கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் க்யூஆர் கோடு மூலம் பூக்களை பற்றிய தகவல்களை அறிய வசதி

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்படும் பிரையன்ட் பூங்காவில் முதன் முறையாக ‘க்யூஆர் கோடு’ மூலம் பூக்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் நகரின் மையப் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பிரையன்ட் பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் குலுங்குவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதை பார்த்து ரசிக்க விடுமுறை நாட்களில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இம்மாதம் நடக்கவுள்ள 60-வது மலர் கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில் கடந்த நவம்பர் முதல் மலர்ச் செடிகள் நடவு செய்யும் பணி நடந்தது. சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம், கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டேலியா, நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் உட்பட 15 வகையான 1 லட்சம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

கோடை சீசனையும், சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்கும் விதமாக தற்போது அந்த மலர்ச் செடிகள் பூக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் முதன் முறையாக அந்த பூக்களைப் பற்றிய தகவல்களை அறிய வசதியாக, ஒவ்வொரு பூக்களின் பெயர் பலகையிலும் ‘க்யூஆர் கோடு’ ஒட்டப்பட்டுள்ளது. அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, பூவின் தாவர இனம், தாவரவியல் பெயர், தோன்றிய நாடு, குடும்பம் மற்றும் குணம் போன்ற முழு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

இது குறித்து தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறியதாவது: கோடை சீசனை முன்னிட்டு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். பிரையன்ட் பூங்கா வருவோர் இங்கு பூத்துக்குலுங்கும் பூக்களை பார்த்து ரசிப்பது மட்டுமின்றி, அந்த பூக்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வசதியாக ‘க்யூஆர் கோடு’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை, ஸ்கேன் செய்து முழு விவரங்களையும் பெறலாம். இது சுற்றுலாப் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE