்தக்க கிருஷ்ணகிரி’ திட்டத்தில் மயிலாடும்பாறைக்கு நாளை சுற்றுலா

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: 'காணத்தக்க கிருஷ்ணகிரி' விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தின் கீழ் மயிலாடும்பாறைக்கு நாளை (6-ம் தேதி) சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள், கலாச்சார பெருமையுள்ள இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அறிந்து கொள்ளவும், அவற்றைப் பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்பில், 'காணத்தக்க கிருஷ்ணகிரி' விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குச் சுற்றுலா மேற்கொள்ளப்படும். இதில், பொதுமக்களும் கலந்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட் டத்தின் தொன்மையின் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் நாளை (6-ம் தேதி) காலை 6.30 மணிக்கு தொகரப்பள்ளி நடுகற்கள், ஐகுந்தம் வணிகக் குழு கல்வெட்டு, பாறை ஓவியங்கள், மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி உள்ளிட்ட இடங்களுக்குச் சுற்றுலா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஆட்சியர், அரசுத் துறை உயர் அலுவலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE